எனக்குள் வெகுதூரம்

எனக்குள் வெகுதூரம்
மனச் சிறகேறி
எனக்குள் வெகுதூரம்
வேர் ஊன்றி விரிகின்றன
என் எண்ணக் கிளைகள்!
என் காலடி ஓசைகளும்
நிசப்தத்தின் நீளுறக்கத்தை
நீட்டிப்பதாய்!
ஆனந்தத்தின் எல்லை ஆரம்பம் எனும்
பெயர்ப் பதாகை ஆங்கே
வரவேற்கிறது
இரு கரம் கூப்பி என்னை!
எங்கெங்கிலும்
இரவின் பனியாடைகளை
உலரவைத்துக் கொண்டிருக்கிறது
விடியல்!
பசும்வெளி எங்கும்
பனி எழுதிய
துளிப்பாக்களை
ஊஞ்சலாடி ரசித்தவாறு காற்று!
பனித் துளிகளுக்குள்
தன் பிம்பம் பதித்து
மேக உடுப்பை
சரி செய்தவாறு வானம்!
நுரை பொங்கச் சிரிக்கும்
அருவிகளின் ஆர்ப்பரிப்போ
தனக்குள் அமைதிப் பூங்கா அமைத்து
அமர வைக்கிறது மனதை!
முகடு காட்டாது வாஞ்சையாய்
நிற்கும் மலைகள்
என் மமதையைத் திருடி
தன் மடிப்புக்குள்
ஒளித்துக் கொண்டதாய்!
மலர்களின் மணம் குளித்த மனது
இதழ் இமைக்கா
அதன் பார்வைக் கீற்றொலியில்
நாணத்தில் கூம்புகிறது மொட்டாய்!
இயற்கையின் பல் வர்ண ஜாலத்தில்
என் கோபத்தின் சாயங்கள்
நிறப்பிரிகையடைந்து
வெள்ளொளியாய்
அடங்கிப் போகிறது
மனப்பட்டகத்துள்!
தொலைந்து போன ”நான்”
அகப்படாது காற்றில்
துலாவிய கரங்களாய்
தான் மட்டும் மீள்கிறது மனது!
சு.உமாதேவி