அவளின் கடைசி நாட்கள்

என் மனைவிக்கு சில லைக்ஸ் அண்ட் சில டிஸ்லைக்ஸ் உண்டு. அவளுக்கு மிகவும் பிடித்தது ஜோசியம். அதை அவள் உயிருக்கு உயிராய் என்னிலும் மேலாக நேசித்தாள்.
என்ன காரணமோ, அவள் தன் வாழ்நாளில் கான்சர் ஆஸ்பத்திரிக்கு தன்னால் முடிந்த அளவு தானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். ஏனோ அவளுக்கு அல்லோபதி என்றாலே அலர்ஜி. சிறுகுழந்தைபோல ஊசிபோட்டுக்கொள்ள கூட பயப்படுவாள். கடந்த 50 ஆண்டுகளாக அல்லோபதி டாக்டரிடம் போகாமலே காலத்தைக்கடத்தி விட்டாள்.
*******
நாங்கள் லஸ் சர்ச் சாலையில் இருந்தபோது இடது புறக்கட்டிடம், ட்ரினிடி ஹாஸ்பிடல். வலது புறக் கட்டிடம் காவேரி ஹாஸ்பிடல். எதிர் புறம் 5 நிமிட நடை தூரத்தில் (தேவகி-) இப்போது மீனாட்சி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி. அதை அடுத்து இஸபெல் ஆஸ்பத்திரி. இது தவிர சுற்றிலும் பல பிரைவேட் நர்சிங் ஹோம்கள். உடம்புக்கு ஏதாவது வந்தால் நாமே நடந்தே போய் ஏதாவது ஒரு ஹாஸ்பிடல் பெட்டில் போய் படுத்துக்கொள்ளலாம். நோயாளிகளுக்கு அவ்வளவு வசதியான இடம்.
ஆனால் என் மனைவியின் ஆர்த்ரைடிஸ், நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளுக்கு கோயம்புத்தூரிலிருந்து பிரம்மானந்த சுவாமிகள் என்ற சித்த வைத்தியர் வரவேண்டி இருந்தது. அவர் சென்னை வரும்போது வீட்டுக்கு வந்து சிகிச்சை செய்வார். மற்ற நாட்களில் ஃபோனிலேயே மருத்துவம் பார்ப்பார். ஏனெனில் அவளுடைய
உடல்நிலை அவருக்கு அத்துபடி. இதற்கு இடையே அந்த சித்த மருத்துவர் காலமானார்.
அந்த இடத்துக்கு சென்னையில் இருந்த ஒரு ஆயுர்வேத மருத்துவர் வந்து சேர்ந்தார்.

இருந்தது முதல் மாடியில்தான் என்றாலும் என்மனைவியானால் அந்த ஒரு மாடியும் ஏற முடியாது. ஒரு அவசரம், ஆபத்து என்றால் அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச்செல்வது மிகவும் கடினமாயிற்று. எனவே நான இருந்த அந்த அபார்ட்மெண்டில் லிஃப்ட் வசதி .இல்லை என்ற ஒரே காரணத்தால், நாங்கள் திருவான்மியூரில் லிஃப்ட் இருக்கும் அபார்ட் மென்டில் குடி புக அவசியம் ஏற்பட்டது.
நீண்ட வருடங்களாக அவள் ஆயுர,வேத, சித்த மருத்துவம் செய்து கொண்டதால்,
வீட்டில் நிறைய ஆயுர்வேத, மற்றும் சித்த வைத்திய மருந்துகளும் தைலங்களும் இருந்து கொண்டே இருக்கும். சுருக்கமாக சொல்லப்போனால் எங்கள் வீடு ஒரு குட்டி ஆயுர்வேத, சித்த மருந்துக்கடையாகவே மாறி இருந்தது.

ஜனவரி 9ம்தேதி 2014
அன்று என்மனைவிக்கு வயிற்று வலி. உடனே குடும்ப ஆயுர்வேத டாக்டருக்கு ஃபோன் செய்தாள். அவர் ஊரில் இல்லை வர ஒரு வாரம் ஆகும் என்று தெரிந்தது. டாக்டர் ஊரில் இல்லையே. இப்போது இப்படி வந்து தொந்திரவு தரலாமா என்று அந்த வயிற்று வலிக்குத் தெரியவில்லை. அதற்காக அந்த டாக்டர் வரும் வரையில் வயிற்றைப் பிசைந்து கொண்டு அவஸ்தைப்பட இது என்ன அமெரிக்காவா?
அவள் பல ஆண்டுகளாக ஆயுர் மற்றும் சித்தா மருந்துகளை உட்கொண்டவள். ஆதலால் அவளே ஒரு அரை வைத்தியர் ஆகிவிட்டாள். என்னிடம் ஒரு ரசாயனத்தின் பெயரைச்சொல்லி ( மாதுளங்க ரசாயனம் என்று நினைக்கிறேன்) அது இங்கேதான் இருக்கும் என்று என்னைத் தேடச் சொன்னாள். தேடினேன் தேடினேன் வீடுமுழுவதும் தேடினேன். எல்லா மூலை முடுக்குகளிலும் தேடினேன். அவள் கேட்ட அந்த ரசாயனத்தைத் தவிர மற்ற எல்லா மருந்துகளும் கிடைத்தன. ( எப்போதுமே நாம் ஒரு பொருளைத்தேடும்போது அதைத்தவிர மற்றெல்லாம் கிடைப்பது சகஜந்தானே) எங்கு பார்த்தாலும் மருந்து, மருந்து, மருந்து,, மாத்திரைகளாய். பஸ்பங்களாய், சூரணங்களாய, தைலங்களாய்.
எனக்கு வெறுப்பேறியது. அவள் கேட்ட மருந்து எவ்வளவு தேடியும் கிடைக்காமல் சோர்வடைந்த நான் வந்த எரிச்சலில்
“வீடு பூராவும் கண்ட கண்ட இடங்களில் மருந்தை வைத்துவிட்டு வீட்டை ஒரு மருந்துக்கடையாகவே ஆக்கிவிட்டாய். எங்கே பார்த்தாலும் ஆயுர்வேதமருந்து இல்லை சித்த மருந்து. வீடா இது மருந்துக்கடையா? . ” என்று கோபமாக சொல்ல,
அவளுக்கு இருந்த அந்த வயிற்று வலியில்
“இனிமேல் எனக்கு எந்த ஆயுர்வேத, சித்த மருந்தும், எந்த எளவும் வேண்டாம். இனிமேல் நான் எதையும் சாப்பிடப்போவதில்லை. சந்தோஷம்தானே?” என்று ஒரு சபதம் போட்டவள் போல் கோபமாக கூறி வயிற்றைப் பிசைந்தபடி படுத்துக் கொண்டு விட்டாள். எனக்கு சுருக்கென்றது அவள்அப்போது பேசிய ஆவேசப்பேச்சு.

