மிக்சர் நினைவுகள்
இந்தக் கதை சிறுவயதில் நடந்தது.நானும் என் தங்கையும் வேலையிலிருந்து வீடு திரும்பும் அப்பாவின் வரவுக்காக காத்திருப்போம்.வாசலில் அப்பாவின் காலடி ஓசைக்கேட்டதும் ஓடிச் சென்று அவர் வாங்கி வந்திருக்கும் பையை கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடி விடுவோம்.
அதில் எனக்கு பிடித்த மிக்சர் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு தங்கை கையில் குளோப் ஜாமுன் பொட்டலத்தை கொடுத்து விடுவேன்
அப்பா வீட்டுக்குள் நுழையும் முன்பே நாங்கள் அதை காலி செய்து குப்பையை தூக்கி எறிவோம்.
"இப்படி மூசுண்ட கொடுத்து கொடுத்து இதுகள கெடுத்து வச்சிருக்கிங்க"அம்மா சொல்ல
அப்பா "குழந்தைங்க தான சாப்பிடட்டும் விடு" என்பார்
வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. தங்கை குளோப் ஜாமுன் விழுங்கி விழுங்கி அவள் வாய் உப்பி போயிருந்தது.மிக்சரில்லாத இரவுகளில் நான் தூங்குவதே இல்லை.
அப்பாவுக்கு ஒரு விபத்தில் கால் உடைந்து வீட்டிலே அடைக்கலமாக என் மிக்சருக்கும், தங்கை குளோப் ஜாமுனுக்கும் பஞ்சம் வந்தது.
நான் அம்மாவிடம் "அம்மா மிக்சர் வாங்கி கொடுமா" அடம்பிடிக்க
"இப்ப அடிக்கற அடில தோலு உரியபோது. ஒழுங்கா ஆக்கிப்போடறத சாப்பிட்டுட்டு இருக்க முடியாதா உங்களால" திட்டுவாள்
நான் வெளியே வரும் போது தங்கை அழுதவாறே அமர்ந்திருக்க அதைப் பார்த்து இரசித்தவாறே ஆறுதல் அடைவேன்
இரவில் சாப்பாடு இறங்க மறுத்தது.அப்பா அம்மாவிடம் "அவங்க ஆசைப்படறத செஞ்சாவது கொடு" என்றார்
அம்மா ஏதோ சாகசத்துக்கு புறப்படுவது போல கையில் மொபைலோடு விதவிதமான பலகார வீடியோக்களை ஆராய்ந்தாள்.
எனக்கும் தங்கைக்கும் அளப்பரிய மகிழ்ச்சி
என் சந்தோஷத்தை பகிர என் நண்பனுக்கு கால் செய்தேன்
"டேய் உனக்கு ஒன்னு தெரியுமா இன்னிக்கு எங்க வீட்ல மிக்சர் செய்யுறாங்க உங்க வீட்ல"
"கிச்சன கழுவுனா தான் சோறுனு சொல்லிட்டாங்க"
எண்ணெயில் ஏதோ பொரியும் சத்தம்
நானும் தங்கையும் அவ்வபோது ஓடி ஓடி கிச்சனை பார்ப்போம்
அம்மா "எண்ணெய் படப்போது தூரம் போங்க" என்பாள்
"அண்ணா இன்னிக்கு நானும் மிக்சர் சாப்பிடுவேனே" தங்கை ஓட்டைப்பல்லை காட்டி சிரிக்க
சந்தோஷமும், துக்கமும் தொண்டையை அடைக்கும். அவள் சாப்பிட ஆரம்பித்தாள் எனக்கு மிக்சர் மீறுமா என்பதே சந்தேகம்
அம்மா பலகாரம் செய்துவிட்டு இருவரையும் கைகழுவிட்டு வரச் சொன்னாள்
இருவரும் ஓடிச் சென்று கைகளை கழுவி அவள் முன் அமர்ந்தோம்
சுருள் சுருளான மிக்சர்.அனல் கொதிக்க வாய்க்குள் வைத்து கடித்தேன்.
பல்லுக்குள் ஒட்டிய மாவு, வயிற்றுக்குள் செல்ல மறுத்தது
"அம்மா மிக்சர் என்னமா இப்படி இருக்கு. இது மாவுல செஞ்சதா இல்ல பேவிக்கால் எதாவது ஊத்திட்டியா"
"ரொம்ப நைஸா இருக்காடா"
"வாய்ல ஒட்டுதுமா"
"இந்தா இந்த எண்ணெய கொஞ்சம் பல்லுல தேச்சுக்க. ஒட்டாது"
நான் கோபத்தில் எழுந்து வந்து திண்ணையில் அமர்ந்தேன்
இனி மிக்சர் என்ற சொல்லை கேட்டாலே என் பல்லை கடிக்கும் படி அம்மா செய்து விட்டாள்
கைகழுவி அருகே ஓடிவந்த தங்கை அவள் பல்லை காட்டி சிரிக்க பல் பலத்தது.
"என்னடி சிரிக்கற"
"நல்லா பாரு"
ஆம். அம்மாவின் கைவித்தையில் அவள் ஓட்டைப்பல் செலவின்றி அடைக்கப்பட்டது.
காலங்கள் உருண்டோடின.ஆனால் இன்றும் மிக்சரை நினைக்கையில் அம்மாவின் சாகசம் மட்டுமே கண் முன்னே வந்து போகிறது.
முற்றும்.