வேணாம்வேணாம்வேணவே வேணாம்7 அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவன்

இப்ப நான் அமெரிக்காவுக்கு படிக்க வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. "அமெரிக்கா ஒரு சொர்க்க பூமி. அமெரிக்காவுக்குப் போறவனெல்லாம் அதிர்ஷ்டம் செஞ்சவன்" னு எல்லோரும் சொல்லுவாங்க.அது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரையிலும் உண்மைதான். ஆனால் இன்னிக்கு அப்படி இல்லை. ட்ரம்ப் வந்தப்புறம் நாளைக்கு என்ன நடக்குமோன்னு பயமா இருக்கு. பிடி ஆட்டத்துலே ட்ரம்ப் போட்டு வெட்டறா மாதிரி, ட்ரம்ப் வந்த நாளிலே இருந்து வெளிநாட்டவங்களோட சான்ஸை எல்லாம் ஒரு வெட்டு வெட்டிட்டார். வேலைக்கு மறுபடியும் இந்தியாவுக்கே போக வேண்டி இருக்குமோன்னு கவலையா இருக்கு.
இங்கே வந்து படிக்கிறவங்க எவ்வளவு ஸாக்ரிஃபைஸ் பண்ணறாங்கங்கறதை நம்ம ஊர் ஜனங்க சரியாப் புரிஞ்சிக்கிறதில்லை. முந்தி எல்லாம் அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்களுக்கெல்லாம் கல்சரல்ஷாக் ஏற்படும்னு சொல்லுவாங்க. இப்ப எல்லாம் அப்படி பெரிய கல்சரல்ஷாக் எதுவும் கிடையாது. நம்ம ஊர் சினிமாவுலே இல்லாத கல்சரல் ஷாக்கா? நம்ம ஊர் இப்ப முக்கால்வாசி அமெரிக்காவா ஆயிட்டுது பல விஷயங்களிலேயும். சொல்லப் போனா இங்கே வந்துட்டு திரும்ப இந்தியா போறவங்களுக்குத்தான் இப்ப கல்சுரல் ஷாக்!

என்னதான் சொல்லுங்க நம்ம ஆளுங்களை, நம்ம மொழியை இங்கே பார்க்கும்போதும், கேட்கும் போதும் ஒரு த்ரில் வரத்தான் செய்யுது. ஆனா நம்ம வீட்டை விட்டும், நம்ம சொந்த பந்தங்களை விட்டும், நம்ம நாட்டை விட்டும் வரது அவ்வளவு சுலபமில்லீங்க. அந்த இழப்பு இங்கே இருக்கிற அத்தனை பேர் மனசிலேயும் கனமான ஒரு ஏக்கத்தை ஏற்படுத்திக் கிட்டுத்தான் இருக்கு. இந்த இழப்புக்கு ஈடா எதையும் சொல்ல முடியாது. யாராவது இந்தியாவுக்குப் போறாங்கன்னா அவங்களைப் பாத்து ஏங்காத இந்தியனே இங்கே கிடையாது.
…..
சாப்பாட்டைப் பொறுத்தவரை முந்தி மாதிரி அவ்வளவு பிரச்சினை இல்லை. நம்ம ஊர்லே கிடைக்கிற அத்தனை சாமான்களும் இங்கேயும் அனேகமாகக் கிடைக்கிறது. சரவணபவன், முருகன் இட்லிக்கடை எல்லாம் கூட வந்துட்டுதுன்னா பாத்துக்குங்களேன். ஹோட்டல்லே போய்சாப்பிடற அளவுக்கு இங்கே படிக்க வரவங்களுக்கு வசதி கிடையாது. ஒரு மசால் தோசை எட்டு டாலர்னா நீங்களே கணக்குப் பண்ணிக்குங்களேன்.
மொத வேலையா இங்க வரவங்க சமையல் கத்துக்கணும். எவ்வளவு டிகிரி வாங்கியிருந்தாலும் ரொம்ப பேருக்கு கடலை பருப்புக்கும், துவரம்பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது. உளுத்தம் பருப்புக்கும், பாசிப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியாது. எது என்ன காய், எது என்ன பருப்புன்னு தெரிஞ்சிக்கிறதே பெரிய வேலை. சமையல் புத்தகங்களைப் பாத்து சமையல் கத்துக்கிட்டா, அதை சாப்பிடறதும் எப்படின்னு தெரிஞ்சிக்க வேறே யாராவது ஒருத்தர் புத்தகம் எழுதணும். ஏன்னா, நம்ம ஊர்லே பசங்களை கிட்சன் பக்கமே வரவிடமாட்டாங்க. பெண்களும் இப்ப படிக்கிறதாலே அவங்களுக்கும் எதுவும் தெரியறது இல்லே. அதனாலே இங்கேயிருந்து அம்மாவுக்குஃபோன் பண்ணிக் கேட்டுக் கேட்டு சமையல் செய்யணும். என்ன பண்ணினாலும் அம்மா சமையல் டேஸ்ட் வரவே வராது. கொஞ்ச நாளுலே நாக்கு செத்துப் போயிடும். இந்த சாப்பாட்டுப் பிரச்சினை இருக்கு பாருங்க இது பெரும் பிரச்சினைங்க. அதை அனுபவிச்சிப் பாத்தவங்களுக்குத்தான் அது புரியும். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இப்படித்தான் பாங்க்லே கடன் வாங்கி அமெரிக்காவுக்குப் படிக்க வந்தான். வந்த கொஞ்ச நாளிலேயே நாக்கு செத்துப்போய், அவனாலே சமாளிக்க முடியாம, அமெரிக்காவும் வேணாம், ஒண்ணும் வேணாம்னு சொல்லி ஊருக்குத் திரும்பிப் போயிட்டான்னா பாத்துக்கங்களேன். கிட்டத்தட்ட ஒரு லக்ஷம்ரூபா வேஸ்ட்.


