நில் ஓடாதே பகுதி 2

அமுதமா? ‌‌‌ விஷமா ?‌ எது ?

அன்பானவர்களே! வாழ்க்கை என்பது வாழ்வதற்கு. வாழ்ந்து காட்டுவோம் .நில் ஓடாதே என்ற கட்டுரையின் தொடர்ச்சிதான் இது .இக்கட்டுரை ஒரு மன ஆய்வே தவிர வேறு எதுவும் இல்லை.
நமது வாழ்க்கை அற்புதமானது. எப்பிறவி வாய்த்தாலும் இப்பிறவி ஏற்புடையது. மிகவும் சிறப்புடையது .அதனால் தான் அவ்வை மூதாட்டி அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள்.
பிறத்தல் என்பதே அரிது தான். நான் என்னவாக பிறக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. யாராவது மாடாக குதிரையாக ஆமையாக என்று ஏதேனும் ஒன்றாக பிறக்க விரும்புவார்களா ?இல்லையே !பின் ஏன் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள் .மனிதனுக்கும் மற்ற உயிர்களின் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?
மற்ற உயிர்களின் பார்வை உணர்வோடு மட்டுமே சம்மந்தப்பட்டவை .மனிதனின் பார்வை உணர்வோடும் அறிவோடும் சம்பந்தப்பட்டவை.
காது இருக்கிறது கேட்பதற்கு .மற்ற உயிர்களின் கேட்பது என்பது தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் தன் உணவை அறிந்து கொள்ளவும்.
மனிதனின் கேட்கும் திறன் என்பது தன் அறிவை ஆன்மாவை எண்ணங்களை உயர்த்திக் கொள்ள உதவுகிறது.
மற்ற உயிர்களிடமும் வாய் இருக்கிறது .சாப்பிடவும் தன் குரலால் ஒலி எழுப்பவும் .மனிதனின் வாய். அடேயப்பா! தன் பேச்சாற்றலால் உலகை ஆண்டவர்கள் உண்டு. தன் பேச்சாற்றலால் தகைசான்ற இறைவனை அடைந்தவர்கள் உண்டு .வாயிலுள்ள நாக்கு என்பது வெறும் ருசிக்காக மட்டுமல்ல. வாயின் கதவுகளைத் திறந்துகொண்டு வாய்மையான சொற்களை உச்சரித்து சும்மா உட்கார்ந்து பாயில் படுக்காமல் பரமனின் பாத கமலங்களை அடையும் வழியை தரவல்லது இந்த நாக்கு .நல்லவன் தீயவன் என்றும் நாக்கு உனக்கு நற்சான்றிதழ் வாங்கித்தரும்.
இனிமையான இசை .இதமான பேச்சு. இங்கிதமான சொல் இன்னும் எத்தனையோ பல கோடி செயல்களைச் செய்தாலும் மனிதனின் நாக்கு மட்டும் வாய்விட்டுக் கதற முடியும் .
மனிதனின் அறிவு மட்டுமே தான் செய்த செயல்களை பட்டியலிட்டு பகவானிடம் மன்னிப்புக் கோர முடியும்.
எந்த பிறவியும் தன் இரு கைகளால் தன்னை படைத்த இறைவனை கையெடுத்து கும்பிட முடியாது .ஏனெனில் முன் கைகளும் கால்கள் என்றே பெயர் பெற்றன .மனித பிறவிகள் மட்டுமே இந்த பிரபஞ்சத்தை பிரபஞ்சத்தின் மூலத்தை தன் இரு கைகளை குவித்து கும்பிடு போட முடியும் சொல்லிக்கொண்டே போகலாம் அமுதத்தை அள்ளிக்கொண்டு இருக்கலாம்.
ஆனால் மனிதப் பிறவியில் நாம் அமுதத்தையா அள்ளிக் கொண்டு இருக்கிறோம் ?அமுதம் என்று நம் பெரியவர்கள் எதைச் சொன்னார்கள்? என்றும் அழியா நிலை.
தேவர்கள் அமுதம் உண்டார்கள் அதனால் அவர்களுக்கு அழிவு இல்லை . அசுரர்கள் அமுது உண்ணவில்லை அவர்களுக்கு அழிவு உண்டு ஏன்?
எந்த உயிராக இருந்தாலும் பிறந்தால் இறந்தே ஆகவேண்டும் .மனிதனாய் பிறந்து மக்களுக்கு நல்வழி காட்டிய ஸ்ரீராமனும் மகாபாரதப் போர் நடத்திக் காட்டிய ஸ்ரீ கிருஷ்ணனும் உடலை உதிர்த்து விட்டனரே .அப்படியிருக்க அமுதத்தை உண்ட தேவர்களுக்கு அழிவு இல்லை எனில் அழியும் உடலை எப்போதும் நம் இந்துமதம் பேசியது இல்லை.

