காலடிப்பேட்டை மார்கெட்,  திருவொற்றியூர்

காலடிப்பேட்டை மார்கெட்,  திருவொற்றியூர்.

உண்மையில் அது ஒரு கனா காலம். 1979, ஒன்பதாவது கோடை விடுமுறை. ஊரில் இருந்து அத்தை மகன்கள் மணி, நெடுஞ்செழியன் இருவரும் சென்னைக்கு வந்து விடுவார்கள். அப்புறம் என்ன, எனக்கு ஒரே கொண்டாட்டம் தான். காய்கறி, பலசரக்கு, நாங்கள் மூவரும் சென்று தான் விடுமுறை முழுவதும் வாங்கி வருவோம்.
காலடிப்பேட்டை மார்கெட், அது அழகே தனி.
மிக நீண்ட மார்கெட். ஏறகுறைய எல்லா காய்கறி வகைகள், பழ வகைகள், வீட்டு சமையலுக்கு தேவையான எல்லா புரொவிஷன் ஐட்டமும் கிடைக்கும் இடம். அதுவும் ஞாயிற்றுகிழமை என்றால் கடைகள் நிறைய காணப்படும். கூட்டம் ஜெ,ஜெ என காணப்படும். காந்தி சிலை தொடங்கி, திருவொற்றியூர் மெயின் ரோடு வரை காய்கறி, பழ கடைகள். மிக பெரிய நிரந்திர புரொவிஷன் கடைகள். மெயின் ரோடு தாண்டி மீன் மார்க்கெட். ஆட்டுகறி கடை. இப்படி காலடிப்பேட்டை மார்கெட் கலைகட்டும். நிறைய சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட, அன்று பறித்த பச்சை பசேல் காய்கறிகள், கீரை வகைகள் என ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைய பார்க்கலாம்.

மூன்று பேரும், நான், மணி, நெடுஞ்செழியன் ஆமை என மெதுவாக நடந்து, முதலில், காலடிப்பேட்டை மார்கெட் போகும் முன், ஓடியன்மணி தியேட்டர் வாசலில்,  மூன்று கிளி மூக்கு மாங்காய் வாங்கி, அதை பூ போல கத்தியால் நறுக்கி, அதனுள் மிளகாய் பொடி, உப்பு நன்கு தடவி, அப்படியே ஒவ்வொரு மாங்காய் பத்தையாய் கடித்து,நக்கி, சுவைத்து சாப்பிடுவோம். இப்போது அதை நினைத்தால் நாக்கில் எச்சில் ஊருது. அப்படி ஒரு சுவை. அந்த காலம் உண்மையில் பொற்காலம். ஏதோ எங்களுக்கு தெரிந்த காய்கறி வாங்குவோம். மணி, நன்றாக பேரம் பேசுவான். புரொவிஷன், எங்கள் வீட்டுக்கு மாத கடன் கொடுக்கும் வியாபாரிகள் சங்கம் ( கடையின் பெயர்) வாங்கி கொண்டு, வீட்டுக்கு திரும்பி வரும் போது, பாயம்மா, சோடா கடையில் ஒரு பிரேக். மூன்று பேரும் கோலா சோடா, ஐஸ் போட்டு கேட்போம். ஒரு பெரிய கண்ணாடி டம்பளர் வழிய,  வழிய பாயம்மா தருவார்கள். மத்திய உச்சி வெயிலுக்கு, அது தேவாமிர்தம். காசு இருந்தால் இன்னொரு கோலா சோடா கூட வாங்கி பருகுவோம். காலடிப்பேட்டை மார்கெட் வரும் முக்கால் வாசிப்பேர் பாயம்மா கலர் சோடா குடிக்காமல் வீட்டுக்கு செல்ல மாட்டார்கள். காரணம் விலை மிக குறைவு, சுவை அதிகம். அவர் பேசுவது இன்று நினைத்தாலும், அப்படி ஒரு சாந்தம். கிட்டத்தட்ட காலடிப்பேட்டை மார்கெட் சமாச்சாரம் முடித்து, வீடு அருகே அடையும் சமயம், எப்படியும் ஒரு கிளி மூக்கு மாங்காய் வாங்க காசு தேறிவிடும் ( எல்லாம் மணி பேரத்தின் சாமார்தியம்) நானும், நெடுஞ்செழியனும், கொஞ்சம் நிற்க, மணி ஓடி சென்று ஒரு கிளி மூக்கு மாங்காய் பத்தை போட்டு ,அதில் மிளகாய் பொடி ,உப்பு தடவி , அந்த மாங்காய்யை மூன்றாக பிரித்து, ரசித்து, ருசித்து சாப்பிடுவோம். அந்த நாட்கள் இனி வராது.
தாகம் எடுத்தால், ரோட்டோரம் இருக்கும் நகராட்சி பம்பில், தண்ணீர் தாராளமாக பருகலாம். அப்போது, எல்லோர் இடமும் காசு குறைவு, ஆனால் நிறைவான வாழ்க்கை. சந்தோஷம், மகிழ்ச்சி காணப்பட்டது . இப்போதும் காலடிப்பேட்டை மார்கெட் இருக்கிறது. ஆனால் அந்த வியாபாரிகள், வாடிக்கையாளர் உறவு தற்போது  சுத்தமாக இல்லை. அது ஒரு கனா காலம்.

- பாலு. 

எழுதியவர் : பாலு (29-Jun-20, 4:41 pm)
சேர்த்தது : balu
பார்வை : 62

மேலே