ஆதாமின் ஆப்பிள்
அப்போது ஏவாள் பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் கால் ரேகைகள் தண்ணீரை அழுத்திக் கொண்டிருந்தன.குளிர்ச்சியின் நடுக்கத்தில் உடல் உதறுகின்றது.ஆடைகளற்ற நிர்வாண மேனியை தடவித் தடவி பார்க்கிறாள்.இரத்தம் மெல்ல சூடாகி உடல் கொஞ்சம் சமநிலை அடைகிறது.கைகளை தேய்த்து தேய்த்து முகத்தில் வைத்துக் கொண்டாள்.வெப்பம் கண்ட உடலோடு தண்ணீருக்குள் மூழ்கினாள்.
காட்டின் பேரிரைச்சலில் உறக்கம் கலைந்து விழித்தெழுந்தான் ஆதாம்.உடலின் மீது சில பழுப்பிலைகள் உதிர்ந்திருந்தன.அதனை தட்டிவிட்டு மரத்திலிருந்து கீழ் இறங்கினான்.வெயிலின் முதல் ஒளி உடலைத் தொடுகிறது.வெளிச்சம் காட்டை விழிக்கச் செய்ய அவன் நடந்தபடியே இருந்தான்
குளித்தெழுந்த ஏவாள் தண்ணீரை வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாள்.உடலில் சொட்டிய ஈரத்தில் அவள் பிம்பம் தண்ணீரில் அலைபாய்கின்றது.வெளிச்சத்தின் நிழல் தண்ணீரில் கசிகின்றது.அவள் பார்த்தபடியே இருந்தாள்.இலை ஒன்றை ஏந்தியபடி தண்ணீர் அவள் காலருகே ஓடிவருகின்றது.குளிர்ந்த கரம் கொண்டு அதனைத் தொட்டெடுக்கிறாள்.ரேகைகளின் நடுவே ஈரமான இலை ஒட்டிக்கொண்டது.அதன் மேல் பாகம் நீண்டு முடிவில் குறுகலாக தோற்றமளிக்கிறது.ஒரு இதயத்தின் வடிவம்.அவள் அதனை மார்பில் ஒட்டிக் கொண்டாள்.அவள் இதயத்தின் நிழல் போல அது மார்போடு இருந்தது
ஆதாமுக்கு நாக்கு உலர்ந்தது.கால்களின் தளர்ச்சி பாதையை நீட்டிக்கச் செய்தது.பெரு மௌனம் காட்டை அலங்கரித்து கொண்டிருந்தது.அவன் சுவாசம் நிசப்தமாக இல்லை.மேல் மூச்சு வாங்குகிறது.சோர்வில் உடல் அமர்கின்றது.அந்த இடம் மட்டும் ஈரப்பதமாக இருந்தது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.அந்த மரத்தின் கிளைகளில் சில சிவப்பு நிற பழங்கள் பழுத்திருந்தன.கைக்கு எட்டிய உயரத்திலிருந்த பழத்தை ஆதாம் பறிக்கிறான்.உதிரத்தின் நிறத்திலிருந்த பழத்தை கடித்து நாக்கு சுவைத்து மகிழ்கிறது.பசியாற்றிய அம்மரத்திற்கு அவன் முத்தமிட கிளை ஒரு பழத்தை பரிசாக வழங்குகிறது.பசியடங்கிய ஆதாமால் மேற்கொண்டு பழத்தை உண்ணமுடியவில்லை.தொலைவில் அருவியின் குரல் காதில் விழுகின்றது.ஆப்பிளை உருட்டியபடியே ஆதாம் நடந்து செல்கிறான்
பாறைகளில் படுத்துக் கொண்டிருந்த ஏவாள் எதையோ முனுமுனுக்கிறாள்.அவள் சொற்களின் பரிணாமம் வளர்ச்சியடையவில்லை.காற்று குழப்பமடைகிறது.அருவியின் பேரிரைச்சல் நோக்கி காற்று திரும்பிட்டது.ஏவாளின் நிர்வாண உடலில் வெயில் படுகின்றது.உடலின் ஈரத்தை உறிஞ்சி தேகத்தில் வியர்வையை மேலெழுப்புகிறது.முலைகளின் மேல் வழிந்த வியர்வைத் துளியை அவள் கிள்ளி தூர எறிகின்றாள்.தொலைவில் கிளைகளில் நடுக்கம் தெறிக்கிறது.பறவைகள் தங்கள் பாஷைகளில் உலறுகின்றன.ஏவாள் பார்த்தபடியே இருந்தாள்
ஆதாம் உடலில் செடிகளின் கூரிய நுனிகள் கிழித்து இரத்தம் வழிந்தது.குமிழிடும் இரத்தத்தை தடவிப் பார்க்கிறான்.இளஞ்சூடாக ரோஜா இதழை கூழ் செய்தது போல இருந்தது.அவன் மரத்தின் கிளையை ஒடித்து வழியில் தென்பட்ட அனைத்து தடைகளையும் வீசியடிக்கிறான்.பறவைகள் கீச்சிட்டு கத்துகின்றன.அருவியின் விளிம்பை ஆதாம் எட்டிவிட்டான்.அவன் கால்பதித்த ஈர மண் உடலை குளிர்விக்கிறது
ஏவாள் ஆச்சரியம் அடங்காமல் பார்க்கிறாள்.தன் உருவையொத்த மாறுபட்ட தோற்றத்தில் ஒரு ஆண் உருவம்.அவன் கைகளில் உருட்டிக் கொண்டிருந்த ஆப்பிள் அவள் கவனத்தை ஈர்க்கிறது.ஈரத்தை மிதித்தபடி ஆதாமை நோக்கி நடந்து செல்கிறாள்.சலனமுற்ற தண்ணீர் சுழன்றபடியிருந்தது.