ஜனவரி10, 2014
சாயந்திரம் மறுபடியும் வலி அதிகமாயிற்று. இனி எந்த ஆயுர்வேத டாக்டருக்காகவும் காத்திருந்து பயனில்லை என்று அவளை அருகிலிருந்த ஒரு அல்லோபதி டாக்டரிடம் அழைத்துச்சென்றேன். அன்று இருந்த வலியில் அவள் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்!
டாக்டர் அவளை சோதித்து விட்டு
“இப்போதைக்கு மாத்திரை தருகிறேன். ஆனால் வயிற்றை ஸ்கேன் செய்யணும்” என்றார். அப்புறம் அவர்
“ நீங்கள் இருவரும் தனியாகத்தான் இருக்கிறீர்களா? என்று கேட்டார்.
நான் என் வழக்கப்படி “ இல்லையே. நாங்கள் இருவரும் சேர்ந்துதான் இருக்கிறோம்” என்றேன்.
டாக்டர்” நான் அதைக்கேட்கவில்லை. உங்கள் இருவர் கூட வேறு யாரும் இல்லையா? “ என்று கேட்டார்.”
“இல்லை” என்றேன் நான்.
“உங்கள் வயது என்ன? என்று என்னைப் பார்த்து டாக்டர் கேட்டார்.
“79 “ என்றேன்.
அவர்கள் வயது என்று என்மனைவியைப் பார்த்துக்கேட்டார்.
“72” என்றேன் நான்.
“ உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனரா” என்று கேட்டார் “
“ஆம். இருக்கின்றனர்.ஒரு பையன், ஒரு பெண்” என்றேன் நான்.
“அப்படியானால் அவர்கள் யாருடனாவது இருக்கவேண்டியதுதானே” என்றார்.
“பையன் இங்கிலாந்தில், பெண் அமெரிக்காவில்” என்றேன்.
“இருந்தால் என்ன? அவர்கள் யாருடனாவது இருக்க வேண்டியதுதானே” .என்றார் டாக்டர் மறுபடியும்.
“இவள் சென்னை மார்கழி குளிரையே தாங்க மாட்டாள். அப்படி இருக்கும்போது…?.” ..என்றேன்.
“ ரிடையர்மென்ட் ஹோமில் தங்கலாம் என்றால் கூடாது. எங்களுடன்தான்தங்க வேண்டும். உங்களை தனியாக ரிடையர்மென்ட் ஹோமிலோ, ஓல்ட் ஏஜ் ஹோமிலோ தங்க ஒப்புக் கொள்ள மாட்டேன் எனகிறான் எங்கள் பையன்” என்றேன்.
மேலும் அவனிடம்
“நாங்கள் இருவரும் உயிருடன் இருக்கும் வரையில் இப்படியே தனியாக இருந்து விடுகிறோம். யாராவது ஒருத்தர் போன பின் நீ சொல்வதைப் பற்றி யோசிப்போம்” என்று சொல்லிவிட்டேன்” என்று டாக்டரிடம் கூறினேன்.
ஆனால் டாக்டரோ “இந்த வயதில் தனியாக இருப்பது நல்லதல்ல. திடீரென்று ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டால் உங்களால் சமாளிக்க முடியாது” என்றார். என்ன இந்த டாக்டர் இப்படிப் பயமுறுத்துகிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்
“சரி உடனடியாக வயிற்றை ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.

அன்று அந்த நேரத்தில் அடையாறு சென்று டாக்டர் சொன்ன சென்டரில் ஸ்கேன் செய்யப்போனோம். அப்போதே மணி இரவு 10. ஸ்கேன் செய்து முடித்துவிட்டு ரிசல்டை நாளை காலையில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். சரி என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டோம். அன்று இரவு டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு முனகியபடியே படுக்கையில் படுத்தாள் என் மனைவி. .அன்று எனக்குத் தெரியாது என் வாழ்க்கையையே மாற்றப்போகும் நாள் என்று. .

ஜனவரி 11, 2014
மறுநாள் 10 மணிக்குமேல் அந்த சென்டருக்குப் போய் ரிசல்டை வாங்கிக்கொண்டு வந்தேன். ஆனால் டாக்டரை சாயந்திரம்தான் பார்க்க முடியும். அவர் பகல்நேரத்தில் வேறு ஒரு ஆஸ்பத்திரியில் வேலை செய்பவர். அவருக்கு ஃபோனில் விஷயத்தைச் சொன்னேன். அவர் சாயந்திரம் பார்ப்பதாகச்சொன்னார். ஆனால் வயிற்று வலி நிற்பதாகத்தெரியவில்லை.
அன்று காலை 10 மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஒரு யுகமாகக் கழிந்தது. என் வாழ்நாளிலேயே மிக மிக நீண்ட நாட்களில் அது ஒன்று. ஒருவழியாக மாலை 6 மணி ஆயிற்று. டாக்டரின் டிஸ்பென்சரியில் காத்திருந்தேன். டாக்டரும் வந்தார். ஸ்கேன் ரிப்போர்டைக் காண்பித்தேன். அதை ஏற இறங்க பார்த்து விட்டு, வருத்தத்துடன்,
“ சாரி. இந்த கேஸில் என்னால் செய்வதற்கு ஒன்றும் இல்லை. இது என்னுடைய ஏரியா இல்லை.. கான்சர் இருப்பதுபோல் தெரிகிறது.. இதற்கு உடனடியாக நீங்க ஒரு ஆங்காலஜிஸ்டு கிட்டே தான்போகணும்.” என்றார். கான்சர் என்றவுடனேயே பகீர் என்றது
இப்படி ஒரு காட்சி சினிமாவில் வரும்போது எப்படி ஒரு background ஒலி கொடுப்பார்களோ. அப்படிப்பட்ட ஒரு பயங்கர ஒலி, என் தலையில் இடிவிழுந்தாற்போல் இறங்கியது. நான் மயக்கம் போட்டு விழாத குறை.
“உங்களுக்குத் தெரிந்த ஆங்காலஜிஸ்ட் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார் டாக்டர்
“தெரியாது” என்றேன்.
சற்று யோசித்துப் பிறகு
“ இங்கே அருகிலே ஒருவர் இருக்கிறார். நான் அவருக்கு ஃபோன் செய்கிறேன். நீங்கள் அவரைப் போய்ப்பாருங்கள்” என்று . அந்த டாக்டருக்கு ஃபோன்செய்தார்
ஃபோன் செய்த பிறகு “நீங்கள் அந்த டாக்டரை 8 மணிக்குப்போய் பாருங்கள். அவர் உங்களுக்காகக்காத்திருப்பார்” என்றார்.
“என்ன டாக்டர், சீரியஸ் கேசா?” என்று கேட்டதற்கு
“நான் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. அந்த டாக்டரிடம் போய்க்காட்டுங்கள்” என்று கூறி எங்களை அனுப்பி விட்டார். .
அவளுக்கு வயிற்றில் வலி. எனக்கு வயிற்றில் இனந்தெரியாத கிலி, பயங்கர கலக்கம். ஆண்டவன் விட்ட வழி என்று இரவு எட்டு மணிக்கு அந்த ஸ்பொஷலிஸ்டை அணுகினோம். அவரும் ரிப்போர்டைப் பார்த்தார். எனக்கோ அடிவயிறு கலங்கியது. நா குழறியது. உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. டாக்டர் சொன்னார்
” கான்சர் 4th ஸ்டேஜ். ரொம்ப சீரியஸ். இன்டெஸ்டின் மற்றும் லீவர் முழுவதும் பரவி இருக்கிறது. உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும். உங்கள் கூட யாராவது இருக்கிறார்களா? மகன், மகள் இருந்தால் தெரிவிக்கவும்” . என்றார். “Chances are 50:50”. ஆபரேஷன் செய்யாவிட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.
“சரி. அப்படியானால் டாக்டர், ஆபரேஷன் செய்து விடுங்கள்” எனறு உடலின் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு தழுதழுத்த குரலில் சொன்னேன். வேறு வழி?
“உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய வேண்டும்” என்றார்
உடனே என்று சொன்னதனால் “என் மகனிடம் பேசிவிட்டி சொல்கிறேன்” என்றேன்.
என் மகனை ஃபோனில் காண்டாக்ட் செய்தேன். அவன் அப்பொழுதுதான் ஆஸ்திரேலியா ஏர் போர்டில் இறங்கி இருக்கிறான். நான் அவன் அம்மாவின் நிலைமையை எடுத்துச் சொன்னேன்.. அப்புறம் அவனை டாக்டரிம் நேராகவே பேசச்சொல்லி, டாக்டரிடம் அந்த ஃபோனைக்கொடுத்து அவனிடம் பேசச் சொன்னேன். டாக்டரும் அவனிடம் விஷயங்களை விவரமாகச்சொல்லி உடனே வரச்சொன்னார். “ நான் ஃப்ளைட் பிடித்து அங்கு நாளை காலை பத்து மணிக்கு வந்து விடுகிறேன். நீங்கள் ஆபரேஷன் செய்து விடுங்கள். எதற்காகவும் நீங்கள் காத்திருக்க வேண்டாம்” என்றான் அவன்..
அதேபோல் என்மகளிடமும் பேசச்சொல்லி ஃபோனில் அவள் நம்பரைப் போட்டுக்கொடுத்தேன். டாக்டர் அவளுடன் பேசி, அவளையும் உடனே புறப்பட்டு வரச்சொன்னார். டாக்டரிடமிருந்து ..ஃபோனை வாங்கி நான் என்மகளிடம் பேசினேன். அவள் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வருவதாகச்சொன்னாள்.

டாக்டர் என்மனைவியை உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வேண்டும் என்றார். அப்போது என்கூட உதவியாக இருந்தது என்மனைவியின் தங்கை.
. என்னுடன் அந்நேரத்தில் ஆஸ்பத்திரியில் என் மனைவியை அட்மிட் பண்ணத்தேவையான பணம் இல்லை. டாக்டரிடம் சொன்னேன். ஆனால் டாக்டர் “கவலைப்படாதீர்கள். நீங்கள் நாளைக்குக்கூட பணம் கட்டலாம் அதற்குள் ஆபரேஷன் செய்துவிடலாம் தாமதம் செய்ய வேண்டாம்” என்று எங்களுக்காக ஆஸ்பத்திரியில் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி அவளை ஒரு பெட்டில் படுக்க வைக்க ஏற்பாடு செய்தார். பிறகு அங்குள்ள மற்ற டாக்டர்களிடமும் பேசினார்.
நானும் என்மனைவியின் தங்கையும் வேளச்சேரியிலுள்ள அந்த பிரசாந்த் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். ஆஸ்பத்திரியை அடையும்போது மணி இரவு 12.

எனக்கு உலகமே இருண்டு விட்டது. என்னால் என்துக்கத்தை அடக்க முடியவில்லை. எனக்கு ஏற்கனவே பூஞ்சைமனசு. துக்கங்களைத் தாங்கிக்கொள்ளும் திராணி இல்லாதவன்.அப்படித்தான் அதுவரை நானும் நினைத்திருந்தேன். என்னை அறிந்தவர்களும் நினைத்து இருந்தார்கள்.
55 வருடம் சேர்ந்து வாழ்ந்தவர்கள் நாங்கள். எதிர்பாராது இப்படி ஒரு நிலையா? இதை என்னால் தாங்கிக்கொள்ள முடியுமா? தெரியவில்லை. இந்தப்பெரும் துயரத்தை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை. அந்தப் பயமே என் நெஞ்சை அழுத்தியது.

ஜனவரி 12, 2014
விடியும் நேரம். நர்ஸுகள் வந்தார்கள். அவளை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துப்போக தயார் செய்தார்கள். அவளை பலி பீடத்திற்கு அழைத்துச்செல்வது போல ஒரு பயங்கர உணர்ச்சி. அவளுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். உண்மையில் அவர்கள் எனக்குத்தான் நம்பிக்கை ஊட்டி இருக்க வேண்டும். என் மனைவி எந்த அதிர்ச்சியையுமோ, பயத்தையோ வெளிப்படுத்தவே இல்லை. அதற்குப் பதிலாக அவள் என்னைப்பார்த்து “பயப்படாதீர்கள். தைரியமாக இருங்கள்” என்றாள். இந்தக்கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்வது? அவள் எந்தத் தைரியத்தில் அவ்வாறு சொல்கிறாள் என்று எனக்குப்புரியவில்லை.

என்னை அந்த அறையிலேயே இருக்கச்சொன்னார்கள். 8 மணிக்கு ஆபரேஷன் ஆரம்பமாகும் என்றார்கள்.இது ஒரு மேஜர் ஆபரேஷன். முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றார்கள். ஆனாலும் தைரியமாக இருங்கள் என்றார்கள் என்னைப் பார்த்து.. அந்த ஒரு மணி நேரம், ஒரு யுகம்போல்கழிந்தது. இதற்கிடையில் சென்னையில் இருந்த என் தங்கையும் அவள் கணவரும் வந்து சேர்ந்தனர். மதுரையில் இருக்கும் மற்றொரு தங்கைக்கும் அவள் கணவருக்கும் ஃபோன்செய்து கண்களில் நீர்பெருக்கு எடுத்து ஓட , நாக்குழற செய்தியைச்சொன்னேன். நெய்வேலியில் இருந்த என்தம்பிக்கும் தகவல் தெரிவித்தேன்.

மணி பத்தரை. ஆபரேஷன் முடிந்து டாக்டர்கள் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அதில் ஒரு டாக்டர் என்னைப்பார்த்து “ கங்கிராசுலேஷன்” என்று என்னைப் பார்த்துச்சொல்ல நிம்மதிப் பெரு மூச்சு விட்டேன் அவர்” ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது. நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ( அவர்களுக்கே இந்த ஆபரேஷன் நல்ல படியாக முடியாமா என்பதில் சந்தேகம்) பேஷண்டின் பெருங்குடலின் 12 அங்குலத்தை வெட்டி நீக்கிவிட்டோம். அவர் இந்த ஆபரேஷனைத் தாங்கிவிட்டார். அதுவே ஒரு பெரிய விஷயம்” என்று அவ்வாறு வெட்டப்பட்ட குடலின் பகுதியை எங்களிடம் காண்பித்தார். அது பார்த்து மகிழ வேண்டிய காட்சியா என்ன?

“இவருக்குக்கான்சர் தோன்றி 4அல்லது 5 வருடங்கள் ஆகி இருக்க வேண்டுமே. எப்படி அந்த வலியை அத்தனை நாளும் இவர் பொறுத்திருந்தார்” என்று டாக்டர்கள் ஆச்சரியத்துடன் கேட்டனர்.
(அவள் அவ்வப்பொழுது வயிற்று வலி என்று சொல்வதுண்டு. உடனடியாக ஆயுர்வேத டாக்டரை அழைத்து ஏதோ ஒரு மருந்தை சாப்பிட்டு வந்தார். ஒருதரம் அந்த டாக்டர் அவர் வயிற்றை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றார். ஆனால் அப்போது அந்த லஸ் சர்ச் ரோடு வீட்டில் லிஃப்ட் இல்லாததால் அவள் வீட்டை விட்டு கீழே இறங்க முடியாமல், எந்த ஸ்கேன் சென்டருக்கும் போக முடியாமல், அந்த ஸ்கேன் செய்து கொள்ளவில்லை. பிறகு இந்த ஒரு காரணத்திற்காகத்தான் அந்த வீட்டை மாற்றி லிஃப்ட் இருக்கும் திருவான்மியூர் ஃப்ளாட்டுக்கு வந்தோம். இங்கு வந்த ஆறாவது மாதத்தில்தான் இந்த ஆபரேஷன் நடந்தது).

பிறகு” இப்போதைக்கு ஆபரேஷன் வெற்றிதான். . ஆனால் ஐந்து நாட்கள் நாங்கள்அப்சர்வ் செய்து பிறகுதான் பிழைப்பாரா இல்லையா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும் என்ற பேரிடியைத் தூக்கித் தலையில் போட்டார்.. அதற்கு டெக்னிகலாக ஏக விளக்கங்களைக் கொடுத்தார்

மணி 10:30க்கு மேல் ஆகிவிட்டது. என்மகன் வந்து சேர்ந்தான். அவனிடம் விளக்கமாகவும், விவரமாகவும் டாக்டர்கள் நடந்ததை எல்லாம் சொன்னார்கள். அப்போது டாக்டர்கள் சொன்னதை புரிந்து கொள்ளும் மனோநிலையில் நான் இல்லை. இன்னும் ஐந்து நாள் கெடு என்று சொல்லி விட்டு என்மனைவியை அவளுடைய பெட் ரூம் படுக்கையில் கிடத்தினார்கள். ஒரு ஊசி போட்டுக்கொள்ளப் பயந்தவள் உடம்பு முழுவதும் ஊசிகள் மயம். அவள் இத்தனைக்கும் அதிராமல் இருந்தது எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.
**********
ஜனவரி 13
என் மகள் அமெரிக்காவிலிருந்து வந்தாள். மேலும் எங்கள் குடும்பத்தைச்சேர்ந்த பலரும் வந்திருந்தனர். மதுரையிலிருந்தும், நெய்வேலியிலிருந்தும் வரவேண்டியவர்கள் அனைவரும் வந்து விட்டார்கள். என் மனைவி இப்போது அவ்வளவு அவஸ்தைகளிலும் தெளிவாக பேசியபடி இருந்தாள். நர்சுகள் வேளாவேளைக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை நேரந்தவறாது செய்து வந்தனர். பெரிய டாக்டர், குட்டி டாக்டர், வேறு சில நர்சுகள் என்று பலரும் வந்த வண்ணமும் போனவண்ணமும் இருந்தனர். ஆனால் அனைவரும், என்மனைவியின் தைரியத்தைப் பாராட்டினர். அவளுக்கு உற்சாக மூட்டும் வகையில் பேசினர். ஆனால் நானோ?
என்று டாக்டர் என் மனைவிக்குக்கான்சர் என்று சொன்னாரோ, அந்த நிமிடத்திலிருந்தே நான் எதற்கும் தயாராகிவிட்டேன். I was prepared for the worst. இனிமேல் அவள் வாழப்போவது சில மணி நேரங்களோ, ,நாட்களோ இல்லை வாரங்களோதான் என்று என் மனது கூறியது.. நடப்பது நடக்கட்டும் என்று துணிந்துவிட்டேன். என் துணிச்சலைக் கண்டு எனக்கே ஆச்சரியம் ஆகிவிட்டது. டாக்டர்கள் சொன்ன அந்த ஐந்து நாள் கெடுவும் முடிந்தது. பயந்தபடி எதுவும் ஏடாகூடமாக நடை பெறவில்லை. மேலும்சில டெஸ்டுகளை செய்துவிட்டு 7 வது நாள் அவளை வீட்டிற்குக் கூட்டிச்செல்லலாம் என்று கூறிவிட்டனர்


*******
.ஆனால் அவர்கள் சொன்ன ஒரு வார்த்தை “ அவர் மேஜர் ஆபரேஷனில் பிழைத்து எழுந்துவிட்டார். இனி வாழ்வது போனஸ் வாழ்க்கைதான்” என்று.
வீட்டிற்கு அழைத்துச்சென்றோம். ஒரு பகல் நேர நர்ஸ் ஒருவரையும், இரவு நேர நர்ஸ் ஒருவரையைம் நியமித்தோம். ஆனால் என் மனைவி கிட்டத்தட்ட அந்த மூன்று மாதங்கள் பட்ட கஷ்டங்களை எழுத்தில் வடிப்பது என்பது இயலாத காரியம். என்மகளும், மகனும் கொஞ்ச நாட்கள் தங்கி இருந்து விட்டுப் பிறகு அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டு விட்டனர். நான் தனியனாக விடப்பட்டேன்.
அவளைக் கவனிக்கும் முழுப் பொறுப்பும் இப்போது என்னுடையது. அதுமாத்திரமல்ல அந்த இரண்டு நர்சுகளையும் பரிபாலிப்பதும் என்வேலை. அவர்களுக்குக் காபி, பிரேக்பாஸ்ட், மதிய மற்றும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்வதும் என் பொறுப்பு. நான் காபி,டீ எதுவும் குடிப்பதில்லை. ஆனால் இப்போது அவர்களுக்கு இரண்டு வேளையும் காபி போட்டுக் கொடுப்பது என்வேலை ஆயிற்று.
என் மனைவிக்கு இயற்கை உபாதைகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடி இருந்தது. நான் அவ்வப்போது டாக்டருடன் போனில் தொடர்பு கொண்டு வாங்க வேண்டிய மருந்துகளை வாங்கி அவளுக்குக் கொடுத்து வந்தேன். நர்சுகள் முக்கியமாக என்மனைவி கூப்பிடும் நேரத்தில் அவள் அருகில் இல்லாமல் மாடி பால்கனியில் இருந்தபடி ரோட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டித்து நோயாளியின் அருகிலேயே இருக்கச்செய்வது பெரும்பாடாயிற்று. மூன்று அல்லது நான்கு நாளைக்கு ஒரு தரம் புதுப் புது நர்சுகள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு தரமும் நான் எதை எங்கே வைக்கவேண்டும், எப்படி வைக்கவேண்டும் என்பதைத் திரும்பத்திரும்பச் சொல்ல வேண்டியதாயிற்று. சில சமயம் வரும் நர்சுகள் என் மனைவியைத் தாங்கிப்பிடித்து அழைத்துச்செல்லக்கூட முடியாதவர்களாக உருவில் மிகச்சிறியவர்களாக இருந்தார்கள்.அவளையும் கவனித்துக்கொண்டு அங்கு வரும் நர்சுகள் சரியான நேரத்தில் .சரியான மருந்தை சரியான அளவில் முறைப்படி கொடுக்கிறார்களா என்ற பொறுப்பையும் கவனிக்க வேண்டி வந்தது. இவர்களால் நான் பட்ட அவஸ்தை ஒரு தனிக்கதை.

இந்நிலையில் ஒருநாள் என்னிடம் “ நீங்கள் ஒரு டிராயிங் போட்டுக் காட்டுங்கள்” என்று கேட்டாள் என் மனைவி. நான் என் 20-22 வயதில் டிராயிங் வரைவது உண்டு. அதற்குப்பிறகு நான் அந்தப்பக்கமே போனதில்லை. 60 ஆண்டுகளாக எனக்கு சித்திரத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது என்னை வரையச் சொல்கிறாயே . எப்படி என்னால் இந்த வயதில் வரைய முடியும்? என்று கேட்டேன். “ இல்லை. முயற்சி செய்யுங்கள்” என்றாள். எனக்கு நம்பிக்கை இல்லை. அவளுக்கு என்டிராயிங்குகள் ரொம்பப் பிடிக்கும். அதேபோல் என் ஆங்கில, மற்றும் தமிழ் எழுத்துக்கள் ரொம்பப்பிடிக்கும், அவள் கேட்டுக் கொண்டதால்தான் நான் Facebookல எழுத ஆரம்பித்தேன். அவளுக்கு ஜாதகத்தில் அசாத்திய நம்பிக்கை. எனக்கோ கிடையாது. அதில் அவளுக்கு மிகுந்த ஏமாற்றம். “நீ உன்வழியில் செல், நான் என்வழியில் செல்கிறேன்” என்று வாழ்ந்து வந்தேன்.

இருப்பினும் அன்று அவள் இருந்த அந்த நிலையிலும் என்னை ஆசையாக டிராயிங் வரையச் சொல்கிறாளே என்று ஒரு ‘டிசைன்’ ஒன்று வரைந்து அவளிடம் காட்டினேன். “ நன்றாக இருக்கிறது “ என்றாள். அவளை திருப்தி படுத்தியதில் எனக்கு திருப்தி.

ஆனால் மனதில் மட்டும் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. அவள் எந்த நேரத்தில் “இனி ஆயுர்வேத, சித்த மருந்துகளை சாப்பிடமாட்டேன் என்று சொன்னாளோ, அன்றிலிருந்து இன்று வரையில் அல்லோபதி, அல்லோபதி, அல்லோபதிதான்” . சித்த, ஆயுர்வேத மருந்துகளை சாப்பிட வேண்டிய தேவையே இல்லாது போய்விட்டது. ஒரு ஊசி போட்டுக்கொள்ளப் பயந்தவளுக்கு இன்று உடம்பு பூராவும் ஊசிகள் மயம். சாப்பாடு முதற்கொண்டு ஊசிமூலம் ஏற்றினார்கள்.
அதேபோல் அந்த டாக்டர் “இந்த வயதில் தனியாக இருக்கிறீர்களே. உடம்புக்கு ஏதாவது என்றால் என்ன செய்வீர்கள்?” என்று எந்த நேரத்தில் அந்த திருவான்மியூர் டாக்டர் கேட்டாரோ தெரியவில்லை, அந்த நேரத்திலிருந்து எங்களுக்கு இவ்வளவு பெரிய சோதனை.
வீட்டிற்கு வந்தபிறகுதான் அவளுக்கு வாய்வழி சாப்பாடு. சில மருந்துகளை இங்கும் ஊசி மூலம் நர்சுகள் அவள் உடலில் ஏற்றினார்கள். திடீர் திடீரென்று அவளுக்கு வயிற்றில் பயங்கர சிரமங்கள் ஏற்படும்போது அது எந்த நேரமாகவும் இருக்கலாம், நள்ளிரவாகவும் இருக்கலாம், நான் உடனே டாக்டரைக்கூப்பிட்டு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டு செய்ய வேண்டியதாயிற்று.
நடுவில் நடுவில் பிரசாந்த் ஹாஸ்பிடலுக்கு அவளை அழைத்துச்சென்று பல பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியதாயிற்று. ஆனால் உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே போயிற்று. வலிகள் அதிகரித்துக் கொண்டே போயின. அவ்வளவு மோசமான நிலைமையிலும் அவள் அழவில்லை. அது அவளைப்பார்க்க வருபவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஜாதகத்தில் அவளுக்கு அசாத்திய நம்பிக்கை இருந்த படியால், இந்த கண்டம் தாண்டினால் இன்னும் மூணு வருஷம் உயிரோடு இருப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தாள். சில பூஜைகளை ?...யசெய்யச்சொன்னள். எனக்கு பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவளைத்திருப்தி படுத்த அவற்றை மனமுவந்து செய்தேன்.
இந்த நேரத்தில் டாக்டர்கள் மைலாப்பூரில் இருக்கும் ஆங்காலஜிஸ்ட் ஒருவரை அவளுக்கு கீமோ தெரபிக்கான சிகிச்சையை ஆரம்பிக்க தொடர்பு கொள்ளச்சொன்னார்கள். அவரிடம் தொடர்பு கொண்டேன். அவரோ வாரம் ஒரு முறை ஒரு ஸ்பெஷல் இஞ்செக்‌ஷன்வ வீதம் 6 மாதம் போட வேண்டும். ( ஒரு இஞ்செக்‌ஷன் ஒரு லட்சம் ரூபாய்) அதற்கு நான் அவளை லஸ் சர்ச் ரோடிலிருக்கும் மீனாட்சி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திருக்குக் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்றார். என்னே விதியின் விளையாட்டு என்று நினைத்தேன்..
அதே தெருவில் அந்த ஆஸ்பத்திரிக்கு வெகு அருகாமையில்தான் சுமார் 32 வருடங்கள் இருந்து, 6 மாதத்திற்கு முன்புதான் திருவான்மியூரில் ஒரு புது ஃப்ளாட்டிற்குக் குடி போனதை நினைத்து சிரிப்பதா, அழுவதா என்று எனக்குத்தெரியவில்லை. வேறு வழி இல்லை . இப்போது வாராவாரம் அவளை திருவான்மியூரிலிருந்து இந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டியதாயிற்று..
சிறப்பு ஊசிகள் போடப்பட்டன. 5 வது வாரம் டாக்டர் அவளை செக் அப் செய்து விட்டு என்னைத் தனியாகக் கூப்பிட்டு “ எப்போது இந்த 5 இஞ்செக்‌ஷன்களில் சிறிது கூட முன்னேற்றம் ஏற்படவில்லையோ, இனி இஞ்செக்‌ஷன் போடுவது வீண். இனி இவர் பிழைப்பதற்கான் வாய்ப்பே இல்லை. இன்னும் கொஞ்சநாள்தான்” என்றார். எனக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை. என் மனது மறத்துப்போய்விட்டது. அவளுடைய முடிவை தைரியமாக எதிர்கொள்ளும் மனோ நிலை எனக்குள் ஏற்பட்டு விட்டது. டாக்டர் சொன்னதை மௌனமாகக் கேட்டுக் கொண்டேன்.

