எங்கிருந்து வந்தாய் நீ
ஓ எண்ணமே! எங்கிருந்து வந்தாய் நீ
யார்யார்க்கு நீ சொந்தம்
ஆதி மனிதனின் சிந்தையில் உதித்த நீ
கரு மாறி உரு மாறி எந்தையிலும் வந்தாயோ
சின்னஞ்சிறு அலையாய் உள்ளூர எழுந்த நீ
சீற்றங்கள் சில கண்டு சீர் பெற்று வந்தாயோ
செவி வழி செய்தியாய் சில காலம் திரிந்த நீ
மாற்றங்கள் பல கண்டு மனம் மாறி வந்தாயோ
சிற்பியின் உளிபட்டு கல்வெட்டில் பதிந்த நீ
எழுத்தாணி முள் பட்டு ஏட்டினில் அமர்ந்தாயோ
கைவிரல் நுனிப்பட்டு கணினியில் நுழைந்த நீ
கண்மூடி திறக்கும்முன் கண்டத்தை கடந்தாயோ
ஓ எண்ணமே! எங்கிருந்து வந்தாய் நீ
யார்யார்க்கு நீ சொந்தம்
அருவமாய் வந்த நீ பல்லுருவம் பெற்று
பரிமாணத்தால் பலமாற்றம் கண்டுவிட்டாய்
பாமரனின் உள்நின்று படிப்பாளியாக்கிவிட்டு
விஞ்ஞானமாகி விண்ணையும் தொட்டுவிட்டாய்
ஏற்றதாழ்வெல்லாம் ஏறெடுத்து பார்த்துவிட்டு
வேற்றுமையெல்லாம் வெறுமையாக்கிவிட்டாய்
எங்கிருந்து வந்தாயென்று மூலம் யாமறியோம்
வாழும் உயிர்க்கெல்லாம் என்றென்றும் நீர் சொந்தம்