தீர்ப்பெழுது
நறுங்குழலாள் நடையழகை
முயன்று முயன்று
தோகை மயிலும் தோற்று
தோற்றுப் போனது.
அழகுப் பதுமையின் மின்னழகு
காண, என்
இமைக் கதவுகள் இடையூறாய்
மூடி மூடித் திறக்கிறது
நுண்ணிய அவள் இடையழகை
எண்ணி எண்ணியே
வரைந்து வைத்த ஓவியம் போல்
உறைந்து போனேன்.
உருக்கும் அவள் அழகால், நான்
உள்ளுக்குள் கரைந்து போனேன்.
மதுமலர் மங்கையின் அழகால்
மனதுக்குள் மயங்கிக் கிடந்தேன்.
நித்திரை கெடுக்கும் ஒரு தேடல்,
நித்தமும் கண்ணில் நிற்பதால்,
உறங்க உறங்க உறக்கம் வராது.
மறக்க மறக்க மறந்தும் போகாது.
தேவதை நினைவு தேகமெல்லாம்
மேய்வதால்
தென்றல் கூட தேனீக்களின்
உருவெடுத்து
தினம் தினம் எனைக் கொட்டிப்
போகிறது.
விண்ணுலவும் வெண்ணிலவே,
மண்ணுலவும் பெண்போல, நீயும்
இரவின் நேரத்தை நீட்டுகிறாய்.
இருவரும் பெண்ணானதாலே
இயல்பாய் வந்த குணமா இது?
கனவிலும் எனை நீங்கி நிற்கிறாய்.
காத்து காத்து ஏங்க வைக்கிறாய்.
விண்ணில் தோன்றி கீழே,
மண்ணில் விழுந்த மின்னலே,
என்னுள் நுழைந்த உன்னைக்,
கண்ணில் வைத்துக் காப்பேன்.
எண்ணத்தை எழுதிவிட்டேன்
விண்ணப்பமாய்.
ஏற்றுக் கொள்வாயா என்னை
உன் புன்னகையால்?
இதயத்தின் ஓரத்தில் தீர்ப்பெழுது.
இருவரும் உயரத்தில் சிறகடிக்க.
ச.தீபன்.
நங்கநல்லூர்
94435 51706