அதேமாதிரி இன்னொருத்தன் வந்த அஞ்சாறு மாசத்துலே கண்ணுலே கோளாறு வரவே இங்கே சிகிச்சை செஞ்சுகிட்டா கட்டுபடி ஆகாதுன்னு இந்தியாவுக்குப் போக வேண்டியது ஆயிட்டுது. இந்த ஊருலே இன்ஷயூரன்ஸ் இல்லாம வைத்தியம் பாத்துக்க முடியாது. டாக்டரையும் நாம நெனச்ச நேரம் டக்னு பாக்க முடியாது. ஒரு பல் வலி வந்தாக்கூட டாக்டர் கொடுக்கிற டைம் வரையிலும் பல் வலியைப் பல்லைக் கடிச்சிக்கிட்டு பொறுத்துத் தான் ஆகணும். அதுக்கெல்லாம் நம்ம ஊருதாங்க. நினைச்சா டாக்டரை டக்குனு போய்ப் பார்க்கலாம். நாமளே ஒரு மருந்தைக் கடையிலே மருந்து வாங்கி டக்னு சாப்பிட்டுக்கலாம். அப்படி யெல்லாம் இங்கே செய்யவே முடியாது.

அப்புறம் இந்த ஊர் கிளைமேட் இருக்கே. அது சண்டாளம். வெயிலில் இருந்தாத்தான் நிழலின் அருமை தெரியும்னு சொல்லுவாங்க. ஆனா வெய்யிலோட அருமை இந்த மாதிரி ஊர்கள்லே இருந்தாத்தான் தெரியும். நியூயார்க் பக்கம் படிக்க வரவங்க அங்கே இருக்குற குளிரைத் தாங்கணும். சமயத்துலே டெம்பரேசர் மைனஸுலே போகும். காலிஃபோர்னியான்னு பரவா இல்லேங்க. அங்கேயும் வின்டர்லே குளிர் நம்ம காஷ்மீர் மாதிரி இருக்கும். அதுக் கெல்லாம் தயாரா நீங்க இருக்கணும். ஒரு நாலஞ்சு லேயர் துணியை உடம்புலே சுத்திக்கணும். அப்பப் பாத்து முதுகுலே அரிப்பு எடுக்கும் பாருங்க. வாழ்க்கையே வெறுத்துப் போயிடும்.

