வாடி மலர்ந்த பூ

உன் இனிமைக் குரலில்
காகத்தை கரைந்து அழைத்து,
காக்கை கூட்டில் பொறித்த தன் குஞ்சு
கூவ மறந்ததாய்க்
குயிலினங்களை குழப்புகிறாய்

அம்மா என்று
நீ என்னை அழைப்பதால்
நம் வீட்டு பசுவுக்கும்
கொஞ்சம்
பொறாமை தான் என்மேல்..

நீ தத்தித் தத்தி நடப்பது கண்டு
நடந்து பழகும் சிட்டுக்கள்..
உன் மிச்ச சோறு அமிர்த மென்று
காத்திருக்கும் நாய் குட்டிகள்..

நீ அழுது முடித்து சிரிக்கையிலே
வாடிமலர்ந்த பூ கண்டதாய்
குசலம் பேசும் பூஞ்செடிகள்..

உன் வயிற்றுக்கு
பால் வார்த்த நெஞ்சுக்கு
பால் வார்க்கும்
தூக்கத்தில் நீ சிரிக்கும் சிரிப்பு..

எழுதியவர் : துகள் (17-Jul-20, 12:57 pm)
சேர்த்தது : துகள்
Tanglish : vaadi malarntha poo
பார்வை : 5090

மேலே