சுதந்திர தினம் வரப்போகிறது

இன்னிசை கீதம் பாடு
இனி வேண்டாம்
மதச் சாதி நாடு..!

இளைஞர்களே இந்தியர் வீடு
இயம்புவோம் இன்முகத்தோடு

சத்திய நெறி நித்திய ஒளி
தூய நெஞ்சில் பொதி

பூரண அமைதி
பூரித்துப் பொங்கும்
ஆர மலர்கள் பொறி

தந்திர படையில்
இயந்திர மடியில்
வெற்றி கொள்ளை முறி

விற்று விளையாடும்
வேற்று ஆட்சி பறி

மக்கள் வாழ்வை
தடங்கல் ஆக்கும்
சட்ட்ங்கள் ஓடி

கார்ப்பரேட் ஆட்சியே
கார்பன்டை ஆக்ஸைடு குடி

வளக்கொள்ளை ஆட்சி
வதம் செய்து முடிக்க
சுதந்திரம் பெற்றவளே..!
நிம்மதியாய் நீ இரு

இந்தியர் நாங்களுண்டு
நலிவுற விடுவோமா
சுரண்டும் ஆட்சியை
சுருட்டி எறிய மாட்டோமா

இரவல் மூச்சு
எங்களுக்கு தந்தவர்களே..!
சுதந்திர போர் வீரர்களே..!
நாம் சுதந்திரம்
பெற்று விட்டோம்

உண்மைதான்

இப்போதெல்லாம்
எங்கள் மூச்சை
எந்த வெள்ளையனும்
சுடுவதில்லை

சுதந்திர நாடே
சுதந்திரமாய் சுடுகிறது

கட்டுண்ட
சுதந்திர தேவியே..!
கட்டவிழ்க்க
காளையர் நாங்களுண்டு

எங்கள் கட்டளைக்கும்
காது கிடைக்கும்
சுதந்திர இந்தியக் கிரகம்
அன்று கிடைக்கும்

இன்று
சுவீட் எடு
சுதந்திர தினம் கொண்டாடு
அப்படியே ...
பாக்கெட்டில்
தேசியக் கொடி குத்து
பத்து பேர் பார்க்கவேனும்
நட கட்டு
வெள்ளைக் கதர் கட்டு
வெள்ளையனை
எதிர்த்தவன் போல்
தோரணை காட்டு

ஜெய் ஹிந்த் முழங்கு
ஜனகன பாடு
ஏற்றிய கொடி இறக்கு மடக்கு

அப்படியே மீண்டும்
அடிமையாகு

உள்ளூரு தண்ணியெடுத்து
உண்ணாக்கில் விட

பிரிட்டிஸ் காரனை அனுமதி
நீர் நிலை கொடு

பொன் தோண்டி எடுக்க
போலந்துக்காரனை அழை
பொன்மலை கொடு
......
.......
...

இப்படியே..!
எல்லா நாட்டினருக்கும்
ஏதாவதொரு
வளம் வாரி கொடு

சிகப்போ பச்சையோ
கம்பளம் விரி

உயிரோ நிலமோ
வாரி இறை
சுறு சுறுப்பாய் இயங்கு
நீ கொண்டாட
சுதந்திர தினம்
வரப்போகிறது ..!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (15-Aug-20, 9:39 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 471

மேலே