தமிழ்பாடித் தாலாட்டு

காரிகையே கண்மணியே
தாரகையே தண்ணொளியே
பேரெழிலே பெண்ணரசே
பூவிழியே புதுமலரே
ஆரமுதே அருட்சுடரே
பால்நிலவே பைங்கிளியே
மாமழையே மலர்வனமே
தீங்கனியே தடக்கொடியே
தாழிசையே தவப்பயனே
நேரிசையே நிறைகனியே
ஏழிசையே எழில்நலமே
ஊழ்வினையே உறுபயனே
ஊனுருக்கும் உயர்மொழியே
தேன்கலந்து தான்சுவைக்க
நான்கலந்து நிதங்களிக்க
தேன்தமிழே தெளிசுனையே
வான்தமிழே வளர்கலையே
ஊன்தமிழே உயிர்நிலையே!!
பண்போடு பரவிவந்து
கண்ணோடு கலந்துநின்று
பெண்ணாக பிறந்துவந்து
தடம்பார்த்து நடக்கின்றாய்!!
உன்னெழில் நலம்காண
உற்றசுவை தினம்பேண
என்புருக இசைமீட்டி
அன்புருக நீயிருக்கும
இடம்பார்த்து நடக்கின்றேன்!!
முற்றும் முழுதுணர்ந்த
கற்றோர்தம் கடைவாசல்
நிற்கும் திறனற்றேன்
விற்போரும் மற்போரும்
எப்போரும் அறிந்திலேன்
அறிந்தவர் சபையேகி
சொற்போரும் புரிந்திலேன்!!
என்நிலை எண்ணியே
நின்னை சரணடைந்தேன்!!
சொல்வன்மை தந்தெனக்கு
வல்லமை வார்த்துகந்து
அன்பொழுக பாலூட்டு
தமிழ்பாடித் தாலாட்டு!!

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (9-Jul-20, 12:11 am)
பார்வை : 51

மேலே