புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 30---
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௩௦
291. ஆட்சியாளரின் கையில் அதிகாரிகள் ஆயுதமாக இருப்பது
அநீதியின் உயர்வுக்கு ஆரம்பத்தைத் தரும்
நீதியின் உயிருக்கு ஆபத்தைத் தரும்.
292. ஊர் சொல்லி விட்டதால் உன்னை மாற்றிக் கொள்ளாதே
உனக்குச் சரியென்று பட்டால் உன்னை மாற்றிக்கொள்.
293. ஏதோ?ஒன்றுக்காக
முட்டாள் பேசிக் கொண்டிருப்பான்
புத்திசாலி செயல்பட்டுக் கொண்டிருப்பான்.
294. நீ சொல்லும் வார்த்தைகள் கானல் நீரா? கையில் நீரா?
உன் செயல்களே அதற்கான அதிகாரத்தைத் தந்துவிடும்.
295. ஒரு இனத்தையோ? ஒரு கூட்டத்தையோ? கலைப்பதற்கு
அதிகாரம் என்ற ஆயுதம் பயன்படாத நேரத்தில்
பிரிவினை என்ற ஆயுதத்தைக் கையில் எடுப்பான்
அடிமையாக்கி ஆள நினைப்பவன்.
296. நீ பயத்தை விதைக்கும் இடத்தில் எல்லாம் வெறுப்பையும் அறுவடை செய்வாய்.
297. உலகம் என்ற பெரும் நிலத்தினில் விதைக்கப்படும் கருத்துகள்
விளைநெல்லா? களைபுல்லா?
காலம் என்ற உழவனால் கவனிக்கப்பட்டுக் களை எடுக்கப்படுகிறது.
298. நிலங்களில் இருக்கும் பள்ளங்களைச் சமன் செய்திடலாம்
மனிதர்களின் உள்ளங்களைச் சமன் செய்யவே முடியாது.
299. பழத்தின் ஒரு பக்கம் தான் அழுகி இருக்கிறது என்று விட்டு விட்டால்
மற்றொரு பக்கமும் அழுகியே தீரும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் அதே நிலைதான்.
300. நீ அடைய நினைக்கும் இலக்குத் தூரத்தில் இருந்தாலும்
அதற்கான நம்பிக்கையும் முயற்சியும் உனக்குள் தான் இருக்கிறது
இரண்டையும் இழந்தால் இலக்குத் தொலைவிலேயே இருந்துவிடும்.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..