அன்பிற்குள் அடங்கு

மனிதா ஏதாவது ஒரு நியாயத்தை சொல்
நீ மற்றவரை வெறுப்பதற்கு ...............

உலகம் தோன்றியது முதல்
உலகத்தின் அழிவுவரை உன்னோடு பயணிக்கப்போகும்
உறவுகளை வெறுப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது ..............

தோளோடு தோளாய்
தோழமையோடு தோழமையாய் பயணிக்க
எதில் உனக்கு தயக்கம் ...............

பொதுப்பார்வையோடு பார்க்கவேண்டிய உலகத்தை
சுயநலத்தோடு நோக்கும் நோக்கில்தான்
வில்லங்கம் பிறக்கிறது ..............

எல்லோருக்குமானதை எனக்கானது என்ற
உரிமை கொண்டாடும் பொறுப்பற்ற போக்குதான்
அன்பிற்கான சவக்குழியை ஆரம்பிக்கிறது .................

ஆத்திரம் அடிதடி பொறாமை போன்ற செயல்களை
புதைகுழியில் போட்டு புதைக்க சொன்ன
ஆன்றோர்களின் அத்தனை ஆலோசனைகளையும்
அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டாய் நீ ..............

தேளை வளர்ப்பதற்கும்
தேனீக்களை வளர்ப்பதற்கும் உள்ள
வித்தியாசத்தை உணந்திருப்பாய் நீ ...................

புற்கள் நிறைந்திருக்கும்
சோலைவன பூங்காவில்
முற்களை வளர்த்தல் முடிவென்ன இருக்கும் என்று
என்றைக்கு உணரப்போகிறாய் நீ ..............

அன்பு கட்டளைக்குள் அடங்கிப்பார்
அத்தனை அரசாங்க சட்டங்கள் அவசியமற்றதாகிவிடும் ................

புன்முறுவலுக்கு வெகு சக்தி இருக்கிறது -
யார் ஒருவரின் அகமும் புறமும்
என்றைக்கும் புண்படாமல் பார்த்துக்கொள்ளும் அது .................

கல்லின் மீது கருணை காட்ட தெரிந்த உனக்கு
மனிதன் மீது மட்டும் ஏன் மாறுபட்ட சிந்தனை ...........

சிந்தனைக்கு சம்பந்தமில்லாத
எத்தனையோ காரணங்களை கூறினாலும்
வன்முறையும் வெறுப்பும் அருவருக்கத்தக்க ஒன்று என்பதை
உன் ஆழ்மனதில் பதிய வை ............

இழந்தவற்றில் எத்தனையோ இருக்கலாம்
அன்பு செலுத்துவதில் ஆழ்ந்திரு
அத்தனையும் ஒருநாள் திரும்ப வரும் ..................

இருக்கும் வரையில் எல்லோரும் உன் உறவுகள் என்று
உறவு கொண்டாடு
காலத்தின் கடைசி அடக்கத்திற்குள்
அன்புக்குள் அடங்க அதிரடியாய் முயற்சி செய்
அதற்காக இன்று முதல் நீ பயிற்சி செய் ..............

கவிஞர் சு . விநாயகமுருகன்

எழுதியவர் : விநாயகமுருகன் (3-Sep-20, 9:48 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 346

மேலே