குடி இருந்த கோயில்
அம்மா!
நீ மீளாத் துயிலில்
விழுந்த இரவன்றோ
எழுப்பியது
எனக்குள் துயின்ற
கவிதைகளை!
கவிதையாய்
உனைப் படைத்திட்ட காலம்
உன் ஆயுள் வரிகளை
எழுதி இருக்கலாம் கூட்டி!
உன் தடங்களின் சுவடுகள்
வரைகின்றன
என் வாழ்வியல் பயணத்தின்
வரைபடங்களை!
என் மனக் கிழிசல்களை
தைக்கும் ஊசிகளாய்
தையலே !
உன் தியாகங்கள்!
உன் நினைவுகளின் ஓட்டத்தில்
இளைப்பாறி மூச்சுறுகின்றன்
என் உயிரணுக்கள்!
என் எண்ணங்கள்
உனக்குள் எழுப்பிய
மனக் கோட்டைகள் விரிசலுறாது
என்னை அகழ்ந்தாய்ந்து
என் அடையாளத்தைக் கண்டிடும்
முயற்சியில்
உன் வரலாற்றை
செப்பி நிற்கும் புதை நிலமாய் நான்!