நிலவில் கண்ணீரோ
பச்சை புல்வெளியை பட்டாடையாய்த் தரித்து
மலைச் சிகரங்களை ஆபரணமாய் அணிந்து
அழகாய் சிரித்தாள் புவி மங்கை
அதில் மயங்கிச் சரிந்தான் நிலா வேந்தன்
அழகுக்கு அழகு சேர்க்க
அவாவும் வந்தது அவனுக்கு ,
நீல வண்ணச்சேலை தைத்தான்
அதில் அழகாய் மேகப்பூக்கள் வைத்தான்
சின்னச்சின்ன நட்சத்திர முத்துக்கள் கொண்டு
சிறப்பு சேர்த்தான் ஆடைக்கு ....
ஓடி வந்தான் சேலையோடு
அவளைப் பார்த்து
ஆடிப்போனான் அடியோடு .......
"ஓ....என்ன ஆயிற்று இவளுக்கு
ஏன் இவள் அணுகுண்டாய் இருமுகிறாள்
இவள் துருவக் கண்களில் ஏன் இந்தக் கண்ணீர்?
இவள் மூச்சுக்காற்றும் அனலாய்க் கொதிப்பதேனோ ?"
துடித்துப்போனான் மதியழகன்
அருகில் சென்று அன்பே என்றான்
அவளோ தண்ணீர் என்றாள்
தேடிப்பார்த்தான் தூயநீரை ....
ஓடிக்கொண்டிருந்ததோ சாய நீரே ...
குடிக்கக் கொடுத்தான் அதையும்
பிளாஸ்டிக் பைகளால்...
தொண்டையை அடைத்தது ...
திணறிப் போனாள் குடித்து முடிக்க
அன்புக்குரியவளை மரணம் ஆட்டிப்படைப்பதைத்
தாங்க முடியாமல் அழுதான்
அவன் ஆசையாய் தைத்த சேலையைத் தூக்கிஎறிந்தான்
நட்சத்திர முத்துக்கள் சிதறின
அவனது கனவுகளைப் போலவே
தன்னவளைப் பார்க்கவும் முடியாமல் ,
பிரியவும் முடியாமல்
தேய்ந்து வளர்ந்து தேய்கிறான்
மனிதனே!!!
மருந்து தாராயோ
மங்கை பூமியின்
மரணம் மரணிக்க !