விழியும் செவியும் வினை பேசும் வாயும் மெய்யும் நாசியும் பழியின்றி இருந்தால் பஞ்சபூதம் நம்மை பணிவாய் பார்க்கும் .பஞ்ச இந்திரியங்களின் வழியேதான் ஆன்மா செயல்படுகிறது. ஆன்மா மட்டுமே அழிவின்றி இருக்கிறது .ஆன்மா மட்டுமே ஆற்றலோடு இருக்கிறது. ஆன்மா மட்டுமே அடுத்த உடலை எடுத்து ப்பிறக்கிறது.
உடலால் செய்யப்படும் எந்த செயலும் அதன் பலனை ஆன்மாவிற்கு தருகிறது .
ஆன்மா தன் அனுபவங்களை உடல் மூலம் பெறுகிறது.
எடுத்து உடலை உதிர்த்து விட்டு வேறு உடலை நாடி போகிறது .காரணம் செய்யும் கர்மாவை காரணம் காட்டுகிறது .
உய்யும் வழியையும் உறுதியாய் சொல்கிறது .
நீ செய்யும் எந்த ஒன்றும் இறைவனின் நோக்கத்திற்கு சாதகமென்றால் அது புண்ணியம் ஆகிறது.
நீ செய்யும் எந்த ஒன்றும் இறைவனின் நோக்கத்திற்கு பாதகம் என்றால் அது பாவம் ஆகிறது.
புண்ணியங்கள் பல செய்து கடவுள் கண்ணை திறக்கவில்லை என்பவன் பாவங்கள் எதுவென்றே தெரியாமல் பரிதவிக்கும் நிலையில் இருக்கிறான்என்பது புரிகிறது.
எது பாவம்? எது புண்ணியம்?

புலிக்கு மானும் பூனைக்கு எலியும் பாம்பிற்கு தவளையும் உணவாகிறபோது அது பாவம் இல்லையா? பாவம் எனில் அதற்கு ருசியான உணவே அதுவென்று ஆன பின்பு அது பாவமாகுமா?
மிருகத்தின் தர்மம் வேறு .மனிதனின் தர்மம் வேறல்லவா .ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை அனைத்தும் உணர்வால் வாழ்கிற போது ஆறறிவு படைத்த மனிதன் அறிவாலும் வாழ வேண்டாமா?
மிருக தர்மத்தை மனித தர்மம் ஏற்குமா ?ஏற்கலாமா? உயிர் தத்துவத்தை உயிர் மூலத்தை உணருமா மிருகங்கள் .உணர்வது மனிதனின் அறிவல்லவா? மனிதன் உணர்ந்தால் உணர்ந்து புரிந்தால் எது பாவம்? எது புண்ணியம்? என புரியாமல் போகுமா ?வாழ்வுதான் வீணாகுமா?
இறைவனின் நோக்கத்திற்கு சாதகமாக இருப்பது புண்ணியம் பாதகமாக இருப்பது பாவம் எனில் எது இறைவனின் நோக்கம்?
ஆம் மனதுக்குள் இந்த கேள்வி எழுகிறது கேள்வி எழுப்புவோம். பதில் கிடைக்கும் .புரிந்துகொள்வோம்.
உன்னை படைத்தது யார் ?
இறைவன் .
இறைவன் உயிரைப்படைத்தானா? இல்லை உடம்பை படைத்தானா ?இரண்டையும் தான் .
ஒருவன் ஒன்றை படைத்தால் அந்த ஒன்றை அவன் அழிக்க முடியுமா? புரியவில்லை.
நீ ஒரு வீட்டை ஒரு பானையை அல்லது ஏதோ ஒன்றை படைக்கிறாய் அதை உன்னால் அழிக்க முடியுமா ?
முடியும் .
உயிர் அழியுமா அழியாதா சரியாக சொல் .
அழியாது.
உயிரை இறைவன் படைத்து இருந்தால் அந்த உயிரை இறைவனால் அழிக்க முடியுமா ?முடியாதா?
முடியும்.
அப்படியானால் உயிர் அழியாது என்பது?
இறைவன் படைக்கவில்லை என்று பொருளாகிறது .உடலழியும் .
அப்படி எனில் அது இறைவனால் படைக்கப்பட்டது என ஒப்புக் கொள்ளலாமா?
