ஒருத்தி போட்டாளே - நேரிசை வெண்பா

கும்பகோணத்திலே, ஒரு சமயம் ஒரு பெரிய சோறூட்டு விழா நடந்தது. அந்தச் சோறூட்டு விழாவிற் கவி காளமேகமும் கலந்து கொண்டார். பந்தி பந்தியாக அமர்ந்து அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு நிகழ்ச்சி நடந்தது. தலையின் முன்புறத்தில் குடுமி வைக்கும் வழக்கமுடைய ஒருவன், கவிஞருக்கு அருகிலேயே இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய குடுமி திடுமென அவிழ்ந்து இலையிலும் போய் விழுந்தது. தன் தலைமயிரை எடுத்து அவன் உதறவே, எச்சிற் பருக்கைகளுள் சில காளமேகத்தின் இலையிலும் போய் விழுந்தன. அதனால் அவனை இப்படிப் பாடி நிந்திக்கிறார் கவிஞர்.

நேரிசை வெண்பா

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய். 189

"கட்டவிழ்ந்து போன முன் குடுமியினையுடைய சோழியனே! சோற்றுப்பொருக்கு காய்ந்து அகலாதே ஒட்டிக் கொண்டிருக்கும் வாயனே! இழிந்தவனே! திருக்குடந்தை நகரின் கோட்டானே! நாயே! குரங்கே! ஒருத்தி, வேறு வேலையற்றுப் போய் உன்னையும் ஒரு பிள்ளையாகப் பெற்றுப் போட்டாளே? அவளை எப்படி நொந்து கொள்வது?"

சுருக்கு - தலைமுடியை அள்ளிச் செருகும் தன்மை.
பொருக்கு - காய்ந்துபோன பருக்கைகள்.
கோட்டான் - ஆந்தை

இந்தச் செய்யுள் அடியிற் கண்டபடியும் வழங்கும்.

நேரிசை வெண்பா

சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தை
நாயா நரியாவுன் னாய்முகமும் சேய்வடிவும்
தாயார்தான் கண்டிலளோ தான்? 189 அ

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-20, 11:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 113

மேலே