குமரேச சதகம் – அடைக்கலம் காத்தல் - பாடல் 97

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அஞ்சலென நாயினுடல் தருமன் சுமந்துமுன்
ஆற்றைக் கடத்துவித்தான்
அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்
அருச்சுனன் சமர்புரிந்தான்

தஞ்சமென வந்திடு புறாவுக்கு முன்சிபி
சரீரம் தனைக்கொடுத்தான்
தடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்
ததீசிமுது கென்பளித்தான்

இன்சொலுட னேபூத தயவுடையர் ஆயினோர்
எவருக்கும் ஆபத்திலே
இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்
திரங்கிரட் சிப்பரன்றோ

வஞ்சகிர வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
வளர்சூரன் உடல்கீண்டவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 97

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

வஞ்சகச் செயலுடைய கிரவுஞ்ச மலையையும் தாருகனையும் சிங்கமுகனையும் சூரனையும் உடலைப் பிளந்த வீரனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

முற்காலத்தில் அஞ்சாதே என்று ஒரு நாயைத் தருமபுத்திரன் சுமந்து சென்று ஆற்றைக் கடப்பித்தான்; அடைக்கலம் என வந்த கயன் என்னுங் கந்தருவனைக் காப்பாற்றத் (தன் ஆருயிர் நண்பனும் தலைவனுமான) திருமாலுடன் அருச்சுனன் போரிட்டான்;

முற்காலத்தில் அடைக்கலம் என்று வந்த புறாவைக் காப்பாற்றச் சிபிச்சக்கரவர்த்தி தன் மெய்யையே அதற்கு ஈடாகத் தந்தான்; முன்னாளில் பெரிய மலைகளின் சிறகை வெட்டிய இந்திரனைக் காப்பாற்றத் ததீசி முனிவன் தன் முதுகெலும்பை (வச்சிராயுதமாக்க) அளித்தான்;

இனிய மொழியும் உயிர்களிடம் இரக்கமும் கொண்டோர் இடையூறு எவர்க்கு நேர்ந்தாலும் தம் இனிய உயிரைவிட்டாவது இரக்கத்துடன் காப்பாற்றியருளுவர் அல்லவா?

தருமன் கதை

தருமன் சுவர்க்கத்தை நாடிப் போகையில், ஒரு நாய் இழிந்த நாற்றத்துடன் பின் தொடர்ந்தது. அங்குக் குறுக்கிட்ட ஆற்றைக் கடக்க முடியாமல் அது வருந்த நாயைத் தருமன் தன் தோளிலே சுமந்து அக்கரையிற் கொண்டு சேர்த்தான்.

அருச்சுனன் கதை:

தன்னைக் கொல்ல வேண்டிச் சக்கரத்தை ஏவிய கண்ணனுக்கு அஞ்சிய கயன் என்னும் கந்தருவன் அருச்சுனனைச் சரணடைந்தான். அவனைக் காப்பதற்காகக் கண்ணனோடு அருச்சுனன் போர் செய்ய நேர்ந்தது, முடிவில் இருவரும் சமாதானம் அடைந்து கந்தருவனை விடுவித்தனர்.

சிபிச்சக்கரவர்த்தி கதை:

ஒரு வேடன் புறா ஒன்றைத் துரத்தி வந்தான். அப் புறா சிபிச்சக்கரவர்த்தியின் மடியில் வந்து விழுந்து விட்டது. அதனைக் காப்பதற்காக வேடன் விரும்பியவாறு தன் மெய்யிலிருந்து ஊனை அரிந்து புறாவின் எடைக்கு ஈடாகும்படி தராசில் வைத்தான். புறா தெய்வத் தன்மை யுடையதாகையால், அவனுடைய மெய்யிலுள்ள ஊனைவிடக் கனத்தது. இறுதியில் அவனே தராசில் நின்றான் அவனுடைய பண்பை ஆராய வந்த வேடனாகிய இந்திரனும் புறாவாகிய அக்கினியும் மகிழ்ந்தனர்.

ததீசியின் கதை:

இந்திரனுடைய வச்சிராயுதம் மிகவும் பழையதாகி முறிந்து விட்டது. அவனுக்குப் புதிய வச்சிராயுதம் வேண்டும் என்று அறிந்த ததீசி முனிவர் தம் முதுகெலும்பை யெடுத்துச் செய்து கொள்ளக் கூறிவிட்டு யோகப் பயிற்சியினாலே உயிரைவிட்டார் அவனும் அவ்வாறே செய்து வெற்றியுற்றான்.

மலைகளின் சிறகரிந்த கதை:

ஒருகாலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தனவாம். அவை பறந்து சென்று நாடு நகரங்களின் மேல் விழுந்து அவற்றை அழித்து வந்தனவாம்; இந்திரன் அவற்றின் கொடுமையை அழிக்க எண்ணிச் சிறகுகளை அரிந்தனனாம்.

கருத்து:

அடைக்கலப் பொருளை ஆதரித்தல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Sep-20, 8:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே