என் அண்ணன்

என் அண்ணன்...
(Dr.V.கலை வாணன்)

”மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்”

இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் உங்கள் கண்கள் கசிந்தால்... பாசம் சுமக்கும் அண்ணன் உள்ள பாக்கியசாலி நீங்கள் .... ஆம் ! நானும் அந்தவகையில் மாபெரும் பாக்கியசாலி.... ஈரேழு உலகமும் அண்ணனின் பாசத்திற்கு ஈடாகாது....

பிறந்தது முதல் இன்றுவரை என்னை தங்கத் தட்டில் வைத்துத் தாங்குபவன்...
அன்பு செலுத்துவதில் முரட்டு பீமன்...
தவறை தட்டிக் கேட்பதில் நக்கீரன் .....
பரம எதிரிக்குக் கூட இரங்கி உதவிக் கரம் நீட்டுபவன்....
கை விரல்களை நீட்டி கட்டளை இட்டு பேசுவது அவன் இயல்பு....
இழுதையில் எதிர்போரையும் அடிபணிய வைக்கும் அவன் அன்பு....
எதிலும் துணிந்து முதலாய் நிற்பது அவன் பண்பு....
அனைத்தும் அறிந்த என்சைக்ளோபீடியா ....எந்தக் கலையையும் எளிதில் கற்றுத் திறம்பட செய்திடுவான்
ஒருகனம் குன்றேறி கோபத்தில் குதித்தாலும்..
மறுகனம் பாசத்தில் குளிர்ந்த நீரோடையாய் பாய்வான் .....

சிறு வயதில் என்னை ‘பாப்பா’ என்று தான் அழைப்பானாம்.... அம்மா சொல்லக் கேள்வி... ஆனால் எனக்கு நினைவில் இல்லை.....
கலைவாணன் தங்கை என்றாலே பள்ளியில் எல்லோருக்கும் டெரர்தான்..... அதிர்ந்து என்னிடம் பேசினாலே, அடுத்தநொடி அவர்களுக்கு தர்ம அடி நிச்சயம்.....
சிறு சுமையைக் கூட நான் சுமப்பதை தாங்கா மிருதுவான இதயம் கொண்டவன்...என் இதயத்தை சேதாரம் இன்றிக் காக்கும் பெரிகார்டியம் ...

பொங்கல் தீபாவளி பண்டிகை நாட்களில் ... முதலில் என்னை எழுப்புவதுதான் ,அவன் பிரதானவேலை....
“அமுதா! சீக்கிரம் எழுந்து குளிச்சி புது டிரஸ்ஸப்போடு... கால்ல கொலுசப்போடு.... உன் கொலுசு சத்தம் கேட்டாதான், வீட்ல பண்டிகை மாதிரி இருக்கும்” உண்மையில் இப்போது நினைத்தால் கூட என் கண்கள் கசிந்துவிடும்....
ஒருமுறை பொங்கலுக்கு ஆஸ்துமாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.... எங்கள் வீட்டில் பொங்கலே கொண்டாடவில்லை.... ஆனால் எனக்கு தைக்கக் கொடுத்திருந்த பட்டுப் பாவாடையை வாங்கி வந்துவிட்டு, அன்று முழுதும் அழுது கொண்டிருந்தானாம்.... நான் மருத்துவமனையிலிருந்து வந்தப் பின்பே பொங்கலிடப்பட்டது... அன்று என் அண்ணனின் ஆனந்தம் அளப்பரியது....

அரிஸ்டாட்டிலின்
அரசியல்
சாணக்கியரின் அரத்தசாஸ்த்திரம்
மராட்டிய வீரன் சிவாஜி
நெப்போலியன் நெல்சன் ஜெங்கிஸ் கானின் வீர வரலாறுகள்
புராணங்கள் இதிகாசங்கள் அனைத்தும் படித்து... அதன் சாராம்சம்தை எனக்கு எடுத்துரைப்பான்.....
பள்ளி நாட்களில் நான் கவிதைப் போட்டிகளில் வாங்கிய முதல் பரிசுகளுக்கு சொந்தக்காரன் அவனே....

