குமரேச சதகம் – வீணுக்குழைத்தல் - பாடல் 92

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

குயில்முட்டை தனதென்று காக்கை அடைகாக்கும்
குணம்போலும் ஈக்கள் எல்லாம்
கூடியே தாம்உண்ண வேண்டும்என் றேதினம்
கூடுய்த்த நறவுபோலும்

பயில்சோர ருக்குப் பிறந்திடத் தாம்பெற்ற
பாலன்என் றுட்கருதியே
பாராட்டி முத்தம்இட் டன்பாய் வளர்த்திடும்
பண்பிலாப் புருடர்போலும்

துயிலின்றி நிதிகளைத் தேடியே ஒருவர்பால்
தொட்டுத் தெரித்திடாமல்
தொகைபண்ணி வைத்திடுவர் கைக்கொண்டு போகவரு
சொந்தமா னவர்வேறுகாண்

வயிரமொடு சூரனைச் சங்கார மேசெய்து
வானவர்க் குதவுதலைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 92

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

சூரனைச் சினந்து வீழ்த்தித் தேவர்களுக்குத் துணைபுரிந்த முதல்வனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

குயிலின் முட்டையைத் தன்னுடையது என்று நினைத்துக் காகம் அடைகாக்கும் தன்மையைப் போலும், எல்லா ஈக்களும் சேர்ந்து தாங்கள் பருகவேண்டும் என்று நினைத்து நாள்தோறும் கூட்டிற் கொண்டு வைத்த தேனைப் போலவும்,

(தம் மனைவியருடன்) கலந்த கள்ளக்காதலருக்குப் பிறந்த பிள்ளையைத் தாங்கள் பெற்ற மகன் என்று மனத்தில் எண்ணி, கொண்டாடி முத்தம் கொடுத்து அன்புடன் வளர்க்கின்ற மனித இயல்பு இல்லாத ஆடவர்களைப் போலும்,

தூக்கம் இல்லாமற் செல்வத்தை ஈட்டி ஒருவர்க்கும் அணுவளவும் கொடுக்காமல், தொகைதொகையாக எண்ணி வைத்திடுவர் (சிலர்), (அப்பொருளை) எடுத்துக் கொண்டு போக வருகின்ற உரிமையாளர் வேறாவார்.

கருத்து:

பிறருக்குக் கொடுத்துத் தாமும் உண்ணாமற் சேர்த்து வைப்பவர் பொருளை மற்றவரே அனுபவிப்பார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Sep-20, 1:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 77

சிறந்த கட்டுரைகள்

மேலே