மரக்கன்று ஒன்று நடுவோம்

அனாதை இல்லம் உள்ளே சென்று
தத்தெடுத்த பிஞ்சு போல்
செழிப்பான சிறு மரக்கன்று கண்டு
ஆராய்ந்து அதை வாங்கி
ஆடாமல் கையில் அணைத்து
வீடு சேர இரவும் வந்தது..
பக்கம் இருந்த கன்றுகள் எல்லாம்
எனை கண்டு ஏங்கியது போல்
எனக்குள் ஏனோ உள்ளுணர்வு..
அன்றிரவு அசதி இருந்தும்
கண்கள் ஏனோ அசரவில்லை..
விடியும் வரை கண் விழித்து
பாசாங்காய் படுத்திருக்க
பக்குவமாய் என் மனமில்லை..
விடிந்தும் விடியாத காலை பொழுது
கால்கள் இரண்டும் கன்றை
இட்ட இடம் நோக்கி நடக்க
பிரித்தெடுத்து வந்த பிள்ளை போல்
கன்றின் இலைகள் எல்லாம்
சொங்கி சோர்வில் தொங்க..
கன்று மரமாயின் கிளை எங்கு
போகுமென மனக்கணக்கு போட்டு
தோதுவான இடமொன்று பார்த்து
ஒரடியில் குழியொன்று தோண்டி
வீட்டருகே சிறிது செம்மண் பெற்று
அரையடி வரை அதனை இட்டு
உப்பும் மணலும் ஒரு கையெடுத்து
காய்ந்த சானமதை கையால் உடைத்து
செம்மண் சேர நான்கையும் கலந்து
நெகிழி தாளை நேராய் கிழித்து
வேரருகாமல் கன்றை பிரித்து
நேராய் நிறுத்தி கலந்த மண்ணை
சுற்றியிட்டு குழியில் சிறிது நீரூற்றி
மரக் கன்றை நட்ட தருணம் ஏனோ
மனதினில் ஏதோ சாதித்த உணர்வு..
நீர் தினம் விட்டு அக்கன்றை நோக்கிட
தொங்கிய இலைகள் சிறிது நிமிர்ந்திட
பாலூட்டிய தாயாய் என்னுள் உணர்வு..
மரக்கன்று ஒன்றை வீட்டருகே நட்டு
அது வளர கண்டு பரவசம் கொண்டு
பிறவி பயனை அடைவீர் நீவீர்..
------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (17-Aug-20, 11:31 pm)
சேர்த்தது : Sam Saravanan
பார்வை : 109

மேலே