புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 24---
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௪
231. அரசியலில் எதை முதலீடு செய்கிறாரோ?.
அதை இரண்டு மடங்காய் உயர்த்தவே உழைப்பார்.
232. ஒரு அரசு அரசாகச் செயல்படாமல்
அதிகாரத்தில் இருக்கும் கட்சியாகச் செயல்பட்டால்
கிடைக்க வேண்டிய நன்மை கிடைக்காமலே போகும்.
233. எதிர்த்துப் பேசுவதே குற்றம் என்று கூறினால்
அங்கு அதிகார தீயில் நீதி செத்துக் கொண்டிருப்பதாய் அர்த்தம்.
234. எந்த இடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்
எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்.
235. நிகழ்காலத்தைச் சரியாக வழிநடத்தாமல்
எதிர்காலத்தைக் கட்டமைப்பது கடினம்.
236. நேர்மையை விற்றவரிடம்
நீதியை விலை கொடுத்தே வாங்கும் நிலை ஏற்படும்.
237. மதத்தின் பெயரால் எழுதப்படும் சட்டம்
மனிதர்களைப் பிரித்தே வைக்கும்.
238. எழுத்துப் பிழையால் பாட்டின் பொருள் கெடுவது போல்
சட்டப் பிழையால் நாட்டின் நிலைமை கெட்டுவிடும்.
239. என் மரணத்தில் எனக்குக் கிடைத்த மிகப்பெரும் சொந்தக்காரர்கள் ஈக்கள்
இப்படிக்கு ஒரு பிச்சைக்காரன்.
240. அவனுக்காக அவனே அமைதி வழியில் போராடும் போது
தானாக எந்த ஆயுதமும் எடுக்கவே மாட்டான்.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..