ஒரு ஏழையின் புலம்பல்

தினம் தினம் கொத்து
கொத்தாய்க் கொல்லும்,
ஈனப் பிறப்பெடுத்த
சீனத்து நுண்ணுயிரியே,

மாறாத பிணியிலும் சரி,
குறையாத பசியிலும் சரி,
அஞ்சோமெனும் நெஞ்சுக்கு
பஞ்சமில்லை என் நாட்டில்.

கொரோனா, பார் என்
பரந்த பாரதத்தை?
நின்னை விஞ்சும் 'பசி' வைரஸ்
நிறைய உண்டு இங்கே.

குடல் காய்ந்தது.
உடல் ஓய்ந்தது.
உடல் அடக்கிய இந்த ஊரடங்கு
உயிர் அடங்கும் முன் முடியுமா?
உயிர்க்கும் நொடிதான் விடியுமா?

நெருங்கி நீ வந்துவிட்டால்,
வருந்தி உன்னால் சாவேன்.
இரங்கி நீ விட்டு விட்டால்,
சுருங்கும் வயிரால் சாவேன்.

மரணத்தின் காரணம் தெரிந்து
விட்டால்,
கண் மூடும் கணத்தில், கனக்காது
என் நெஞ்சு.

சந்தேகம் ஒன்றுதான்.
சாகப்போவது,
தொற்றும் கிருமியாலா?
வற்றும் வயிறினிலா?

ஆனாலும் ஒரு நம்பிக்கை.
இன்றல்ல.
என்றுமே தனித்துதான்
இருக்கின்றேன்.
செல்வந்தர் எனை
சேர்ப்பதில்லை.
செருக்குடையோர் எனை
விரும்பவில்லை.
அறிவுடையோர் எனை
அறியவில்லை.
மற்றோர் மதிக்காத எனக்கு,
பற்றாது நிச்சயம் கொரோனா.

ச.தீபன்
நங்கநல்லூர்
94435 51706.

எழுதியவர் : தீபன் (26-Jul-20, 11:55 am)
சேர்த்தது : Deepan
பார்வை : 192

மேலே