நேர்மை யழிந்து நெறியிழந்து நஞ்சகமாய் வாழ்தல் நவை - கரவு, தருமதீபிகை 652

நேரிசை வெண்பா

நேர்மை யழிந்து நெறியிழந்து நீர்மையொடு
சீர்மை ஒழிந்து சிறுமையாய் - ஓர்மைகுன்றி
வஞ்சகனென்(று) எவ்வழியும் வையத்தார் வைதுவர
நஞ்சகமாய் வாழ்தல் நவை. 652

- கரவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நெஞ்சில் வஞ்சகம் புகின் நேர்மை அழியும், நெறி ஒழியும், நீர்மை குன்றும்; சீர்மை பொன்றும், பான்மை பாழாம்; எவ்வழியும் சிறுமையாய் இழிவுகளே பெருகும்; உலகமும் இகழும்; இவ்வாறு பழியடைந்து வாழ்வது கொடிய இழிவாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், உள்ளம் இழியாமல் உயர்ந்து வாழுக என்கின்றது.

கோணல், கோட்டம் என்னும் மொழிகள் வழுவான இழிநிலைகளை உணர்த்தி வருகின்றன. மனக் கோட்டமே மனித இனத்தின் கேட்டுக்கு மூலகாரணமாயுள்ளது. மனம் கோணிய பொழுது அந்த மனித வாழ்வு எவ்வழியும் கோணலாய் இழிந்தே போகின்றது. ‘கோட்டமுடையது வாட்டம் அடைகிறது’ என்னும் பழமொழியால் அதன் அழிவுநிலை தெளிவாய் நின்றது.

அறிவு எவ்வளவு கூர்மையுடையதாயினும் உள்ளம் கோட்டமுடையதாயின் அது உயர்ந்த உண்மைகளை உணர முடியாது. மாசுபடிந்த கண்போல் தேசு படியாமல் அது தியங்கி நிற்கிறது. கூரிய அறிவு கோணலோடு கூடிய பொழுது வீரியமிழந்து வெறுமையுறுகிறது. வக்கிரபுத்தி என்று அது இழிக்கப்படுகிறது.

சிலரிடம் கூர்மையான அறிவு இருக்கிறது; இருந்தும் நேர்மை இல்லாமையால் சீர்மை குன்றிச் சிறுமையுற்று நிற்கின்றார். தமது வஞ்சகத்தால் உலக நிலையில் ஏதோ சில வசதிகளை அடைந்து கொள்ளலாமாயினும் ஆன்மநிலையில் முடிவாக அவர் அவலமே காண்கின்றார். வஞ்ச மினுக்கு வசையாய் முடிகிறது.

உயர்ந்த பதவியில் ஏறியிருந்தாலும் உள்ளம் கரவுடையவன் இழிந்தவனாகவே கருதப்படுகிறான். பேதை உலகில் அவன் பெருமையாய்க் காணப்படினும் மேதைகள் எதிரே மிகவும் சிறுமையாய் மெலிந்து நிற்கிறான். களவு இளிவையே காணுகிறது.

கரவுடையவன் சிறியனாய் இழிந்து சீரழிகின்றான். அஃது இல்லாதவன் பெரியனாயுயர்ந்து பெருநலங்கள் பெறுகின்றான்.

நேர்மை, செம்மை என்னும் மொழிகள் அதிக மேன்மையுடையன. “செம்மையின் ஆணி’ எனப் பரதனை இராமன் மனமுவந்து புகழ்ந்திருக்கிறான். நெஞ்சில் நேர்மையான செம்மையுடையவர் எவ்வளவு சீர்மையுடன் சிறப்படைந்துள்ளனர் என்பதை இதனால் உணர்ந்து கொள்கிறோம். சீர் திருந்திய செம்மை பார் திருந்தச் செய்கிறது. உள்ளம் செம்மையாய்ப் பண்பட்ட பொழுது அந்த நன்மையாளர் உலகில் ஒளி மிகுந்து திகழ்கின்றார்.

மனம் புனிதமானவரே மகான்களாய் உயர்ந்து மனுக்குலத்தை உயர்த்தி வருகிறார். அரிய மாட்சிகளை யெல்லாம் உரிமையோடு உதவவல்ல மனத்தைச் சிறிய புன்மைகளால் பழுதுபடுத்தி வருவது பரிதாபமாகின்றது. பாழான அது ஒழிய வேண்டும்.

