நான்கு வகை நயனம்

மதுரையிலே, கூத்தாள்’ என்றொரு தாசி இருந்தாள். கவிஞரிடத்தில் மிகவும் அன்பு கொண்டவள் அவள். அவள் கண்களையும், அவள் தமக்கை, தாய், பாட்டி ஆகியோரின் கண்களையும் இப்படிக் கூறிச் சிறப்பிக்கிறார் கவி காளமேகம்.

நேரிசை வெண்பா

கூத்தாள் விழிகனெடுங் கூர்வேலாம் கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம் - மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம் ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு. . 173

- கவி காளமேகம்

பொருளுரை:

கூத்தாள் என்பவளின் விழிகள் இரண்டும் நெடிதான கூரிய வேல்முனையைப் போன்றன.

கூத்தாளுடைய மூத்தாளின் விழிகள் முழுநீலத் தன்மையுடைய நீலோற்பல மலர் போன்றன;

மூத்தாளின் ஆத்தாளுடைய கண்கள் தாமரைப் பூப் போன்றவை:

அந்த ஆத்தாளின் ஆத்தாளுடைய கண்களோ இரண்டு அம்புகளைப் போன்றவை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Aug-20, 8:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே