எண்ணத்தை மாற்றாதே

மாறுபடும் எண்ணங்களால்
மாற்றங்கள் நிகழ்கிறது
மனங்களில் !

வேறுபடும் கருத்துக்களால்
வேற்றுமை உருவாகிறது
மண்ணில் !

அலைபாயும் நெஞ்சில்
வழியுமளவு தேங்குகிறது
ஏக்கங்கள் !

குன்றிய உள்ளத்தில்தான்
குன்றுகளாய் குவிகிறது
குறைகள் !

உள்ளத்தில் வைத்திடு
கீழோர் மேலோரில்லை
பிறப்பினில் !

பண்படும் இதயத்தில்
புண்படும் சொற்கள்
பிறக்காது !

வஞ்சகர் நெஞ்சில்
வன்மம் சுனாமியாய்
சீறியெழும் !

பகுத்தறிந்து வகுத்திடு
பயனுறும் வகையில்
கொள்கைகளை !

சேவற் இனமல்லநாம்
கேளிக்கைக்குப் போரிட
உணர்ந்திடு !

தூண்டி விடுபவர்கள்
தூரம்நின்று ரசித்திடுவர்
புரிந்திடு !

தமிழ் இனத்திற்கென
தனிப்பெருமை உண்டு
மறவாதே !

கட்சிகளால் பிரிந்தாலும்
காட்சிகள் வேறானாலும்
கவலையுறாதே !

நாளை நமதென
நம்பிக்கை வைத்திடு
தளராதே !

வண்ணத்தில் மயங்கி
எண்ணத்தை மாற்றாதே
வீழ்ந்திடுவாய் !

காசுக்காக நிலைமாறி
காலத்தும் மகிழ்ச்சியை
இழக்காதே !

தன்னலம் துறந்து
பொதுநலம் நினைத்து
வாழ்ந்திடு !

தலைமுறை தழைக்க
நடைமுறை வாழ்வை
நடத்திடு !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (31-Jul-20, 3:31 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 444

மேலே