நெஞ்சம் கரவாய்ப் பழகிவரின் அவமதிப்பே சேரும் பெரிதாய்ச் செறிந்து - கரவு, தருமதீபிகை 651

நேரிசை வெண்பா

நெஞ்சம் கரவாய் நெடிது பழகிவரின்
வஞ்சன் எனவே வசைவளரும் - தஞ்சமென
யாரும் அவனை அணுகார் அவமதிப்பே
சேரும் பெரிதாய்ச் செறிந்து. 651

- கரவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஒருவன் நெஞ்சம் கரவாய்ப் பழகிவரின் வஞ்சகன் என்னும் பழிவரும்; அவனை எவரும் மதியார்; எவ்வழியும் அவமதிப்பாய் இழிந்து தளர்ந்து அவன் கழிந்து தொலைவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவன் உள்ளமே காரணமாயுள்ளது. உள்ளுதல் நினைத்தல் எண்ணுதல் சிந்தித்தல் என்னும் அந்தரங்க வினைகளால் மனிதனுடைய அறிவு நிலைகள் தெரிய வருகின்றன. சிந்தனைகளை உயர்ந்த குறிக்கோள்களில் செலுத்தி வரும்பொழுது அந்த மனிதன் சிறந்த மேலோனாய் விளங்கி நிற்கிறான். அரிய உன்னத நிலைகளையெல்லாம் நல்ல உள்ளம் எளிதே அடைந்து கொள்கிறது. எவ்வழியும் விழுமிய நீர்மையோடு தழுவிவரின் அது எழுமையும் இன்பம் சுரந்து வரும்.

அற்புத சித்திகளையுடைய அத்தகைய உத்தம உள்ளத்தைக் கள்ளம் கபடு முதலிய இழிவுகளால் பழுது படுத்திவரின் அந்த மனித வாழ்வு பழிபடர்ந்து படர்கள் தொடர்ந்து பாழ்படுகின்றது. மனம் பழுதாக மனித இனம் பாழாகின்றது.

வஞ்சகம், சூது, கபடு முதலிய புன்மைகளால் .நெஞ்சம் புலையுற்று, தலைமையான நிலைமைகள் குன்றித் தாழ்ந்து படுகின்றது. கரவு என்னும் சொல் களவு, பொய், வஞ்சகங்களைக் குறித்து வருதலால் அதனையுடையவரது இழிவு தெரியலாம். சூது படியத் தீதுகள் படிகின்றன.

நேர்மை நல்ல நீர்மையாய்ச் சீர்மை தருகின்றது.
கரவு பொல்லாத புன்மையாய்ப் புலை புரிகின்றது.
உயர்ந்தோர் மேலோர் என ஒளி புரிந்துள்ளவர் எவரும் சிறந்த தன்மைகளினாலேயே செழித்து ஓங்கியிருக்கின்றனர்.

உள்ளத்தில் கரவுடையவர் இழிந்தவராய்க் கழிந்தே ஒழிந்துள்ளனர். வஞ்சகன், கபடன், குடிலன் என உலகில் பழி படிந்து உள்ளவர் யார்? உள்ளத்தில் கரவு படிந்தவரே அந்த எள்ளல் இழிவுகளை எதிரடைந்திருக்கின்றனர்.

கரவடர் சோரர் புரையோர் கட்டோர்
கரவர் பட்டிகர் திருடர் கள்வர். - பிங்கலந்தை

கள்வரைக் குறித்துப் பிங்கலமுனிவர் இங்ஙனம் உரைத்திருக்கிறார். உற்ற பெயர்கள் உண்மைகளை உணர்த்தியுள்ளன.

கரவுடையார் உலகில் எவ்வாறு இழிவடைந்து உழல்கின்றார் என்பது இதனால் உணரலாகும். நெஞ்சம் கரவாய்ப் பழகிவரின் அந்த மனிதன் அறிவு ஆண்மைகளில் உயர முடியாமல் அவலமாய் இழிந்தே நிற்கின்றான்.

கரவு, மனிதனை அறவும் சிறியவனாக்கி விடுகின்றது. கபட சிந்தனைகளால் அரிய பலகாரியங்களைச் சாதிப்பது போல் தெரிய வந்தாலும், இறுதியில் அவன் சிறுமையே அடைகின்றான். பழிவழி எவ்வழியும் இழிவே தருகிறது.

நெஞ்சில் நேர்மையுடையவர் யாண்டும் அஞ்சாமல் சிறந்த வீரர்களாய் நிலவி நிற்கின்றார். கரவுடையவர் எவ்வழியும் அஞ்சி இழிந்த பேடிகளாய் ஒதுங்கி உழல்கின்றார்.

’கள்ளமனம் துள்ளும்; கரவுள்ளம் துடிக்கும்’ என்பது பழமொழி. உள்ளத்தில் கரவுடையவர் உறுதியாளராய் நிற்க முடியாது; யாண்டும் தீனமாய் ஈனமடைந்தே நிற்பர் என்பதை இம்முதுமொழி மதிதெளிய உணர்த்தியுள்ளது. உள்ளே களவு படியவே வெளியே மனிதன் இளிவுபடுகின்றான்.

தன்னுடைய வஞ்சம் தன்னையே அஞ்சச் செய்தலால் கபடன் நெஞ்சம் துணிந்து எதையும் நேர் நின்று செய்ய மாட்டான். கரவாய் ஒளிந்திருந்தே இழிந்த காரியங்களை விழைந்து புரிவான். வஞ்சமுடையவன் அஞ்சி மறைகிறான்.

நேரிசை வெண்பா

நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25 - மூதுரை

உள்ளத்தில் கரவுடையவரது இழிநிலைமையை ஒளவையார் இவ்வாறு காட்டியிருக்கிறார். நஞ்சையுடைய பாம்பு அஞ்சி மறைந்து உறைதல் போல் நெஞ்சில் வஞ்சமுடையவர் கள்ளமாய்க் கரந்தேயிருப்பர் என்றதனால் அவரது எள்ளல் இழிவுகள் எதிரே தெரிய வந்தன. உள்ளம் இழிய உயர்வுகள் ஒழிகின்றன.

வஞ்சனையுடைய நெஞ்சம் நஞ்சு தோய்ந்தது போல் நாசத்துக்கே ஏதுவாகின்றது. அந்த நீசத்தை ஒழித்து ஒழுக வேண்டும். சிறிய புன்மைகள் நீங்கிய அளவே பெரிய மனிதன் ஆகின்றான். அவை நீங்கவில்லையானால் நவைகளே ஓங்கி நாசம் செய்கின்றன.

வஞ்சன் எனவே வசை வளரும். நெஞ்சில் கரவுடையவன் இவ்வாறு நீசப் பேரால் நிந்தனையுறுகிறான். செவ்வியன், செம்மையாளன், நேர்மையுடையவன் என்னும் மேன்மைகளை வஞ்சகன் இழந்து விடுகின்றான்..அவனுடைய வாழ்வும் சூழ்வும் எவ்வழியும் வசைகளாகவே வளர்ந்து வந்து பாழாய் அழிந்து போகின்றான். பழியான வஞ்சகங்களைப் பழகி இழி துயரங்களை அடைந்து ஈனமாய்ப் பாழ்படாமல் நேர்மையாய் ஒழுகிச் சீர்மை பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-20, 1:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே