இந்த பாவம் யார் கணக்கு

ஒரு காலத்தில் ராஜா ஒருவன் சிறந்தமுறையில்ஆட்சி புரிந்துவந்தான்.
குறிப்பாக தினமும் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து, அதன் பிறகுதான் உணவு அருந்த செல்வான். ஒரு நாள் அன்னதானம் செய்யும் போது, அன்னதானம் செய்யும் இடத்திற்கு மேலே, கழுகு ஒன்று தன் பசிக்காக பாம்பை கொத்தி கொண்டு வானத்தின் மேலே பறந்து சென்றது.

அப்போது பாம்பு கழுகின் வாயிலிருந்து தப்பிக்க திமிறியது. திமிறிய பாம்பின் வாயில் இருந்து வெளிவந்த விஷம், அன்னதான குண்டாவில் விழுந்தது. இதனை யாரும் கவனிக்க முடியவில்லை. அன்னதானம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. அதில் பாம்பின் விஷமும் கலந்து விட்டது. விஷம் கலந்த பகுதி உணவாக கிடைக்க பெற்றவர், அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி கீழே வீழ்ந்து இறந்து விட்டார்.

அங்கிருந்த எல்லோரும் கலவரம் அடைந்து வேதனை கொண்டார்கள். ராஜாவும் மிகவும் கவலை கொண்டு, அன்னதானத்தை நிறுத்தும்படி கூறிவிட்டு அரண்மனைக்கு திரும்பி விட்டார். இந்த சம்பவத்தை எமலோகத்தில் இருந்த சித்திரகுப்தன் கவனித்து வந்தான். அவனுக்கு ஒரே குழப்பம், இந்த பாவ செயலை யார் கணக்கில் வரவு வைப்பது என்று குழம்பி போனான்.

இந்த பாவ செயலை அன்னதானம் செய்த அரசன் கணக்கில் வைக்க முடியாது. தன் பசிக்காக பாம்பை கவ்வி சென்ற கழுகின் கணக்கிலும் வைக்க முடியாது. பாம்பும் கழுகின் பிடியில் இருந்து தப்பிக்க திமிரும் போது, அதன் விஷம் வெளியேறி அன்னதான குண்டாவில் விழுந்து விட்டது. இதற்காக பாம்பை பொறுப்பாக்கி இந்த பாவ கணக்கை அதன் மீதும் வரவு வைக்க முடியாது. மொத்தத்தில் சித்திரகுப்தன் குழம்பி போய், எமனிடம் சென்று நடந்தவை அனைத்தையும் கூறினான்.

எமதர்மனும் சற்று குழம்பி போய், பதில் சொல்ல முடியாமல் யோசித்தான், சரி சித்திரகுப்தா, இந்த பாவ செயலை யார் கணக்கில் பற்று வைப்பது என்று இன்னும் இரண்டு நாளில் கூறுகிறேன். சரி ராஜா என்று கூறி சித்திரகுப்தன் சென்றான்.

சரியாக இரண்டு நாள் கழித்து, வெளி ஊரில் இருந்து வந்த இரண்டு சாதுக்கள், ராஜாவின் அரண்மனைக்கு செல்லும் வழியை அங்கிருந்த பூ வியாபாரம் செய்யும் பெண்மணியை பார்த்து கேட்டார்கள். அவளும் அந்த சாதுக்களுக்கு வழியை கூறிவிட்டு, அத்தோடு ராஜா கொடுத்த அன்னதானத்தை வாங்கி சாப்பிட்ட ஒருவர் இறந்து போன விஷயத்தையும் கூறினாள். இந்த சம்பவத்தை கவனித்து கொண்டிருந்த எமதர்மன் உடனே சித்திரகுப்தனை அழைத்து அந்த பாவ கணக்கை இந்த பூ விற்கும் பெண்மணியின் கணக்கில் வரவு வைக்கவும் என்றார்.

பிரபு எனக்கு சற்று புரியும்படி விளக்கவும் என்றான். சித்திரகுப்தா, இந்த பெண்மணி, அரண்மனையில் நடந்த விவரம் எதுவும் தெரியாமல், அந்த உயிர் இழப்புக்கு காரணம் ராஜாதான் என்று தவறான தகவல் கொடுத்து ஒருவரது மாண்பை களங்கப்படுத்தி விட்டாள். எனவே அந்த பாவ செயலின் கர்ம பலனை இந்த பெண்மணியின் பாவ கணக்கில் சேர்த்து விடு என்று கூறினார்.
இந்த கதையின் கருத்து வள்ளுவன் கூறுவது போல்,,,

கண் நின்று கண்ணறச்சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின்நோக்கச் சொல்

அதாவது, ஒருவனை நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாக பேசினாலும் பேசலாம், ஆனால் நேரில் இல்லாதபோது, பின்விளைவை கருதாமல் எந்த பழியும் சொல்லக்கூடாது.
--கோவை சுபா
.

எழுதியவர் : கோவை சுபா (20-Sep-20, 12:21 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 237

மேலே