அதற்குள் என்மனைவி டாக்டரைக் கூப்பிட்டு “ டாக்டர் என்கிரக நிலைப்படி இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் கஷ்டத்தை அனுபவிப்பேன் ஆனால் செவ்வாய் இப்போது இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்தவுடன் நான் சரியாகிவிடுவேன். இந்த 72 வயதில் எனக்கு ஒரு கண்டம் இருக்கிறது. இதில் நான் தப்பிவிட்டால் நான் 75 வது வயது வரை உயிர் வாழ்வேன்” என்றாள். டாக்டர் சிரித்தபடியே “ அப்படியா? “ என்று கூறிவிட்டு
என்னிடம்” அவருக்கு இருக்கும் நம்பிக்கையை நீங்கள் கேலி செய்ய வேண்டாம். இந்த நம்பிக்கைதான் அவரை இத்தனை நாள் வாழ வைக்கிறது. அதுவே அவருக்கு ஒரு பலம். இந்நேரத்தில் அது மிகவும் தேவை “ என்றார்.
அவளுடைய அசாத்திய ஜோதிட நம்பிக்கையை பரிகசிப்பவன் நான். டாக்டர் சொன்னதைக் கேட்டவுடன் வாயடைத்துப்போனேன்.

மார்ச் 2014
கீமோ தெரபி ஃபெயிலியர் ஆன பிறகு அவள் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. உபாதைகளும் அதிகரித்தன.
ஆரம்ப நாட்களில் ஆண்டவனிடம் அவள் எப்படியாவது குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்தவன் இன்று “ ஆண்டவனே, அவள் படும் மரணாவஸ்தைகளை என்னால் பார்க்க முடியவில்லை. அவளை இந்த அவஸ்தைகளிலிருந்து விரைவில் விடுவித்து நீ அவளுக்கு மரணத்தின்மூலம் விடுதலையை அளி” என்று பிரார்த்திக்க ஆரம்பித்தேன். “
இப்படிப்பட்ட கொடுமை என் பரம விரோதிகளுக்குக்கூட வரக்கூடாது” என்று இறைஞ்சினேன்.
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நிலைமை மோசமாகவே மறுபடியும் அவளை பிரசாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி ஆயிற்று. இப்பொழுது அவளது உடம்பில் சொருகப்பட்ட பல குழாய்கள் மூலம் அவள் உயிர் வாழ ஆரம்பித்தாள். அவளை ICU வில் சேர்த்தனர், நான் அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையிலையே தங்கி காலை, மாலை, தினம் இருதரம் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் அவளைப் பார்த்துவிட்டு வருவேன்.

அதுவரையில் கண்ணீர் சிந்தாத அவள் அன்று என்னைப்பார்த்து “. எனக்கு என்னமோ செய்கிறது. இங்கே எல்லாம் தப்புத்தப்பாக நடக்கிறது. ஒன்றுமே சரியாக இல்லை. என்னை வீட்டிற்கே அழைத்துப் போய்விடுங்கள் “ என்று முதன்முறையாக அழுதபடி கெஞ்சினாள். நான் எதுவும் செய்ய முடியாத நிலை. வேறு வழியின்றி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு அவள் பேசுவது என் காதில் விழாதது போல் ICUவிலிருந்து நகர்ந்தேன். இன்றும் இந்தக் காட்சி அவ்வப்போது என்கண் முன் தோன்றி என்னை ஒரு குற்றவாளியாய் ஆக்குகிறது.

மறுநாள் டாக்டர் என்னைக்கூப்பிட்டார் உடனே உங்க பையனையும், பெண்ணையும் வரச்சொல்லுங்கள். இனி உங்கள் மனைவியின் உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் “ என்றார். “ “அவர்கள்வெளிநாட்டிலிருந்து வர தாமதம்ஆகலாம். அவர்கள் வரும்வரையில் அவளை எப்படியாவது உயிர் வாழச்செய்யுங்கள், டாக்டர்” என்று கெஞ்சினேன். இப்படி ஒரு கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது.
“நிலைமை எங்கள் கைகளை மீறிப்போய்விட்டது. இத்தனை நாள் அவர் இருந்ததே போனஸ். எங்களால் முடிந்தவரையில் அவருடைய உயிரை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ அவ்வளவையும் நாங்கள் செய்து வருகிறோம் இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்வதற்கில்லை. ஆண்டவனைப் பிராத்தியுங்கள்” என்றார் டாக்டர். இந்த மூன்று மாதங்களிலும் எனக்கு உபகாரமாக இருந்த என் உறவினர்களை என்னால் என்றென்றும் மறக்க முடியாது.

ஏப்ரல்11, 2014
டாக்டர் என்னிடம் வந்து “இறக்கும்போது உங்கள் மனைவி நிம்மதியாக இறக்க நான் ஒரு தனி அறையையே ICU வாக ஆக்கித் தருகிறேன். அவருக்குத் தேவைப்படும் உபகரணங்கள், கருவிகள் எல்லாவற்றையும் அதே அறையில் பொருத்தி அவருக்கான சிகிச்சை முழுவதும் அளிக்கிறோம். ஆனால் ICU மாதிரியினறி உங்கள் குடும்ப நெருங்கிய உறவினர்கள் அனைவரும் அந்த அறையில் அவரைச்சுற்றி அவர்பார்வையில் 24 மணி நேரமும் இருக்கலாம். ரெகுலர் ICU வில் அப்படி இருக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. இங்கு உங்கள் மக்கள் எந்த நேரமும் வரலாம், போகலாம், கூட இருக்கலாம் என்று கூறி ஒரு தனி அறையையே ICU வாக மாற்றிவிட்டார். அவர் இறக்கும் நேரத்தில் நீங்கள் எல்லாம் அருகில் இருப்பது அவருக்கு நிறைந்த மன நிம்மதியை அளிக்கும்” என்றார். உண்மைதான்.

