வாரணம் ஆயிரம்
வாரணம் ஆயிரம்!
நாட்டுக்கே
தன் நல் உயிரை
உயில் எழுதிப்
பிறந்தோரின்
செங்குருதி தோய்ந்த
தியாகத் தூரிகைகளின்
வரை காட்சியின் சாட்சியாய்
ஓர் நிறம்!
தூர்வாரிய மனங்களின்
வாய் மெய்கள் அமர்ந்து
சமாதானம் பேசிடும்
வெள்ளைத் திட்டெனவே
ஓர் நிறம்!
பசுமை தீட்டிய ஓவியங்களின்
தரை விரிப்பின் வனப்பில்
ஏர் பின்னது உலகமென
பாருக்கே பறை சாற்றி நிற்கும்
பாரதத்தாயின் நல் பசும் பட்டெனவே
ஓர் நிறம்!!
நாலாறு மணித் துளிகளாய்
நாளின் நாடி பிரித்து
நில்லாது
ஓடிடும் தர்மத்தின்
கால் எனவே
சுழல் சக்கரம்!
என
வாரணம் ஆயிரமாய்
வானாளாவிப் பறக்கும்
மூவர்ணக் கொடி அல்ல
அது
தன் உதிரத்தால்
உருக் கொடுத்த தாயை
தரணிக்கே பறை சாற்றி நிற்கும்
உயிர்ப் பாலமாம் எம்
தொப்புள் கொடி அன்றோ?
சு.உமாதேவி