ஆதாம் பாறையில் படுத்திருந்த உருவை காண்கிறான்.தன் பிரதி போல ஒரு பிம்பம்.குழப்பம் மேலிட விழிக்கையில் பிம்பம் அசைந்தெழுகின்றது.விழிகளில் பார்வை கூர்மையடைகிறது.உதடுகள் முன்னும் பின்னும் சொற்களை அமைக்க முயல்கின்றன.குரல் மேலெழவில்லை.உடல் நடுங்குகிறது.அவன் வியர்வையை ஏந்திய நதி கடந்தபடியே இருந்தது.
இடைவெளிகளை குறுக்கி ஏவாள் நெருங்கி வந்தாள்.ஆதாமின் கையிலிருந்த ஆப்பிளை தன் வசமாக்கி நாசியினருகே கொண்டு செல்கிறாள்.உதடுகள் விரிவடைந்து சிரிப்பு கனிந்தது.முகர்ந்த ஆப்பிளை அவள் மீண்டும் தராது எடுத்துக் கொண்டு செல்கிறாள்.ஆதாம் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.மலையின் முகடுகளை நோக்கி அவள் பசும் புல்வெளியில் சென்றுக் கொண்டிருந்தாள்.
வழிந்த ஈரத்தின் வழித்தடங்களை பின்பற்றி ஆதாம் நடந்து செல்கிறான்.அவளின் முகம் அவன் நினைவில் சுழன்றபடியே இருந்தது.தொலைவில் ஒரு மலர் போல அவள் நின்றுக் கொண்டிருந்தாள்.அவள் சிரிப்பின் ஒலிகள் காற்றை குளிர்விக்கின்றன.வாயில் சொற்கள் மேலெழுகின்றது.கா.....த....ல்
பெரு முயற்சி செய்து சொற்களை இணைக்கிறான்.மொழியின் இனிமையோடு சொற்கள் பிறக்கின்றன.உதடுகள் தேய சொல்லியபடியே நடக்கிறான்.காற்று அவன் சொற்களை வழிநடத்துகிறது.
