செண்டு
========
விதியேயென இருந்தாலுனை விளையாடிடும் துன்பம்
-விரைவாயதை தடுத்தாலுனை விலகாதினி இன்பம்
நதிபோல்வெகு சிறப்பாயொரு நடைபோட்டிடு நித்தம்
-நலிவேயிலை உயர்வேகிட நலமாகிடும் சித்தம்
மதிதானுனக் கிருக்கேயதை மதிப்பாக்கிடு நன்று
-மதியாதவ ரெவராகினும் மதிப்பாரதைக் கண்டு
புதிதாயுனை பரிசீலனை புரிவாயெனில் இந்தப்
-புவிமீதொரு புதுப்பூமழை பொழிவாய்சுக மென்றே!
*
உழைப்பேயுனை உயர்வாக்கிடும் உணர்வாயிதை நீயே
-உழைக்காவுனை விரும்பாதெரு உறவாகிய நாயும்
அழைப்பாரென இருந்தேதினம் அடுப்போரமு றங்கி
-அலுத்தாலொரு தொழிலானது அணுகாதுனை நெருங்கி
பிழைப்போரது பிழைப்பானது பிழையானது அல்ல
-பிழைக்காதுளப் பிழைப்பானது பிழையாகுவ துண்டு
நுழைவாயிலை அடைப்பார்மனம் நுகைவாகிடச் செய்து
-நுழைந்தேசிறு தொழில்பூவினை நுகர்வாயது செண்டு.
**
**
நுகை – இளகச்செய்தல்