பொல்லா நசையைப் புறம்போக்கின் எல்லா இசையும் எழும் - காமம், தருமதீபிகை 642

நேரிசை வெண்பா

புலன்வழி ஓடிப் புலையாடி னார்மேல்
நலனிழந்து நாசமே காண்பார் - நிலைதெளிந்து
பொல்லா நசையைப் புறம்போக்கின் அப்பொழுதே
எல்லா இசையும் எழும். 642

- காமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பொறி புலன்களில் வெறியராய் ஓடி உழல்பவர் அரிய நலன்களை இழந்து அவலமே காண்பார்; பொல்லாத நசையை ஒழித்தவர் எல்லா இசைகளையும் எய்தி இன்பம் உறுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனதை அடக்கி நெறியே செலுத்தி முறையோடு வாழ்ந்து வரும் மனிதன் சிறந்தவனாய் உயர்ந்து வருகிறான், மனம் போனபடி அலைந்து திரிபவன் இழிந்த விலங்காய்க் கழிந்து படுகிறான்.

பகுத்து நோக்கும் அறிவு மனிதனுக்கு உரிமையாய் அமைந்திருக்கிறது. நன்மை தீமைகளை நாடி அறிந்து நல்ல வழியில் செல்லவே மனிதன் கடமைப்பட்டிருக்கிறான்.

சென்ற இடத்தால் செலவிடாத் தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப(து) அறிவு, 422 அறிவுடைமை

மனிதனுடைய நல்ல அறிவுக்குப் பயனை வள்ளுவர் இவ்வாறு அறிவுறுத்தியிருக்கிறார் தீமைகளை நீக்கி நன்மையான வழிகளில் மனத்தைச் செம்மையாகச் செலுத்துவதே அறிவு என்றதனால் அவ்வாறு செய்யாதது அறிவு ஆகாது என்பது பெறப்பட்டது. அறிவின் மேல் வைத்துக் கூறியுள்ள விநயம் நுணுகி உணரவுரியது. இத்தகைய அறிவையுடையவனே அறிஞன், மற்றவன் மடையனே என்பது உய்த்துணர, அறிவுடைய மனிதனை நேரே நோக்கிக் கூறாமல் அறிவுக்கு இலக்கணத்தை விளக்கியருளினார்.. இயல்பு குன்றிய பொழுது மனிதன் மாடாயிழிந்து நிற்கிறான், அறிவின் காட்சி அளவே மனிதன் மாட்சி அடைந்து வருகிறான்.

குதிரையை அடக்கி நடத்தும் வீரன் போல மனத்தை வசமாய் நடத்திவரின் அந்த மனிதனுடைய வாழ்வு மாண்பு சுரந்து மகிமை நிறைந்து புகழும் இன்பமும் பொலிந்து திகழ்கின்றது.

மனம் வேகமாய் எதிலும் விரைந்து செல்லும் இயல்பினது; அதனை நல்ல வழியில் திருப்பிவிடின் நன்மைகள் விளைந்து வருமாதலால் அச்செயல் உயர்ந்த மகிமையாய் வியந்து புகழ வந்தது.

A man's nature runs either to herbs or weeds; therefore let him seasonably water the one, and destroy the other. - Bacon

'மனிதனுடைய சுபாவம் நல்லதிலும் செல்லும்; கெட்டதிலும் ஓடும்; ஆகவே கெட்டதைத் தடுத்து நல்லவழியில் அதனை அவன் செலுத்த வேண்டும்’ என பேக்கன் என்னும் ஆங்கிலப் புலவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்,

’தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு’ என்னும் திருக்குறட் கருத்தோடு இது ஒத்திருத்தல் உய்த்துணரத்தக்கது.

நலன் ஒன்றையும் நாடி அடையாமல் புலன்வழியே ஓடி அலைந்தால் அந்த வாழ்வு பழியுடையதாய்ப் பாழ்படுகின்றது. உயர்ந்த குறிக்கோளில்லாதது இழிந்ததாய் அழிந்து போகிறது.

