கருணையான கதிரவன்

பவழமாய் இருக்கின்றாய் பகல் முடியும் வேளையிலே
அமிலமாய் தகிக்கின்றாய் அந்திக்கு முன் நேரத்திலே
அனைவருக்கும் உணவாக அன்றைய பொழுதினிலே
நிந்தைகள் செய்யாமல் சமநீதி வழங்கும் கோமகனே

நித்தமும் அனலாக நெடுங்காலமாய் நிலையாக
மாற்றங்களின் மரணங்களை மாறுந்தோறும் பார்த்து
ஆதி முதல் அந்தம் வரை அரிய நிகழ்வை காத்து
அரணாக அரவணைத்து அனைத்து உயிர் காப்பவனே

கொடிய காற்று அரிய மழைக்கு ஆனாய் நீ மூலமாக
கோடி ஆண்டு கடந்தலும் குறைவில்லாத இளமையாய்
கோள பூமி கோள்கள் போல் பலவற்றை காக்கின்றாய்
கோட்பாட்டில் குறைவின்றி குன்றைப்போல் நிற்பவனே

அதிசயத்தில் அதிசயம் நீ அள்ளி அணைக்க முடியலையே
அகிலத்திற்கு பிதாமகன் நீ உன்னிடம் பேச இயலலையே
அனலாக ஆனவனே அதனால் தான் வாழ்வு பெற்றோம்
அனைத்திற்கும் வித்து நீ தான் அகத்தினுள் உன்னை தொழுதோம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Sep-20, 10:34 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 56

மேலே