“தன் கையே தனக்குதவி
தங்கையே எனக்குதவி” இதுதான் அவன் என்னை ஏவல் செய்ய பயன்படுத்தும் தாரக மந்திரம்....

சிறு வயதில் அடிக்கடி அவனுக்கும் எனக்கும் பிணக்குகள் வரும்... அதற்கு மூலகாரணம் நானாகவே இருந்தாலும்... இறுதியில் எப்போதும் எனக்குவிட்டுக் கொடுப்பான்.....அவன் கோலி விளையாடி ஒரு பிளாஸ்டிக் ஸ்டவ்வை வென்று... அதை பதுக்கி வைத்திருந்தான் .... அவன் இல்லாத நேரம் அவன் பதுக்கி வைத்ததை பீராய்ந்துத் தேடி , எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, மீதியை என் தந்தையின் பார்வைக்கும் கொண்டு செல்வதே என் பிரதானவேலை......அன்றும் வழக்கம் போல் தேடி பிடித்து அந்த பிளாஸ்டிக் ஸ்டவ்வை எடுத்து என் தோழியுடன் அதில் ஒரு சிறு மண்பானையை வைத்து அரிசி நீருடன் உலை வைத்தேன் ... ஸ்டவ் பற்றி எரிந்து உருதெரியாமல் போனது..... அப்படியே அதை இருந்த இடத்தில் வைத்துவிட்டேன்.... வந்து பார்த்தவன்... என்வேலைதான் என்பதை ஐயமின்றி அறிந்து.... என்னை இலேசாக அறைந்தான் .... ஆனால் நானோ இரவு என் தந்தை வரும்வரை ஒப்பாரி வைத்தேன்.... தந்தை வரும் காலடி ஓசை கேட்க.... நான் உச்சஸ்த்தாயில் அழ.... வாசலில் நின்றவன் ஓடிவந்து , அமுதா அழாத இந்தா என்னவெனா நாலடி அடிச்சிக்கோ என்று தன் உடம்பை கிட்ட வந்துக் காட்டி கெஞ்சினான்.....இப்போது நினைத்தாலும் என் நெஞ்சம் நெகிழும்...

திருமணம் ஆனப்பின்பு, எனக்கு உடல் நிலை சரியென்றால்... என் கணவர் மருத்துவராக இருந்தாலும்.... என் அண்ணன் அருகில் வந்து அமுதா என்று குரல் கொடுத்தாலே போதும்.... எனக்கு பாதிநோய் தீர்ந்துவிடும்... பலமுறை ஆஸ்த்துமாவில் நடக்க இயலாது திணறும்போது.... குழந்தையைப் போல எனை சுமந்து செல்வான்......
இன்பமோ துன்பமோ.... முதலில் என் சகோதரர்களிடமே பகிர்ந்து கொள்வேன்....
அவன் வாழ்க்கையில் அத்தனை முக்கியத் தருணங்களிலும் எனக்கே முதலுரிமையும் முக்கியத்துவமும் கொடுப்பவன்.... மொதல என் தங்கச்சி வரட்டும் என்று காத்திருப்பான்.... துன்பம் என்றால் முதல் அழைப்பு எனக்குத்தான்.... என்னைப் பார்த்தவுடன் குழந்தைப்போல அழுவான் .... சிறுது நேரத்தில் தெளிந்துவிடுவான்....
“தான் பெறவேண்டும் பிள்ளை
தன்னோடு பிறக்க வேண்டும் பிறவி” என்பது என்றும் பொய்ப்பதில்லை....தாய் தந்தையர்க்குப் பின் எனை அன்பால் தாங்கி நிற்கும் தூண்கள் என் சகோதரர்கள்.... என் வாழ்வில் ஒவ்வொரு அடியிலும் முதல் முழுதான ஆசீர்வாதம் என் அண்ணனுடையதே........
என் அண்ணன் ஒரு அன்பின் ஆலயம்
அதில் என்றும் அணையா தீபமாய் நான்..

எழுதியவர் : வை.அமுதா (30-Jun-20, 11:04 am)
Tanglish : en annan
பார்வை : 335

மேலே