எங்கே இருந்தான் சிவன்

ஸ்ரீரங்கத்தார்கள் சிவனைக் குறித்துக் கேலி பேச நினைத்தனர். புதிதாகச் சிவமதத்தைச் சார்ந்தவரான காள மேகத்தை நோக்கி,'திருமால் உலகத்தைக் கவளமாக உண்டபோது, உங்கள் சிவன் எங்கே இருந்தார்? எனக் கேட்டனர். அப்போது காளமேகம் சொன்னது இது.

நேரிசை வெண்பா

அருந்தினான் அண்டமெலாம் அன்றுமால் ஈசன்
இருந்தபடி யேதென் றியம்பிற் - பொருந்தி
பருவ(ங்)களம் யானைகொளப் பாகனதன் மீதே
இருந்தபடி ஈசனிருந் தான். 141

- கவி காளமேகம்

பொருளுரை:

"திருமால் அந்நாளிலே உலகம் முழுவதையுமே விழுங்கினான். அப்பொழுது ஈசன் இருந்தபடி எவ்வாறு?" என்று சொல்வதானால், யானையானது பெரிதான கவளத்தை எடுத்து உட்கொள்ளுகிறபோது, அதனை இயக்கும் பாகன் அதன் மீதிலே இருந்த நிலையைப் போலச் சிவபெருமானும் திருமாலின் மேலாகவே வீற்றிருந்தனன் என்று அறிக. அண்டம் - உலகம்; உலகத்து வடிவைக் குறித்தது. ஈசன் - சிவபெருமான். பொருந்தி - மனம் விரும்பி, கவளம் - சோற்றுத் திரளை. திருமாலை யானையாகவும், சிவபிரானை அவனைச் செலுத்தும் பாகனாகவும் கூறினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-20, 10:58 am)
பார்வை : 16

மேலே