இப்ப போதாததுக்கு இன வெறுப்பு (racial hatred) கொஞ்ச காலமா இருக்கிறதாலே, வெளியே போகவே பயமா இருக்கு. எவ்வளவுதான் வெஸ்டர்னா நாம இருந்தாலும் நம்ம கலர் நம்மை காட்டிக் கொடுத்துடுமே. இப்படித்தான் கடந்த ஆறுமாசத்துலே கிட்டத்தட்ட அஞ்சாறு இந்தியர்களை சுட்டுக் கொன்னுட்டாங்க. இதனாலே எங்களைவிட எங்க அம்மா அப்பாக்கள் ரொம்ப பயப்படுறாங்க. இதுதாங்க இன்னிக்கு அமெரிக்காவுக்குப் படிக்க வரவங்களோட நிலைமை.

நம்ம ஊர் ஜனங்களுக்கு வெள்ளை கலர்மேலே அசாத்திய மோகம். பையன் கரிக்கட்டை மாதிரி இருப்பான். ஆனா அவனோடே அப்பா அம்மா அவனுக்கு வர பொண்ணு வெள்ளையா இருக்கணும்னு எதிர்பாப்பாங்க. இது நம்ம ஊர்லே எல்லாருக்கும் இருக்குற வீக்னஸ். அதனாலே இங்கே வரவங்க எந்தப் படிப்பும் இல்லாத க்ளீனர்ஸை பாக்கறதுக்குப் பளிச்சுன்னு வெள்ளை வெளேருன்னு இருக்கிறதாலேயோ என்னவோ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறதும் உண்டு. இந்த வெள்ளைக் கலர் பண்ற வேலை இருக்கே அப்பப்பா. நமக்கு ஒரு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் ஏற்பட்டுப் போயிடும். இங்கே லவ்வுலே கிவ்வுலே மாட்டிக்கிட்டா நம்ம அம்மா அப்பாக்கள் பாடு அவ்வளவுதான். அவங்க ரொம்பவுமே அப்செட் ஆயிடுவாங்க. இது குடும்பத்துலே சில நேரம் பயங்கர சிக்கலை உண்டாக்கிடும். வாழ்க்கையே ஒரு மாதிரியா ஆயிடும்.

படிச்சி முடிச்சவங்களுக்கு முந்தி எல்லாம் அநேகமா வேலே கிடைச்சிடும். அவங்க அதனாலே இங்கேயே செட்டில் ஆயிடுவாங்க. ஆனா இப்ப அப்படி இல்லை. ஊருக்கே திரும்பிப் போக வேண்டிய நிலைமை. இங்கே இருந்தவங்களிலே பெரும்பாலோருக்கு நம்ம ஊர் கண்டிஷன்லே வேலை செய்யப் பிடிக்காது. ஆனா இங்கே வேலை கிடைக்கல்லேன்னா ஒரு நிமிஷம் கூட இங்கே நாம இருக்க முடியாது. நானே ஏண்டா இங்கே வந்தோம்னு ரொம்ப கவலையிலே இருக்கேன். வேலை கிடைக்குமோ கிடைக்காதோன்னு தெரியாம தவிச்சிக் கிட்டு இருக்கேன். என் தம்பி அங்கே யிருந்து இங்கே வர ஆசைப்படறான். நான் அவனை வர வேண்டாம்னுதான் சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது நீங்க என்னைக்கேட்டா என்ன சொல்றதுக்கு இருக்கு? எல்லாத்துக்கும் துணிஞ்சி இருந்தா இங்கே வாங்க. இல்லாட்டி வேணாம். வேணாம். வேணவே வேணாம்.

எழுதியவர் : ரா. குருசுவாமி ( ராகு) (23-Aug-20, 2:49 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
பார்வை : 86

மேலே