காதல்... காதல்... காதல்.... காதல்
ஆதாம் கத்தி தீர்க்கிறான்
ஏவாளுக்கு அந்த அணிலின் மீது ஏக்கம் பிறந்தது.ஆதாமிடம் பறித்த கனியை அணிலிடம் நீட்டுகிறாள்.அணில் கனியை தின்ன மறுக்கிறது.ஏவாள் அணிலின் முகத்தருகே நீட்டி நீட்டி முனுமுனுக்கிறாள்.அணில் முகர்ந்தபடியே இருந்தது.ஏவாள் ஆப்பிளை ஒரு கடி கடித்து பின் ஆப்பிளை அதனிடம் நீட்டுகிறாள்.அணில் சாப்பிட மறுத்து தாவிச் செல்கின்றது. அப்போது பெருங்கூச்சலோடு ஒரு குரல் காதில் விழுகின்றது.காதல்...காதல்...அந்த சொற்களின் இனிமையில் அவள் உதட்டில் புன்னகை மலர்கிறது.இமைகளை மூடி இரசிக்க தொடங்கினாள் ஏவாள்
புல்வெளியின் மத்தியில் வெளிர்ந்த இதழ்கள் கொண்ட மலரை ஆதாம் காண்கிறான்.மலரை பறிக்கையில் அதிலிருந்த முட்கள் அவன் கையில் குத்துகின்றன.ஆதாமின் இரத்தம் அதன் இதழ்களின் மீது உதிர்ந்து மலர் சிவக்கின்றது.ஆதாமின் குரல் வலுத்தொலிக்கிறது.. காதல்... காதல்
குரலின் இனிமையை கேட்டு சொக்கிப் போன ஏவாளை அணில் சீண்டுகிறது. விழிதிறந்து காண்கிறாள் ஏவாள்.ஏவாளின் நாணத்தை முதன்முறையாக கண்ட அணிலிடம் குழப்பம் பிறக்கிறது.யாரோ ஒருவரின் குரல் காதுகளை ஓயாது தீண்டுகிறது.அவஸ்தையுற்ற அணில் மறுகிளைக்கு தாவிச் செல்கிறது.ஏவாள் தன்னிலை மறந்து நின்றுகொண்டிருந்தாள்
ஆதாம் ஏவாளை நெருங்கி விட்டான்.ஏவாள் கேட்காமலே அவள் கரங்களில் அவன் ஏந்திய மலரை கொடுக்கிறான்.அவன் உதடுகள் சொற்களை இன்னும் உரத்து ஒலிக்கின்றன.அவள் கையிலிருந்த ஆப்பிள் பசியை கிளப்புகிறது.அவள் கடித்த இடத்தில் பற்களை வைத்து கொறிக்க தொடங்குகிறான்.இனிப்பின் சுவையை நாக்கின் நுனி உணர்கின்றது.ஆதாமுக்கு சிரிப்பு மலர்கிறது
நாணம் வடிய மலரை பெற்ற ஏவாள் மலரை நுகர்கிறாள்.அவள் ஸ்பரிசம் உணர்ந்த மலர் முதன் முறையாக வாசம் பிறப்பிக்கிறது.சிவந்த இதழிலிருந்து ரோஜாமலரின் வாசம் காற்றில் தவழ்கிறது. ஏவாள் அதை சுவாசத்தோடு இழுத்துக் கொண்டாள்.
அவள் கரங்களில் மீண்டும் ஆப்பிளை ஒப்படைக்கிறான் ஆதாம்.அவள் நுனிவிரல் பட்டு அவள் தேகத்தில் அனல் பரவுகின்றது.அவன் மீசையில் ஒட்டிக் கொண்டிருந்த ஆப்பிளின் சிறுதுண்டை காண்கிறாள் ஏவாள்.அதை எடுக்குமாறு செய்கை செய்கிறாள்.ஆதாம் அவள் சொல்வதின் பொருள் புரியாமல் விழிக்கிறான்.தன் வாய்க்கொண்டு அவன் மீசையில் ஒட்டிக்கொண்டிருந்த ஆப்பிள் துண்டை சுவைக்க முயல்கிறாள்.அவள் கீழ் உதடு ஆதாமின் மேல் உதட்டில் உரசுகின்றது.காதலர்களின் முதல் முத்தத்தை அப்போது அணில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.ஆதாமின் முனுமுனுப்பை காற்று நன்குணர்கிறது.காதல்..காதல்..
ஏவாளின் நெருக்கமும் அவள் இதழின் ஸ்பரிசமும் ஆதாமை நிலைகுலையச் செய்தன.அவன் பிரக்ஞையற்று விழித்துக்கொண்டிருந்தான்.தன் மார்பில் ஒட்டிக்கொண்டிருந்த இதய வடிவிலிருந்த இலையை காண்கிறான்.ஏவாள் அது தன்னுடையதென சைகை செய்கிறாள்.ஆதாம் தர மறுத்து மார்போடு அழுத்திக் கொள்கிறான்.இலையின் குளுமை மனதை நனைக்கிறது.ஆதாம் முனுமுனுத்தான்... காதல்... காதல்
ஆப்பிளை கடித்துக் கொண்டிருந்த ஏவாளின் உதடுகள் நடுங்குகிறது.சிசு ஜனிப்பதைப் போல அவள் உதட்டிலிருந்து அதிர்வோடு மொழி பிறக்க தொடங்கிறது.சொல்லின் வடிவை ஆதாம் சீர்செய்கிறான்.காலம் நீட்டித்து அவள் சொல்லின் பொருள் காற்றுக்கு புலப்படுகின்றது.காற்றின் பெருவெளியில் இருவரின் குரலும் மாறிமாறி ஒலிக்கின்றது
காதல்
முற்றும்.