மதுரையில் காந்தி நூல் ஆசிரியர் டாக்டர் இராம்பொன்னு மதிப்புரை கவிஞர் இரா இரவி

மதுரையில் காந்தி!

நூல் ஆசிரியர் : டாக்டர் இராம்பொன்னு !

மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !

வெளியீடு. சர்வோதய இலக்கியப் பண்ணை.32/1.மேல வெளி வீதி.மதுரை.625001.தொலைபேசி 0452 2341746. பக்கங்கள்104.
விலைரூ60.
******
பேராசிரியர் இராம்பொன்னு, பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றி, ஓய்வுக்குப் பின்னர் ஆய்வுக் கட்டுரைகள் வடித்து வருகிறார். இந்த நூல் வெளியீட்டு விழா மதுரை காந்தியடிகள் அருங்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது. விழாவிற்கு சென்று, மதிப்புரைக்காக, குறிப்பாக நூலின் தலைப்பிற்காக வாங்கி வந்தேன்.

திரு. க.மு. நடராசன் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். காந்தியடிகள் வரலாற்று சிறப்புமிக்க மதுரைக்கு ஆறு முறை வருகை தந்துள்ளார். இந்தத் தகவல் காந்தி அருங்காட்சியகத்தில் உள்ளது. படித்து இருக்கிறோம். இந்த நூலில் மதுரைக்கு என்ன காரணத்திற்காக வந்தார்? எங்கு தங்கினார்? என்ன பேசினார்? என்ன நிகழ்ந்தது? என்பதை மிக விரிவாக விளக்கமாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர். இந்நூல் படிக்கும்போது காந்தியடிகள் படம் பார்ப்பது போன்ற உணர்வு வந்தது.

(1) 26-03-1919,
(2) 21-09-1921 & 22-09-1921,
(3) 28-09-1927, 29-09-1927 & 30-09-1927,
(4) 25-01-1934, 26-01-1934 & 27-01-1934,
(5) 12-01-1937, 21-01-1937
திருவிதாங்கூர் செல்லும் வழியிலும், அங்கிருந்து திரும்பும் வழியிலும்,
(6) 02-02-1946, 03-02-1946
புள்ளி விபரங்களுடன், புகைப்படங்களுடன் ஆய்வு நூலாக வழங்கி உள்ளார். காந்தியடிகளின் புகழை மேலும் உயர்த்தும் விதமாக நூல் வந்துள்ளது. பாராட்டுக்கள்.

சத்தியாக்கிரக பரப்புரைக்காக அண்ணல் காந்தியடிகள் 1919ல் முதல்முறையாக மதுரைக்கு வந்துள்ளார். தியாகி ஜார்ஜ் ஜோசப் வீட்டில் தங்கி உள்ளார். அந்த வீட்டின் புகைப்படமும் நூலில் இடம்பெற்றுள்ளது. மதுரை இரயில் நிலையத்தில் காந்தியடிகளை வரவேற்று பெரும் கூட்டம் கூடி உள்ளது. அந்தப்படமும் உள்ளது.
மதுரையில் உள்ள சௌராஷ்ட்ர மக்கள் வரவேற்பு வழங்கி உள்ளனர். அதில், “தங்கள் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்பதையும் அண்ணல் பிறந்து வளர்ந்த ராஜ்கோட்டிற்கும் தங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பதையும் வரவேற்புரையில் குறிப்பிடப்பட்டிருந்ததை அறிந்து அண்ணல் மகிழ்ச்சி அடைந்தார்.

“செப்டம்பர் 30 அன்று மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலில் சுமார் 2000 பெண்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. “இத்தகவலைப் படித்த போது காந்தியடிகள் உரையாற்றிய மேடையில் பலமுறை நானும் கவிதை பாடி உள்ளோம் என்று எண்ணி பெருமை அடைந்தேன். மதுரை மாநகரம் உயிர்ப்புடன் உள்ளது என்பதற்கு இந்த அரங்கமே சாட்சி அன்று காந்தியடிகள் பேசிய அதே அரங்கில் இன்றும் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

மீனாட்சி அம்மன் சன்னதி, நுழைவாயில் அஷ்டசக்தி மண்டப உட்கூரையில் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேக கோலம் ஓவியமாக வரையப் பெற்றுள்ளது. பட்டாபிசேகத்தைக் காண்பவர்கள் மத்தியில் காந்தியின் முகமும் இடம்பெற்றுள்ளது. புதிய தகவலாக இருந்தது. அம்மன் சந்நதி வாயில் அருகே காந்தி சிலையுடன் சிறிய மண்டபம் உள்ளது. அசோகச் சக்கரத்துடன் ஸ்தூபி உள்ளது. இந்த மண்டபத்தில் வருடா வருடம் காந்தியடிகள் பிறந்த நாளன்று ராட்டை வைத்து நூல் நூற்று விழா கொண்டாடி வருகின்றனர். நண்பர் கவிஞர் சிதம்பர பாரதியின் பராமரிப்பில் உள்ளது. இங்கு பலமுறை நானும் கவிதை பாடி உள்ளேன். இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இந்த நூல்.

நள்ளிரவு 12.00 மணிக்கு மதுரை வந்த அண்ணல் இரவு தங்குவதற்கு, என்.எம்.ஆர். சுப்பராமன் வீட்டிற்குச் சென்றார். செய்தி பரவியதால், நள்ளிரவு என்றும் பாராது அங்கேயும் மக்கள் கூடி விட்டனர். காந்தியடிகள் வீட்டின் தாழ்வாரத்தில் நின்று தரிசனம் கொடுத்த பின்னரே கூட்டம் கலைந்து சென்றது. அந்த வீட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

மகாகவி பாரதியார் பணியாற்றிய, நான் பயின்ற சேதுபதி பள்ளிக்கும் காந்தியடிகள் சென்று உள்ளார். மாணவர்கள் வரவேற்பு அளித்தனர் என்ற தகவல் அறிந்து மனமகிழ்ச்சி அடைந்தேன்.

தீண்டாமை எனும் நச்சு மரத்தின் ஆணிவேரை அழித்த திருவிதாங்கூர் மன்னர் அழைத்து சுதேச அரசில் உள்ள இந்து ஆலயங்களைத் தாழ்த்தப்பட்டவர்களின் வழிபாட்டிற்குத் திறந்து விட்டதைப் போற்றும் வகையில் அங்குள்ள சில ஆலயங்களில் வழிபாடு செய்ய வேண்டி அண்ணல் 1937 ஜனவரி 11 அன்று தொடர்வண்டியில் மதுரை வழியாகச் சென்றார். தீர்த்த யாத்திரை என்றே அண்ணல் அப்பயணத்தைக் குறிப்பிட்டார்.

மதுரை வந்தபோதெல்லாம் காந்தியடிகளை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும்படி பலரும் வற்புறுத்தி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சகோதரர்களையும் எல்லோரையும் மீனாட்சி கோயிலின் உள்ளே அனுமதித்த பிறகு தான் வருவேன். இப்போது வர மாட்டேன் என்று மறுத்துள்ளார்.

‘ஆலய பிரவேசம்’ நடந்து அனைவரும் ஆலயத்தில் அனுமதிக்கின்றனர் என்பதை அறிந்த பின்னர் மீனாட்சியம்மன் கோயில் சென்றார் காந்தியடிகள்.கோயில் உள்ளே இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு ஒன்று போதும் காந்தியடிகளின் உயர்ந்த உள்ளத்திற்கு சான்றாகும்.

அரையாடைக்கு மாறியதும் மதுரையில் தான் என்ற வரலாற்று உண்மை நூலில் விரிவாக உள்ளது. மதுரைக்குப் பெருமையாகவும் உள்ளது. தலைப்பாகை எடுக்க மாட்டேன் என்று நீதிமன்றத்தில் மறுத்தவர், பின்னர் எடுத்தவர், நம் நாட்டின் ஏழ்மை நிலை கண்டு அரையாடைக்கு மாறினார். இன்றைய அரசியல்வாதிகளும் காந்தியடிகளின் அரையாடைத் தத்துவத்தை உணர்வது நல்லது. ஆடம்பர ஆடை அவசியமற்றது என்பதை உணர வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தப்பின் அணியலாம். அதுவரை அணிதல் குற்றம் தானே. மதுரையில் காந்தி என்ற நூலின் மூலம் மதுரையின் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளார்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (2-Sep-20, 8:31 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 84

சிறந்த கட்டுரைகள்

மேலே