கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் கவிஞர் இரா இரவி
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் என்றும் வாழ்வார் !
கவிஞர் இரா. இரவி !
*****
கவிமாமணி என்ற பட்டத்திற்கு ஏற்றபடி
கவிதைகளை மணி போல ஒலித்தவர்
வீரபாண்டிய கட்டபொம்மனைப் பார்த்ததில்லை
வீரபாண்டியன் போல் முழங்குவார் கவிதைகளை
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
மாமதுரையில் கவிஞர்களை வளர்த்தவர்
தமிழின்பால் உள்ள பற்றின் காரணமாக
தாம் பணிபுரிந்த வேலையில் விருப்பஓய்வு தந்தவர்
முழுநேரமும் தமிழுக்காக கர்ஜித்தவர்
மாநில முழுவதும் கவிஞர்களைத் திரட்டியவர்
மணியம்மை பள்ளியில் கவியரங்கம் நடத்தியவர்
மணியாக கவிதைகளை பாடி அழைத்தவர்
ஆயிரக்கணக்கான மேடைகள் கண்டவர்
அன்பு செலுத்துவதில் அன்னை தெரசா போன்றவர்
வளர்ந்து வரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்தவர்
வானளாவ புகழ்ந்து கவி வடிக்க வைத்தவர்
இவர் போல இனி ஒருவரும் பாட முடியாது
அவருக்கு இணை அவர் ஒருவர் மட்டுமே
வடமொழி சொற்களையும் எழுத்தையும் எதிர்த்தவர்
வண்டமிழ் காக்க நாளும் துடித்து எழுந்தவர்
தமிழ் காக்க முதல் குரல் தந்த தீரர்
தமிங்கிலம் ஒழிந்திட கவிதை யாத்தவர்
கலப்புத் தமிழை எந்நாளும் எதிர்த்தவர்
கற்கண்டுத் தமிழை என்றும் பாடியவர்
நரம்புகள் புடைக்க கவிதை பாடியவர்
நாடி நரம்புகளில் தமிழ்ப்பற்றை ஏற்றியவர்
உலகம் உள்ளவரை ஒப்பற்ற தமிழ் இருக்கும்
உலகில் தமிழ் உள்ளவரை தென்னவனார் புகழ் இருக்கும்
உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உன்னதப் கவிதைகளால் என்றும் வாழ்வார் உலகில்
--