காதலிக்கிறேன்

ஈரிரண்டு கண்கள் கவ்வி அவர்
ஈரிதயம் ஒன்றான அந்நொடியை,
"பாடம் படித்து நிமிர்ந்த விழிதனில்
பட்டுத் தெரிந்தது மானின் விழி" என்று,
பழச்சாறு தமிழில் பாரதிதாசன்,
கவிச்சாறு கொட்டிப் போனான்.
காதல்முள் தைத்த அக்காயத்தில்,
கவிமருந்து வைத்துப் போனான்.

"காதலடி நீயெனக்கு,
காந்தமடி நானுனக்கு"
எனும்
கவிதை நீரூற்றி காதல் வேர்கள்
கால்பரப்ப நாற்று நட்டான் பாரதி.

"சந்தித்த வேளையில்
சிந்திக்கவே இல்லை
தந்து விட்டேன் என்னை". என்று
கவிபாடி, கனவுலகில் காதலிக்க
கைகொடுத்து இட்டுப் போனான்,
கவியின் அரசன் கண்ணதாசன்.

சந்தித்த வேளையில் அவன்
சிந்தித்து வருவதா காதல்?
புருவ வில்லெடுத்து பார்வைச்
சரம் தொடுக்கும் பருவநோயில்,
தேகம் காதல் ராகம் பாட,
நாளம் தக்க தாளம் போட,
விந்தைக் கவிதைகள் விதம்
விதமாய் தந்து,
முந்தி நின்ற கவி அல்லவா
கண்ணதாசன்?

தனியாக வராமல் தன்
தாயோடு வந்த காதலியை,
"முள்ளணிந்து வந்த ரோஜாவை
முகர்வதெப்படி?" என்று,
வைரமுத்து கேட்ட வரியினால்,
முள்ளில்லா தமிழ் ரோஜாவை
முகரும் ஆசை என் மனதில்,
முண்டியடித்து முகாமிட்டது.

தேன்தமிழ் மலரால் காதலை
தினம் போற்றி,
நித்தம் எத்தனை எத்தனை
புலவர்கள்,
சித்தம் புகுந்து என்னைச்
சிறையிலிட்டார்.
காதல் தீயினில் கனிந்துருகி
மோகக் கலை கசியவிட்டார்.

கவிதைத் தோளேறி வந்த
காதலெனக்கு,
கனவில் மட்டுமே தேரேறி
வந்தது.
கவிதை யார்த்த காதல்
என் கைகூடவில்லை
கவிதையை கோர்த்த தமிழ்
என்னை கைவிடவில்லை.

எக் காலமும் மூப்படையா
ஒப்பிலா தமிழை தப்பாமல்
எப்போதும் காதலிக்கிறேன்.

ச.தீபன்
9443551706

எழுதியவர் : தீபன் (15-Aug-20, 9:18 pm)
Tanglish : kathalikiren
பார்வை : 346

மேலே