வாழ்ந்திடு உன் விருப்பப்படி

இந்த பூமியில் இந்த வாழ்வு
இன்னும் எத்தனை நாட்களோ....?

வந்த நாள்முதல் உனக்காய் வாழ்ந்த நாட்கள்
எத்தனை எத்தனையோ?
எண்ணிப் பார்த்தால்
விடையாய் கிட்டுவது சூனியமே.....

அறியா குழந்தைப் பருவம்
பெற்றவர்கள் வழிகாட்டுதல்படி.....
அறிந்த குமரப்பருவம்
உடனிருப்புகள் விருப்பப்படி......
மணவாழ்வில் துணைநலம் அன்பு ஆளுமையின்படி.....
பணிச்சூழலில் தலைமை கட்டளைப்படி....
ஊருக்குள் உற்றார் உறவுகள் கௌரவப்படி.....

உடுப்பதும் உண்பதும் உறங்குவதும்
பிறர் மனம் மெச்சும்படி...
பேசுவதும் சிரிப்பதும் அழுவதும்
பிறர் உன்னை கவனிக்கும்படி....
நிற்பதும் நடப்பதும் ஓடுவதும்
பிறர் முன்னால் உன்னை உயர்த்தும்படி...
சேர்ப்பதும் சேமிப்பதும் பாதுகாப்பதும்
பிறர் காட்டிலும் உன் சந்ததியை உயர்த்தும்படி...

இப்படி வாழ்வில் அடிவைத்தப் படிகள்
அத்தனையும் அத்தனையும்
அடுத்தவர் பார்வைப்படி
இனியேனுன் வாழப்படி
உன் உள்ளம் சொல்லும்படி
உன்வாழ்வு நகரும் உன்விருப்பப்படி

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-Sep-20, 2:01 pm)
பார்வை : 195

மேலே