இன்றைய சூழ்நிலை
தன் மகளுக்கு
சட்டப்படி இருபது
பேருடன் திருமணம்
செய்து வைத்த பெற்றோர்
உடன் பணி செய்தோர்
இல்லங்களை தேடி
வீடு வீடாய் சென்று
ஒரு வேளை உணவு
வழங்கினர்.
இவர்கள் கூட கல்யாண
மண்டபத்தில் வேலை
செய்பவர்கள்தான்..!
ஏழைகளின் வயிற்றில்
அடித்து எட்டி உதைத்த
சினிமா வில்லன்
ஓடி ஓடி உதவுகிறான்
எல்லோருக்கும்
அவன் ஒழிக
இவன் ஒழிக
கோஷமிட்டவனுக்கு கூட
முடிந்த வரை
ஊதியம் கொடுக்கிறான்
பணி இல்லாத நாட்களுக்கும்
இயற்கை கூட
உதவத்தான் செய்கிறது
இந்த நேரத்தில்
ஆடியில் மழை பெய்து
நீர் நிலையை நிரப்பி
பயிர் சாகுபடிக்கு
இயல்பு வாழ்க்கை தேடும் மனிதம்
தோளில் கை போட்டு
அணைத்து பேசிய
நண்பர் கூட்டம் சந்தேகமாய்
விலகி நின்று !
வீடு வரை வந்த
நட்பு, உறவுகளை
வா வென அழைக்க
முடியாமல்
வாசலோடு அனுப்பி விட
காய் கடையில்
பேரம் பேசி பொறுக்கி
பொறுக்கி எடுத்து செல்லும்
வீட்டு பெண்கள்
கடைக்காரர் அள்ளி தந்த
காய்கறிகளை தள்ளி நின்று
பைக்குள் வாங்கி சென்ற
அதிசயம்
எல்லாமே அடங்கி போய்
என்று கிடைக்கும்
இயற்கை சுதந்திரம் எங்களுக்கு