’நேர்மை அழிந்து நெறி இழந்து‘ என்றது உள்ளத்தில் கரவு புகுந்தபொழுது உளவாகும் இழவுகளை உணர்த்தி நின்றது. இழிவு புகவே உயர்வுகள் ஒழிந்து போகின்றன. ஊனங்கள் பெருகி வருகின்றன.

நேர்மை, நெறி, நீர்மை, சீர்மை என்பன உயர்ந்த பண்பாடுகள். அவை சிறந்த மேன்மைகளை அருளவுரியன.

மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் ஒருமையாய்ச் செம்மை தோய்ந்து இருப்பது நேர்மை என வந்தது. இந்தச் செவ்விய தன்மையால் திவ்விய நன்மைகள் உளவாகின்றன. உள்ளும் புறமும் ஒழுங்காய் நேர்மை ஒளி செய்து நிற்றலால் அதனை உடையவர் அரிய மகிமைகளை எளிதே அடைந்து கொள்கின்றனர். உரிய ஒரு நீர்மையால் பெரிய சீர்மைகள் மருவுகின்றன. நேர்மையாளர் மேலோராய் மேலான கதிகளை அடைகின்றனர்.

இந் நீர்மை குன்றி உள்ளம் கரவாய் உள்ளவர் கீழோராயிழிந்து பாழே அழிந்து போகின்றார். விளைவு தெரியாமல் வீணே கள்ளம் புரிந்து வெந்துயர் உறுவது நிந்தனையாய் நின்றது.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் எள்ளத்தக்க இழிமக்களாகின்றார், கள்ளமின்றி நேர்மையாயிருப்பவர் சீர்மையான மேலோராய் யாண்டும் சிறப்படைந்து நிற்கின்றார்,

திரிகரண சுத்தி தெய்வீக நிலையமாய்ச் சிறந்து திகழ்கிறது. இந்தத் தூய்மை இழந்த அளவு சிறுமையும் தீமையும் மருவி நிற்கின்றன. மனத்தில் ஒன்றை வைத்து வாக்கில் மாறு பேசிச் செயலில் வேறு புரிவது சின்ன மக்களுடைய சிறு தொழில்களாயுள்ளன.

மனம் வேறு, சொல் வேறு, செயல் வேறாயிருப்பது கீழோர் இயல்பாம்; மனமும் சொல்லும் செயலும் மாறுபடாமல் நேர்மையாயிருப்பது மேலோர் நீர்மையாம்' என ஒரு ஆரியக் கவி ஓர்ந்து குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது.

மனம் கரவாயிழிந்த பொழுது வாக்கும் செயலும் அவ்வழியே வழிந்து போவதால் உள்ளக் கரவுடையவன் எல்லாவகையிலும் இழிந்து பொல்லாதவனாய்ப் புலையுறுகின்றான்.

துராத்துமாக்களுடைய புலையையும் மகாத்துமாக்களுடைய நிலையையும் இது நன்கு உணர்த்தியுள்ளது. குறிப்பு மொழிகள் கூரிய ஒளிகளாய்ச் சீரிய உண்மைகளை விளக்கியுள்ளன.

உள்ளம் கரவாயிழிந்தவர் துராத்துமாக்கள். அது நேர்மையாய் உயர்ந்தவர் மகாத்துமாக்கள் என்றதனால் கரவின் இழிவையும், நேர்மையின் உயர்வையும் தெரிந்து கொள்ளுகிறோம். இவ்வாறு இழிபழியையும் அழி துயரையும் தருகிற கரவை உறவாய்க் கொண்டு மனிதன் களித்து உழலுவது மாய வியப்பாயுள்னது.

நெஞ்சக் கரவு உன்னை நீசப்படுத்தும்; அதனை அஞ்சி ஒழித்து யாண்டும் நேர்மையோடு பழகிச் சீர்மையுடன் வாழுக. சீரிய வாழ்வு நேரிய நீர்மையில் நிலைத்து உள்ளது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-20, 9:59 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

சிறந்த கட்டுரைகள்

மேலே