அன்புடன் இருந்து பார்
கவிதை
அன்புடன் இருந்து பார்!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
நீ
உலகை சுற்றி
அன்புடன் இருந்து பார் !
உன் இருவிழிகளில்
மின்னல் தோன்றும்
மகிழ்ச்சி பொங்கும்
நிலாவின் குளுமை தெரியும் !
ஆனந்தத்தின்
அடிமுடி தெரியும்!
அன்பின்
ஆழம் காண்பாய்!
அடிதடிகளை
ஒழிக்கச் சொல்லும் !
பகைவனும் உனக்கு
பகவான் ஆவான்!
உன்
நிழல் பட்டாலே
பூமியும் குளிரும் !
உலகின் கைகள்
தொழுது நிற்கும் !
உலகை சுற்றி
அன்புடன் இருந்து பார் !
**
ஆர்ப்பரிக்கும்
கடல் அலைகள்
உன் பாதம் தொட்டு
அமைதி காணும்!
உன்னிடத்தில்
அமைதி காண்பாய்!
கொதித்து எழுபவனிடம்
கோபம் கொள்பவனிடம்
குணம் காண்பாய் !
அன்பு வந்து விட்டால்
அகிலமும் உன் வசம்!
உலகை சுற்றி
அன்புடன் இருந்து பார்!
** **
தூசிகூட உன்னை
ஏசாது எரிச்சல் படாமல்
வணங்கி செல்லும்!
காக்கை குருவி
மரம் செடிகொடிகள்
எங்கள் சாதி
நினைக்க சொல்லும் !
அழகிய கண்கள்
அடிக்கடி கண்ணீர் வடிக்கும்
இனிக்கும் உப்பு கரிக்காது
உனக்காக அல்ல
உலக மக்களுக்காக.
ஆர்ப்பரிக்கும்
மக்கள் கூட்டத்தில்
உன் குரல் தனியே
மென்மையாக ஒலிக்கும்!
புத்தன் ஏசு காந்தி
யார் என்று
பார்க்காமலே
உணர்ந்து கொள்வாய்!
கோபத் தீயை
நீ
அணைக்காமலே
அணையும் தணியும்!
முதுமையும் செயலில்
இளமையை பின் தொடரும்
இளமைக்குள் அடங்கும்!
உலகை சுற்றி
அன்புடன் இருந்து பார் !
**
நறுமணப் புகையில்
கலந்து கரைந்து
போக முடியுமா ?
அன்பு மொழிக்கு
அர்த்தம் தெரியுமா ?
உன்னையே நீ
அறிந்தது உண்டா?
சிரிக்கும் கண்கள்
சிறகடித்து பறக்க முடியுமா?
அமெரிக்காவில் இருந்து
அருகே இருப்பதுபோல்
உணர்ந்தது உண்டா?
உலகை சுற்றி
அன்புடன் இருந்து பார்!
**
வாடிய பயிரைக் கண்டபோது
வாடியது உண்டா மனம்
பசித்தோர் முகம் கண்டு
உள்ளம் துடிக்கிறதா?
கடிக்கும் பாம்பை
அடிக்காமல் கருணையுடன்
காண முடிகிறதா?
இயலாமல் இருந்து
ஏழையின்
துயர் கண்டு
துடிக்கிறதா உள்ளம்?
உலகை சுற்றி
அன்புடன் இருந்து பார்!
**
உலகம் உன்னை
தூற்றினாலும்
போற்றினாலும்
கலங்காமல்
இருக்க முடியுமா?
வேதனை சோதனைகள்
விட்டு விடாமல்
துரத்தி வந்தாலும்
துவண்டு விடாமல்
இருக்க முடியுமா?
வரலாறு படிக்க
தெரியா விட்டாலும்
வரலாறு படைக்க
உன்னால் முடியுமா ?
உலகை சுற்றி
அன்புடன் இருந்து பார் !
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்,
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்.