நாங்கள் சுமார் 22 பேர் அவரைச்சுற்றிலுமாக நின்று கொண்டு அமைதி காத்தோம். அவளும் ஒவ்வொருவரையும் அடையாளங் கண்டுகொண்டாள். என்னைக்கூப்பிட்டு” வாசு - அதாவது எங்கள் மகன்- வந்துவிட்டானா? என்று கேட்டாள். இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவான் என்று கூறினேன். புவனா- எங்கள் மகள்-? என்று கேட்டாள். அவள் வர கொஞ்சம் தாமதமாகும் என்றேன். சிறிது நேரம் கழித்து வாசு வந்தான். அவனைப்பார்த்தவுடன் அவள் முகத்தில் ஒரு சந்தோஷம், திருப்தி. வாசுவுடன் கொஞ்ச நேரம் பேசினாள். பிறகு கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை புவனா வந்து விட்டாளா என்று கேட்டபடியே இருந்தாள். அவள் கடைசியாகப் பேசின பேச்சு அதுதான்.

சற்று நேரத்தில் நினைவிழந்தாள். Count down என்று சொல்வார்களே, அது ஆரம்பமாயிற்று. அவளுடைய BP குறைய ஆரம்பித்தது. நாடித்துடிப்பு குறைய ஆரம்பித்தது. Respiration rate எனப்படும் மூச்சின் வேகம் குறைய ஆரம்பித்தது. இரவு பூராவும் எல்லோரும் பார்க்க பார்க்க அவளின் ஒவ்வொரு உயிர் துடிப்புக்கான அறிகுறிகளும் ( parameters) குறைந்த வண்ணம் இருந்தன.

12 ஏப்ரல்.2014
விடியற்காலை. உயிர்த்துடிப்பு அடங்க அடங்க அங்கே பயங்கர அமைதி. 22 பேருக்கும்மேலாக இருக்கும் இடத்தில் நம்ப முடியாத மயான அமைதி. இன்னும் எங்கள் மகள் புவனா வரவில்லை. அவள் வருவதற்குள் இவள் உயிர் போய்விடுமோ என்ற பதட்டம். யாரால் என்ன செய்ய முடியும்?.
என்மகள் வரவேண்டுமே என்ற துடிப்பு ஒரு பக்கம். அதற்குள் இவள் உயிர் பிரிந்து விட்டால் என்ற பயங்கலந்த துக்கம்.
நான் என் வாழ்நாளிலேயே முதல் முதலாக இவ்வளவு அருகில் இருந்தபடி ஒருவரின் உயிர் பிரியும் போராட்டத்தைக் கண்டதில்லை.
என்தாயும், தந்தையும் இறந்த பிறகுதான் அவர்களின் உடலைப் பார்க்க முடிந்தது.
எனவே எப்படி இந்த ஜீவன் உடலை விட்டுப் போராடிப் போராடி கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிகிறது என்பதை வினாடிக்கு வினாடி கவனித்து வந்தேன். இதுவே எனது முதலும் கடைசியுமான அனுபவமாக இருக்கவேண்டும் என்று நம்புகிறேன். அவள் உயிர்ப்போராட்டத்தை ஒவ்வொரு வினாடியும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்திற்கெல்லாம் என்மகள் வந்து சேர்ந்தாள். ஆனால் என்மனைவி நினைவிழந்தவளாய் காலனுடன் போராடிக் கொண்டிருந்தாள். எனவே என் மகள் உயிருடன் போராடிக்கொண்டிருந்த தன் தாயைப் பார்த்தாளே ஒழிய அவளுடன் பேசமுடியவில்லை.

திடீரென்று என்மனைவியின் பல்ஸ்ரேட் ஏற ஆரம்பித்தது. மூச்சின்வேகம் அதிகரித்தது. உடனே எல்லோருக்கும் ஒரு நம்பிக்கை. அடடா, உயிர்துடிப்புக்கான அறிகுறிகள் நார்மல் நிலையை அடைந்து என்மனைவி பிழைத்து விடுவாளோ என்ற நம்பிக்கை. ஆனால் இந்த நம்பிக்கை கொஞ்ச நேரத்தில் தகர்ந்தது. மறுபடியும் எல்லாம் இறங்க ஆரம்பித்தது. அணையுமுன் தீபம் ஒளிவிட்டுப் பிரகாசிப்பது போன்ற நிகழ்ச்சி இது . மணி11 அவள் தலை ஒரு புறம் சாய்ந்தது. உயிர் அடங்கியது.
அருகிலிருந்த டாக்டர் “ சாரி” என்றர்.

அவளுக்கு ஆபரேஷன் ஜனவரி 12ம்தேதி. அவள் மறைந்தது ஏப்ரல் 12ம்தேதி.
சரியாக மூன்று மாத நரக வேதனையை அவள் அனுபவித்தாள்
அவளாக இருந்தவள், என்மனைவியாக இருந்தவள், குழந்தைகளின் தாயாக இருந்தவள், இப்போது சடலமாக “பாடி” யாக மாறினாள். நாங்கள் அங்கிருந்து நகர ஆரம்பித்தோம். மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களில் இறங்கலானோம்.
*********
அவள் இறந்தால் என்னால் ஒரு நிமிஷம் கூட உயிர் வாழ முடியாது என்று நினைத்து இருந்தேன். அவள் இறந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகப்போகின்றன. நான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அவள் நினைவில் எதையாவது எழுதிக்கொண்டும், சித்திரங்கள் வரைந்து கொண்டும் உயிர் வாழ்கிறேன். உயிர் போவது என்பதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதையும் இப்போது புரிந்து கொண்டேன்.

எழுதியவர் : ரா.குருசுவாமி (ராகு) (11-Aug-20, 7:03 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 165

மேலே