சத்திரத்துச் சாப்பாடு - நேரிசை வெண்பா

நாகப்பட்டினத்தில் காத்தான் வருணகுலாதித்தன் சத்திரம் ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த காளமேகப்புலவர் உணவுக்காகச் சென்றார். பகலெல்லாம் காத்திருக்கச் செய்து, இரவில் நெடுநேரத்திற்குப் பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட்டார்கள். கவிஞரின் பொறுமை அதற்கு மேலும் நிலைபெறவில்லை. இப்படிப் பாடுகின்றார்.

நேரிசை வெண்பா

கத்து(க்)கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை யன்னம்
இலையிலிட வெள்ளி எழும். 190

- கவி காளமேகம்

பொருளுரை:

“ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினால் சூழப் பெற்றிருக்கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்தில், பொழுது மலைவாயிலிற் சென்று மறைகின்ற பொழுதிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஒர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்;

இதுவும் ஒரு சத்திரமோ? என்பது குறிப்பு"

இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன்செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத்திடமும் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அப்போது, கவிஞர் அவனுடைய மனமாற்றத்தைப் பாராட்டியவராகப் பொருளினை மாற்றி உரைத்து அவனை மனமகிழுமாறு செய்கின்றார்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-20, 12:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே