அனுபவம் தரும் அறிவுரை

அவசரமாக ஓடிவந்து பேருந்தில் ஏறினான் ராஜன் .அலுவலகத்தில் திடீரென்று கூறியதால் முன்பதிவு செய்யவில்லை .அவனது அலுவலகத்தின் திருப்பூர் கிளையில் ஏதோ ஒரு தவறு நடந்திருப்பதாக செய்திவர, அதை நேரில் சென்று தகவல் திரட்டி,அதன் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று மேலாளரின் கட்டளைக்கிணங்க புறப்பட்டான் . பேருந்து புறப்பட்ட சிலநொடிகள் கழித்துதான் கவனித்தான் அவன் பக்கத்தில் ஒரு பெரியவர் அமர்ந்து இருந்ததை .தனியாக வந்திருப்பாரோ என்ற ஐயம் அவனை ஆட்கொண்டது .

அப்போது அவரே என்னாப்பா , நீயும் திருப்பூர் தான் செல்கிறாயா என்றார் . ஆமாம் என்றவன் , நீங்களுமா என்றான் . ஆமாம்பா, மகள் வீட்டிற்கு செல்கிறேன் என்றார் .தனியாக பயணம் செய்கிறீர்களே பரவாயில்லையா என்றான் உடனே .அவர் சிரித்துக் கொண்டே நாம் பிறக்கும்போது
தனியாகத்தானே வருகிறோம் இந்த உலகிற்கு என்றதும், ராஜனுக்கு ஏண்டா கேட்டோம் என்றிருந்தது .ஒருவேளை இவர் விரக்தியின் விளிம்பில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் வந்தது . ஐயா ஏதாவது பிரச்சினையா ? கவலையாக பேசுகிறீர்கள் என்றதும் அவர், 'கவலை இல்லாத மனிதன் யாரப்பா இந்த உலகில்' என்று தனது நிலையை வருத்தமுடன் பகிர்ந்துக் கொண்டார் .

எனக்கு ஒரு மகன் ,மகள் உள்ளார்கள். மகன் சென்னையில்,மகள் திருப்பூரில் . இருவர் வீட்டிலும் மூன்று மாதங்கள் மாறி மாறி இருப்பேன் .அவர்களுக்குள் அப்படி ஒப்பந்தம் .உடனே ராஜன் ,பரவாயில்லையே ஐயா ,இந்தக் காலத்தில் இப்படி பிள்ளைகள் உங்களை பொறுப்பாக பார்த்துக் கொள்கிறார்களே என்றான் . நினைத்தால் பெருமையாக உள்ளது . வாழ்க உங்கள் பிள்ளைகள் என்றான் .அவர் கேலியாக சிரித்தார் . அப்படி இல்லையப்பா இது வேறு .

நான் அரசாங்க பணியில் 36 வருடங்கள் நல்ல பெயரோடு இருந்து ஓய்வுப் பெற்றவன் . மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது .நான் இருவரையும் படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தேன் . நல்ல நிலையில் உள்ளார்கள் இருவரும் .அந்த விதத்தில் எனக்கு மகிழ்ச்சி தான் . ஆனால் நான் யாரிடம் இருப்பது , யார் பார்த்துக் கொள்வது என்றும் அவரின் செலவினங்களை யார் ஏற்றுக் கொள்வது என்றும் விவாதமாக உருவெடுத்த வேளையில்தான் இது போன்ற ஒப்பந்தம் அவர்களுக்குள் வந்தது . நல்லதுதானே ஐயா , நல்ல எண்ணத்துடன் தான் இப்படி செய்கிறார்கள் என்றான் . இல்லையப்பா , எனது (பென்ஷன்) ஓய்வூதிய வருமானமே போதும். எனக்கு சொந்த வீடும் உள்ளது என்றார் .அவர்கள் எனக்காக எந்த செலவும் செய்வதில்லை ,நானும் கேட்பதில்லை என்றார் பெருமையுடன் . இருவர் வீட்டிலும் அனைவரும் வேலைக்கு செல்கிறாரகள் . அந்த நேரத்தில் வீட்டையும் பார்த்துக்கொண்டு ,அவர்கள் பிள்ளைகளை பள்ளியில் விட்டு, மீண்டும் அழைத்து வர வேண்டும் . எனது செலவுகளை நான் எனது பணத்தில் தான் செய்ய வேண்டும் என்பது அவர்கள் கட்டளை .

இதைக் கேட்டதும் ராஜனுக்கு தூக்கிவாரிப் போட்டது . என்ன ஐயா , இப்படியுமா பிள்ளைகள் என்று ராஜன் கவலையுடன் கேட்டான் . அவர் சிரித்துக் கொண்டே , இதுதானப்பா இந்த காலம் . அதுசரி , உன்னைப்பற்றி கூறவில்லையே என்றார் . ஐயா , நான் எனக்கு அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டார் . அம்மா இருக்கிறார்கள் என்னுடன் . நாங்கள் இரண்டு பிள்ளைகள் . நான் இளையவன் . எனது அண்ணன் திருமணமாகி குடும்பத்துடன் திருச்சியில் இருக்கிறான் . எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. மனைவிக்கு சொந்த ஊர் மதுரை. அவளும் ஒரே மகள் அவர்கள் குடும்பத்தில் இது செல்போன் காலமில்லையா , அதுதான் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்வார்கள் அவ்வப்போது . மனைவியும் அம்மாவிற்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாள் என்றான் பெருமிதத்துடன் . பெரியவர் உடனே இந்தநிலை இப்படியே நீடித்து நிலைத்தால் மிக்க மகிழ்ச்சி என்றார் .

சிறிது நேரத்தில் பேருந்து ஒரு உணவகத்தின் அருகில் நின்றது . நடத்துனர் அனைவரையும்
அழைத்து , இங்கு வண்டி இருபது நிமிடங்கள் நிற்கும் . வேண்டியவர்கள் சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றார். அவரும் ஓட்டுனரும் ஒன்றாக இறங்கி பேசிக்கொண்டே அந்த உணவகத்திற்குள் நுழைந்தார்கள் . அதுதானே வழக்கம் . ராஜன் உடனே பெரியவர் பக்கம் திரும்பி ஐயா உங்களுக்கு ஏதாவது வேண்டுமா , நான் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்றான் . அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்ப்பா , சாப்பிட்டுத்தான் வண்டியில் ஏறினேன் . நீ சென்று சாப்பிடு என்று அன்புடன் கூறியதும் , ராஜன் கண்கள் சற்று கலங்கியது. ஒருவேளை அவனது அப்பா நினைவு வந்ததா என்று தெரியவில்லை .

சிறிது நேரத்தில் வண்டி கிளம்புவதற்கு முன் ராஜன் வந்து அமர்ந்தான் . அவருக்கு இரண்டு வாழைப்பழம் வாங்கி வந்து அவர் கையில் கொடுத்தான் . அவர் உடனே தனது சட்டையிலிருந்து பர்ஸை எடுத்து , எவ்வளவு காசு தரனும் என்றே பணத்தை கையில் எடுத்தார் . உடனே உணர்ச்சிப் பெருக்குடன் ஐயா அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ...என்னையும் உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தடுத்தான் . அதைக் கேட்டதும் அந்த பெரியவர், தம்பி நன்றியுடன் அவன் கையைப் பற்றி கொண்டு , எனது மகன் இப்படி இருந்திருந்தால் மகிழ்சசியாக இருப்பேன் ...ஆனால் அப்படி இல்லையப்பா ...நிறைய நிகழ்ச்சிகள் நடந்திடுச்சு ...சொல்லத்தான் முடியவில்லை என்றதும் அவர் விழிகள் வழிய ஆரம்பித்தன . அவன் ஆறுதல் கூறிக்கொண்டே , இவருக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டான் . அப்படியே இருவரும் தூங்கி விட்டார்கள் .

திருப்பூர் வந்ததும் பெரியவர் இறங்கிக்கொண்டு ராஜனிடம் , ஏதாவது உதவி தேவைப்பட்டால் என்னை கூப்பிட தயங்காதே என்று அவரின் செல்போன் எண்ணையும் கொடுத்துவிட்டு, தனது பெயர் ராமலிங்கம் என்று கூறிவிட்டு , ஒரு ஆட்டோ மூலம் புறப்பட்டார் வீட்டிற்கு . ராஜன் அவர் செல்வதையே பார்த்துக்கொண்டு சில நிமிடங்கள் கழித்து ,ஏற்கனவே அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த லாட்ஜை நோக்கி புறப்பட்டான் .

அவனது கிளை அலுவலகம் முகவரியை வைத்து காலை அலுவல் ஆரம்பிப்பதற்குள் இவன் நுழைந்தான் . அந்த கிளை மேனஜர் அப்போது வரவில்லை . யாரோ ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார் . அவன் அவரிடம் சென்று அவனை அறிமுகம் செய்து கொண்டு மேனேஜர் அறையில் சென்று அமர்ந்தான் . சிறிது நேரத்தில் அந்த மேனேஜர் வந்தார். அவரிடம் தான் யார் என்று கூறிக்கொண்டு அலுவலகத்தைப்பற்றி சில குறிப்புகளை கேட்டறிந்தான் . அப்போதுதான் அவர் பெயர் குமரேசன் என்றும் அறிந்தான் . தான் வந்திருக்கும் காரணத்தை கூறிவிட்டு சில தவறுகளை சுட்டிக்காட்டி அதன் விவரங்களை கேட்டான். இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் ஆரம்பித்து , அது பிறகு விவாதமாக மாறி , ஒரு கட்டத்தில் ராஜன் கோபமாக குமரேசனை கேள்விகளை கேட்க ஆரம்பித்தான் . சில மணித்துளிகள் அங்கே அமைதி நிலவியது . இறுதியில் குமரேசன் நீங்கள் தான் தவறு செய்துள்ளதாக ஆணித்தரமாக கூறினான் . அவரும் ஒப்புக்கொண்டார் வேறுவழியின்றி . அவரால் நிறுவனத்திற்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரே கையாடல் செய்திருப்பதையும் சுட்டிக்காட்டியதும் அவருக்கு அவமானத்தால் முகம் சிவந்தது . அங்கிருந்தே தலைமை அலுவலகத்தை அழைத்து தனியாக ஏதோ பேசினான் .

சிறிது நேரத்தில் சென்னை அலுவலகத்திருந்து குமரசனை தற்காலிக இடைநீக்கம் என்று உத்தரவும் மெயிலில் வந்தது . உடனே ராஜன் அவரிடம் பணத்தை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டான் . குமரேசன் வெலவெலத்துப் போனான் . அவன் ராஜனிடம் கெஞ்சினான் , ஒருவாரம் கால அவகாசம் வேண்டி. ஆனால் ராஜன் , இது தலைமை அலுவலக கட்டளை , நான் ஏதும் செய்ய முடியாது என்றான் . மேலும் நான் இதை போலீசுக்கு கூறினால் அவர்களின் நடவடிக்கை மோசமாக இருக்கும். நீங்களும் அறிவீர்கள் . ஆனால் நான் அதை செய்யவில்லை மனிதாபிமான அடிப்படையில் என்றான் . குமரேசன் அறைக்கு
வெளியே சென்று யாருக்கோ செல்போன் மூலம் பேசினான் . உள்ளே வந்து ராஜனிடம் , சார் எங்கள் தந்தையை வரச்சொல்லி இருக்கிறேன் . அவர் கணக்கில் பணம் உள்ளது , நிச்சயம் வந்துவிடுவார் என்று கெஞ்சும் குரலில் கூறினான் . பிறகு பியூன் ஒருவரை கூப்பிட்டு ராஜனுக்கு காபி வாங்கி வருமாறு கூறினான் . காபி வந்ததும் ராஜன் உடனே எழுந்து சென்று அலுவலகத்தில் உள்ள மற்ற ஊழியர்களிடம் ஏதோ விசாரித்து கொண்டிருந்தான் . இதற்குள் குமரேசனின் அப்பா வந்து அவனது அறைக்குள் நுழைந்தார் . நடந்த விவரங்களை எல்லாம் அவரிடம் கூறி அழுதான் குமரேசன் . இப்போதே பணம் கட்டவில்லை எனில் வேலைக்கே ஆபத்து என்றும் . மேலும் போலீசுக்கு தெரிந்தால் மேலும் நமது குடும்பத்திற்கும் அவமானம் என்பதால் , உங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஒரு காசோலை மூலம் எனது கணக்கிற்கு மாற்றிவிடுங்கள் , நான் அதை எடுத்து ஆபிசுக்குக்கு கட்டிவிடுகிறேன் என்று விரிவாக கூறினான் . அவனது அப்பா உடனடியாக செயல்பட்டார் . தான் எடுத்து வந்திருந்த காசோலையை அவனிடம் கொடுத்தார் . குமரேசன் அதில் பூர்த்தி செய்து உடனடியாக ஆக வேண்டியதை நிரைவேற்றினான் .

அப்போது அந்த அறைக்குள் நுழைந்த ராஜன் அந்த பெரியவரை கவனித்தான் . உடனே ஐயா நீங்கள் எங்கே இங்கே என்று கேட்டான். அவர் உடன் தழுதழுத்த குரலில் இந்த குமரேசன் தான் என் மகன் நடந்த தவறுக்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் . உடனே அவர் கையை பிடித்துக் கொண்டு , ஐயா நீங்களும் என்னை மன்னியுங்கள் , நான் எனது கடமையை ஆற்ற வேண்டியுள்ளது என்று தனது நிலையை விளக்கினான் . கவலைப்படாதீர்கள் ஐயா , நான் சென்னை சென்றதும் மேலிடத்தில் கூறி அவர் பணம் உடனே கட்டிவிட்டதால் , கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருக்க முயற்சிக்கிறேன் என்றான் . அதுதான் என்னால் முடியும் என்றான் .

ஆனாலும் ராமலிங்கம் அவர்கள் ராஜனிடம் , நானும் ஒரு அரசு பணியில் இருந்து ஓய்வுப் பெற்றவன் தான் ,எனக்கு நடைமுறைகள் தெரியும். என்ன செய்வது, யாராக இருந்தாலும் தவறுசெய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டியது தான் . நீ உனது கடமையை தான் செய்தாய் ...ஆயினும் உனது முயற்சி வெற்றி அடைந்தால் மகிழ்ச்சிதான் என்றார் . இருவரும் தங்கள் கடமையை செய்வதில் முறை தவறாது நடந்து கொண்டது கண்டு மற்ற ஊழியர்கள் ஆச்சரியமுடன் பார்த்தார்கள் .

ராஜன் அந்த பெரியவரிடம் , நீங்கள் தவறு செய்தது உங்கள் மகனாக இருப்பினும் உங்கள் நீதி நெறி தவறாத உணர்வையும் கடமையையும் கண்டு வியக்கிறேன், இதெல்லாம் என்னைப் போன்ற
அடுத்த தலைமுறைக்கு ஒரு பாடம் ஐயா என்றான் .

அன்று இரவு ஊர் திரும்ப , பேருந்து நிலையம் சென்று , அவன் செல்ல வேண்டிய வண்டியில் ஏறி , இருக்கையை கண்டுபிடித்து அதில் அமர்ந்தான் . அப்போது நேற்று இரவு பயணத்தையும் அந்த பெரியவரின் சந்திப்பையும் அதை தொடர்ந்து நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைத்து, தன்னை கடமையை முடித்த கண்ணியம் நிறைந்த மனிதனாக நினைத்துக் கொண்டே கண்களை மூடி உறக்கத்தைத் தழுவினான் .

வாழ்க்கையில் தான் நாம் எத்தனை சம்பவங்களை சந்திக்கிறோம் , கடந்து செல்கிறோம் .. ஒவ்வொன்றும் நமக்கு பல பாடங்களை சொல்லித் தருகிற்து , அனுபவங்கள் சில அறிவுரைக் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது . இதை அனைவரும் உணர வேண்டும் .

அனுபவ அலைகள் நிறைந்துதானே நமது வாழ்க்கையெனும் கடல் . அதில் எளிதாக நீந்தவும் , எதிர்நீச்சல் போடவும் தயாராக இருந்தால் ஆபத்து என்பது இல்லை . அமைதியாக பயணிக்கலாம் என்றும் .


பழனி குமார்
18.08.2020

எழுதியவர் : பழனி குமார் (18-Aug-20, 3:12 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 327

மேலே