அறிவுக்கு தெரிஞ்சா உணர்வு தப்பு பண்ணாது

இரவு 10 மணிக்கு சிவராமன் வந்தார் .காத்திருந்த ரம்யா அவர் சாப்பிட டிபன் எடுத்து வைத்தாள்.கை கால் அலம்பி கொண்டு இரவு உடை உடுத்திக் கொண்டு வந்த சிவராமன் மதுமிதா தூங்கி விட்டாளா? என்றார்.
அவள் 8 மணிக்கே தூங்கிட்டாங்க.நீங்க சாப்பிடுங்க.
இரு புள்ளைய பார்த்துட்டு வரேன் .காலையில பேங்குக்கு போகும்போது பார்த்தது.
ஆமாம் தினமும் இப்படித்தான்.
என்ன பண்றது .தனியார் பேங்கில் வேலை .எல்லா வேலையும்அப்படித்தான் இருக்கு .சொல்லிக்கொண்டே படுக்கை அறை கதவை திறந்துகொண்டு உள்ளே போய் படுக்கையில் பார்த்தார். சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்அவரின் ஒரே செல்வமகள் மதுமிதா .அவள் கன்னத்தை தடவி முத்தம் கொடுத்துவிட்டு திரும்பினார் .அவளின் வலது புறம் தலையணை பக்கமாக அந்த செல்போன் கிடந்தது .அதை எடுத்து பக்கத்தில் உள்ள டீபாயில் வைத்துவிட்டு வந்தார்.
என்னங்க செல்ல மகளைபார்த்தாச்சா? உட்காருங்க சாப்பிடலாம்.
சாப்பிடலாமா ?ஏன் இன்னும் நீ சாப்பிடலையா?
இல்ல.
நான் தான் சொல்லி இருக்கேன் இல்ல. நான் எப்ப வருவேன்னு தெரியாது. நீ பசியோடு இருக்காதே. சாப்பிடன்னு.
ஒன்றும் பேசாமல் ஹாட் பேக்கில் இருந்த இட்லியை இரண்டு பேருக்கும் ஆக எடுத்து வைத்து ஆறி போயிருந்த சாம்பாரை ஊற்றினாள்.
ஏன் ரம்யா முகம் வாடி இருக்கு. பசியா? சாப்பிட்டு இருக்கலாம் இல்ல.
சாப்பிட தோணலையே.
ஏன்?
மனசு சரி இல்லைங்க.
ஏன் ?என்னாச்சு ?யார் என்ன சொன்னா? என்ன பிரச்சனை?
ஒண்ணுமில்ல சாப்பிடுங்க.
இல்ல ரம்யாஉன்முகமேசரியில்லையே?
சொல்றேன் இல்ல சாப்பிடுங்க.
எதுவானாலும் அவள் சொல்வாள் .எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது தான் சொல்வாள். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் அவளைப்பற்றி புரிந்து கொண்டிருந்த சிவராமன் மௌனமாக சாப்பிட்டு எழுந்தார்.
என்னங்க சாப்பிடும் போது எந்த பிரச்சனையும் சொல்லக்கூடாது ..என்னன்னு சொல்லு சொல்லுன்னு கேட்கிறீங்க.வேலை முடிச்சு கலைச்சி வீடு வந்த ஆம்பள நிம்மதியாக சாப்பிட்டப்புறம்தான் நான் எதுவா இருந்தாலும் பேசுவேன்னு உங்களுக்கு தெரியாதா?
தெரியும் ரம்யா. சொல்லு என்ன பிரச்சனை?
நம்ம பொண்ணுக்கு என்ன வயசு?
இது என்ன கேள்வி ஒன்பது நடக்குது.
‌ அவ செல்லுல பார்க்க கூடாததை எல்லாம் பார்க்குறாங்க. அவ வழி தவறி போயிடுவாளோன்னு பயமா இருக்குங்க. கண்கலங்க அவரைப் பார்த்தாள் ரம்யா.
ரம்யாவின் தோளில் கை வைத்த சிவராமன் கவலைப்படாதே ரம்யா .இன்னைக்கு டெக்னாலஜி வளர்ந்து பூதமாய் இருக்கு .எந்த வகையிலும் தடுக்க முடியாது.
அப்படின்னா இந்த வயசிலேயே......?
ஆமாம் இந்த வயசிலேயே இல்லறம் என்றால் என்ன ?ஆண் உடம்புக்கும் பெண் உடம்புக்கும் என்ன வித்தியாசம் ?சினிமாவுல அடிக்கடி சொல்லுவாங்களே கெமிஸ்ட்ரி ஒர்க் ஆயிடுச்சுன்னு அப்படின்னா என்ன?
என்னங்க நீங்க பாடம் எடுக்கிறீங்க?
ஆமாம் ரம்யா பாடம் தான் எடுக்க சொல்றேன். நான் இல்லை. நீ .நம்ம மகளுக்கு நாளையிலிருந்து உட்கார வச்சி மனித உடலைச் சார்ந்த அணாடமியை விரசமே இல்லாம சொல்லிக்கொடு.கவர்ச்சிபோயிடும்.சைன்ஸ் புரிஞ்சிடும் .அதனால ஏற்படுற பிரச்சனைகள் அவமானங்கள் உடல் மாற்றங்கள் சமுதாயப் பார்வையில் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் எல்லாமே புரிஞ்சா அவ வயசுக்கு வரத்துக்கும் இதை புரிந்து கொள்வதற்கும் சரியா இருக்கும் .பயப்படாதே ரம்யா " அறிவு புரிஞ்சுகிட்டா உணர்வு தப்பு பண்ணாது"
ரம்யா கணவனை அர்த்தத்தோடு பார்த்தாள்.
நிம்மதியா படுத்து தூங்கு. என விளக்கை அணைத்தான் சிவராமன்.
*******************************

எழுதியவர் : சு.இராமஜோதி (19-Sep-20, 10:57 am)
பார்வை : 208

மேலே