புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 35---
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௩௫
341. தன் சுயநலத்திற்காக ஒன்றை உயர்த்திப் பிடிக்கும் போது
அதுவே அதன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறது.
342. பொதுநலம் கொண்டவன் தன் சேவைக்காக சமூகத்தில் பயணம் செய்வான்
சுயநலம் கொண்டவன் தன் தேவைக்காக சமூகத்தில் பயணம் செய்வான்.
343. கூடி வாழும் போது கவலைகள் இருந்தும் வாழ்க்கை நிறைவாக இருக்கும்
தனித்து வாழும் போது மகிழ்ச்சி இருந்தும் வாழ்க்கை குறைவாக இருக்கும்.
344. ஒன்றை இழக்கும் போதே கவனமாய் இருந்துகொள் இல்லை என்றால்
ஒவ்வொன்றையும் இழந்து தனித்து இருக்க நேரிடும்.
345. உன் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வைக்காவிடில்
அது உன்னைத் தவறுகள் செய்யக் கட்டாயப்படுத்தும்.
346. பறவைகளைப் போல் பறந்து செல்ல ஆசைப்படுவதை விட
பறவைகளைப் போல் பகிர்ந்து வாழ ஆசைப்படு
இதே உலகம் நாளையும் இருக்கும்.
347. ஏன் இந்த வாழ்க்கை என்று சிந்திக்கத் தொடங்கினால் வாழ்வதற்கான வழி கிடைக்கும்
என்ன இந்த வாழ்க்கை என்று சிந்திக்கத் தொடங்கினால் வீழ்வதற்கான குழியே கிடைக்கும்.
348. தன் இயலாமை கொடுக்கின்ற துன்பங்களை விட
உலகில் வேறெதுவும் பெரிதாகவே இருக்காது.
349. பிறந்த இடத்தின் குணத்தையும் வளரும் இடத்தின் குணத்தையும்
தன்னை அறியாமல் தனக்குள் எடுத்துக் கொள்ளும் மரம்போல்
மனிதனும் எடுத்துக் கொள்கிறான்.
350. மனிதன் இன்ப துன்பங்களைச் சொல்லி சொல்லி
அடுத்தவரின் அனுதாபத்தைப் பெற நினைப்பான்.
...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..