சத விகரம்

பெண்ணைப் பற்றிய ஒரு சண்டையிலே, சகோதரர் சிலர் மாண்டுவிட, அவர்களின் அறியாமைக்கு இரங்கிக் கவி காளமேகம் கூறிய செய்யுள் இது.

நேரிசை வெண்பா

வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவும்
கோலமுடி மன்னர் குறைந்ததுவும் - சால
மதியுடைய நூற்றொருவர் மாண்டதுவும் ஐயோ
சதவிகரத் தால்வந்த தாழ்வு. 185

- கவி காளமேகம்

பொருளுரை:

'வாலி' என்பவன் முன்னாளிலே மடிந்ததுவும், வல்லமையுள்ள அரக்கர்கள் அந் நாளிலே இறந்ததுவும், அழகிய முடி மன்னர்கள் பலர் போரிலே வெட்டுண்டதுவும், மிகுந்த அறிவினை உடையவரான துரியோதனாதியர் மாண்டதுவும் எல்லாம், ஐயோ! சதவிகரத்தால் (சதியால் - பெண்ணைப் பற்றிய செயலால்) வந்துற்ற வீழ்ச்சியே!

துரியோதனாதியர் நூற்றுவரே என்னும், நூற்றொருவர் என்கிறார் கவிஞர். இது குந்தி புத்திரனான கர்ணனையும் சேர்த்துச் சொல்லியது.

சத விகரம் என்பது சகரம் எனவும், தகர இகரம் பிரிவுபடும். ஆதலால் சதி என்றனம்! மதியுடைய என்ற சொல், சிறந்த ஆன்றோரைத் துணையாகவுடைய எனவும் பொருள்படும். 'நூற்றுவர்கள் மாண்டதுவும் எனவும் பாடம்; சதி விரகம் - பிறருடைய மனைவிமேற் கொள்ளும் காமம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-20, 6:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே