குமரேச சதகம் – நல்லோர் முறை - பாடல் 96

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கூடியே சோதரர்கள் வாழ்தலா லும்தகு
குழந்தைபல பெறுதலாலும்
குணமாக வேபிச்சை யிட்டுண்கை யாலும்
கொளும்பிதிர்க் கிடுதலாலும்

தேடியே தெய்வங்க ளுக்கீத லாலும்
தியாகம் கொடுத்தலாலும்
சிறியோர்கள் செய்திடும் பிழையைப் பொறுத்துச்
சினத்தைத் தவிர்த்தலாலும்

நாடியே தாழ்வாய் வணங்கிடுத லாலுமிக
நல்வார்த்தை சொல்லலாலும்
நன்மையே தருமலால் தாழ்ச்சிகள் வராஇவை
நல்லோர்கள் செயும்முறைமைகாண்

வாடிமனம் நொந்துதமிழ் சொன்னநக் கீரன்முன்
வந்துதவி செய்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 96

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

உளம் சோர்ந்து (திரு முருகாற்றுப் படையெனும்) தமிழ்ப்பாவைப் பாடிய நக்கீரன்முன் எழுந்தருளி அருள்புரிந்த முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

உடன்பிறந்ததோர் ஒன்றாகக் குடிநடத்துவதாலும், பல நல்ல மக்களைப் பெறுவதாலும், நற்பண்புடன் வறியவர்களுக்கு ஈந்து சாப்பிடுவதாலும், ஏற்றுக் கொள்ளும் தென்புலத்தார்க்குக் கொடுப்பதாலும்,

தெய்வங்களை நாடி வழிபாட்டுப் பொருள் கொடுப்பதாலும், வறியோர்க்கு வழங்குவதாலும், (அறிவிற்) சிறியோர் புரியும் தப்புகளை மன்னித்துச் சீற்றத்தை விடுதலாலும்,

(பெரியோரைத்) தேடித் தாழ்ந்து வணங்குவதாலும், சாலவும் இனிய மொழி இயம்பலாலும் நன்மையே உண்டாகுமன்றிக் குறைவுகள் உண்டாகமாட்டா; இவைகள் நல்லோர்களின் இயல்புகள்.

விளக்கவுரை:

தென்புலத்தார் (பிதிரர்) நம் முன்னோர்களில் இறந்தவர்கள். அவர்களுக்கு இடுதலாவது அவர்களுடைய ஆன்மா அமைதியடைய வறியோருக்குக் கொடுத்தல்.

‘தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்(கு)
ஐம்புலத்தா றோம்பல் தலை' என்றார் வள்ளுவர்.

நக்கீரனுக்கு அருளிய கதை:

திருத்தல யாத்திரை சென்ற நக்கீரர் ஒரு பொய்கைக் கரை மீது சிவபூசை செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பொய்கையில் ஓரிலை ஆலமரத்திலிருந்து விழுந்தது. அது தண்ணீருக்குள் மறைந்த பகுதி மீனாகவும் மறையாத பாகம் பறவையாகவும் மாறியது. அவ்வியப்பினாலே சிவபூசையில் வழுவிய நக்கீரரைக் குதிரை முகமுடைய பெண்பூதம் ஒன்று தூக்கிச் சென்று குகையில் வைத்துச் சென்றது. அதற்குமுன் பலர் அவ்வாறு அங்கு அகப்பட்டிருந்தனர். எல்லோரையும் பூதம் கொல்லும் என்று அறிந்த நக்கீரர் மனம் நொந்து திருமுருகாற்றுப்படை பாடினார். முருகன் வேலை யேவி அப்பூதத்தைக் கொன்றார். இவ்வாறுள்ள புராணக்கதை இங்குக் குறிப்பிடப்படுகிறது.

கருத்து:

ஒற்றுமையாக வாழ்வது முதலாக இங்குக் கூறப்பட்டவை நல்லோருடைய பண்புகள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-20, 9:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 105

சிறந்த கட்டுரைகள்

மேலே