துன்பத் தொடர்புகள் நீங்கி என்றும் நிலையான இன்ப நலனை அடைய நேர்ந்தவர் புலன்களை அடக்கியே உயர்ந்திருக்கின்றனர். இழிந்த இச்சைகள் ஒழிந்த பொழுதுதான் உயர்ந்த மேன்மைகள் ஒளிசெய்து வருகின்றன.

'புலன்ஐந்து மேயும் பொறிஐந்தும் நீங்கி
நலமந்த மில்ல(து) ஓர்நாடு புகுவீர்!' - திருவாய்மொழி

நம்மாழ்வார் இவ்வாறு நம்மை நோக்கிப் பாடியிருக்கிறார்,

"புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
புறம்புறமே திரியாதே போது நெஞ்சே!” - தேவாரம்

தம் நெஞ்சை நோக்கி அப்பர் இப்படி மறுகியிருக்கிறார்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்ததும் அஞ்சக மேபுகும்.
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சா(து) இறைவனை எய்தலு மாமே. - திருமந்திரம்

ஐம்புலன்களையும் வலியடக்கி ஒடுக்கிய பொழுதுதான் இன்ப நிலையமான இறைவனை எய்தலாம் எனத் திருமூலர் இங்ஙனம் ஒரு மூல நிலையை உணர்ந்து கூறியுள்ளார்.

கட்டளைக் கலித்துறை

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தயென்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்ட’ர்க்’கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்குங் கறைக்க’ண்’டனே. 32 நீத்தல் விண்ணப்பம், திருவாசகம்

புலன்களின் புலை நிலைகளை விளக்கி இறைவனை நோக்கி மாணிக்கவாசகர் இவ்வாறு உருகி உரையாடியிருத்தலால் அவற்றின் அடலும் மிடலும் ஆடலும் அறியலாகும்.

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம்மனக்
காட்டைத் திருத்திக் கரைகாண்ப(து) எந்நாளோ?
ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த
தெய்வ அறிவே சிவமே பராபரமே! – தாயுமானவர்

புலன்களின் துயரையும் இறைவனது அருளையும் இங்ஙனம் நினைந்து தாயுமானவர் மனம் கரைந்து கூறியுள்ள இதில் அவரது புனிதமான அனுபவ நிலையைக் கூர்ந்து ஓர்ந்து கொள்கிறோம்.

மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத சிறியேன். - சிவபுராணம்

உள்ளம் புலன்வழி இழியின் உயிர் உயர்நிலையை அடைய முடியாது என்பதை இது உணர்த்தியுள்ளது. அரிய பெரியாருடைய அனுபவ மொழிகள் விழுமிய உண்மைகளை வெளியே தெளிவாக்கி உலகம் உய்ய வந்துள்ளமையால் நாளும் சிந்தனை செய்து நன்கு உணரவுரியன.

மறம்திகழும் மனம்ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர்ப்பாரத் துன்பம்
துறந்திருமுப் பொழுதேத்தி எல்லை யில்லாத்
தொன்னெறிக் கண்நிலை நின்ற தொண்டர்’ – பெருமாள் திருமொழி

குலசேகர ஆழ்வார் இவ்வாறு கூறியிருக்கிறார்.

புலன்களை அடக்கிப் பரம சிந்தனையுடன் உயர்ந்த மேன்மையை அடைந்து கொள்பவரே சிறந்த மகான்கள் என்றதனால் வாழ்வின் குறிக்கோளும் பிறப்பின் பேறும் அறிய வந்தன. புல்லிய காம இச்சையை ஒழித்துப் புனிதமான சேம நிலையைப் பெறுவதே மனித வாழ்வின் மருமமாய் மருவியுள்ளது.

பொல்லா நசையைப் புறம்போக்கின் அப்பொழுதே
எல்லா இசையும் எழும்.

அவலமான ஆசைகள் ஒழியின் உள்ளம் தேசடைந்து தெளிந்து, உயிர் உயர்நிலைகளை அடைந்து மகிழ்கின்றது. துயரங்கள் யாவும் நீங்கி என்றும் இனியனாய் மனிதன் உய்தி பெற வேண்டின் கொடிய நசைகளைக் கடிது களைந்து முடிவு காண வேண்டும்.

இன்ப நலங்கள் விளைய இனிது ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-20, 8:51 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே