இயற்கையின் வகுப்பறை

இயற்கையின் வகுப்பறை

விடியலை எழுப்பிவிடும்
சேவலும்!

சிதறாத கோணங்களில்
சிறகசைக்கும்
குருகின் குழாமும்!

காலங் கருதிக் காத்திருக்கும்
விருட்சம் சுமந்த
விதைகளும்!

பூமிக்குள் புதைத்து
சேமிக்கத் தெரிந்த
சிறு புல்லும்!


சிறு பருக்கையிலும்
இனம் கூட்டித்
தட்டுச் சேவை நடத்தும்
காகமும்!

காவலர் இன்றிச்
சாரையாய் ஊறக்
கற்றுக் கொண்ட
எறும்புகளும்!

நிழலுக்கும்
முள் பரப்பிக்
காவலிருக்கும்
முள் மரங்களும்!

வைக்கோல் கன்றையும்
நக்கி உயிர்பித்துப்
பால் சொரியும்
பசுக்களும்!

அல்லும் பகலும்
அலுவல்களால்
அலுப்பு நீக்கும்
தேனிக்களும்!

கணக்கிலாது
கொட்டிய துளிகளால்
கரைந்து போகும் மேகமும்!

இயற்கையின் வகுப்பறையில்
ஆசான்களாய் என்றும்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (13-Jul-20, 5:39 pm)
பார்வை : 82

மேலே