இல்லை அது இயற்கையால் படைக்கப்பட்டது என நாம் ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?
தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் இயற்கையே இறைவன் .இறைவனின்றி இயற்கை இல்லை. எதிலும் இறைவனைக் காண்பவனே ஞானி.
இதையே பாரதி
காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா.
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்கிறானே ஏன்?
நிறங்களும் மரங்களும் இறைவனே.இடியின் ஓசையும் மின்னலின் ஒளியும் இறைவனே. கீதம் என பறவையின் இசை குரலும் இறைவனே.ஏன் சுடும் தீ கூட உன்னை தொடும் இன்பம் என்கின்ற பக்குவம் எந்த மனிதனுக்கு வருகிறதோ அவனே ஞானி ஆகிறான்.
படைக்கப்பட்ட உடல் அழிகிறது .உயிர் யாராலும் அழிக்க முடியாது எனில் அது யாராலும் படைக்கப்படவில்லை என தெளிவாகிறது. அப்படியானால் உயிர் எங்கிருந்து வருகிறது? அது அனாதி. மூலம் தெரியாது முடிவும் புரியாது. அது எப்படி?
காற்று எங்கிருந்து உருவானது? பூமி எப்படி உருவானது ?மற்ற கிரகங்கள் எப்படி உருவாகின? அது சூரியனிலிருந்து பிரிந்து வந்ததாக விஞ்ஞானம் சொல்லுகிறது .அதேபோலத்தான் தானாக இயற்கையாக தோன்றியது .அப்படி எனில் அது அனாதி. அந்த உயிர் ஆணவமலம் கன்மம் மாயை என்ற மும்மலங்களில் மயங்கி கிடக்கிறது .உயிர் மயங்கிக் கிடப்பதால் இறைவன் ஏன் படைக்க வேண்டும்?
மீண்டும் சொல்லுகிறேன் உயிரைப் படைக்க வில்லை. அந்த உயிருக்கான உடலை படைக்கிறான்.
சரி அவன் யார் ?எதற்கு படைக்க வேண்டும்?
அதனால் இறைவனுக்கு என்னபயன் ?இதைத்தான் இறைவனின் திருவிளையாடல் என்கிறார்களா ?இறைவன் என்பவனின் கல்யாண குணங்கள் தெரியுமா ?
இதோ இறைவனைப் பற்றி சுவாமி சூரியானந்தர் சொல்லுவதை கேளுங்கள் .
அவன் பெரும் கருணை மிக்கவன் .இரக்கமுள்ளவன் .இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டவன் .சிறந்த குணம் உடையவன் .மிக மோசமான குணம் கொண்டவன். இதில் அவனுக்கு எந்த குணமும் இல்லாதவன் .எல்லையற்றவன்.முடிவில்லாதவன். வரம்பும் இல்லாதவன். அவனுக்கு எதுவும் சாத்தியமே. பாசம் பற்று சுகம் துக்கம் எதுவும் இல்லாதவன். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவனாக இருப்பவன். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவன் ஆக இருப்பது எப்படி ?புரியவில்லை அல்லவா?
நெருப்பு சுடுகிறது .நெருப்பு அனைத்தையும் பஸ்பமாக்கி விடுகிறது.ஆனால் நெருப்பு அதற்கு சுடுவதில்லை. நெருப்பு தன்னையே பஸ்மம் ஆக்குவது இல்லை .அதுபோலத்தான்.
சரி அப்படிப்பட்ட இறைவன் திருவிளையாடல் புரிவதால் அவனுக்கு என்ன லாபம்? எதுவும் இல்லை .அப்படியானால்?
சாலையில் நீ நடந்து போய்க்கொண்டு இருக்கிறாய் .ஒரு மனிதன் மயங்கி கிடக்கிறான். நீ என்ன செய்வாய் ?அவனுக்கு மயக்கத்தை தெளிய வைக்க முயற்சி செய்வேன். அவனை விழிப்படைய செய்து மயக்க நிலையிலிருந்து மீட்டு எடுப்பேன்.
ஏன்?
அவன் மயங்கிய நிலையில் இருக்கும்போது செயல்பட முடியாது .அதனால் உனக்கு என்ன?
உன்னை அவன் அழைத்தானா? அவனால் உனக்கு ஏதாவது ஆக வேண்டுமா ?அவன் மயங்கி கிடப்பதில் ஆக வேண்டியது என்ன கிடக்கிறது?
இது என்ன கொடுமை? ஒரு உயிர் செயல்படாமல் மயங்கி கிடக்கிறது .அவன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். குடும்பம் குழந்தைகளை கவனிக்க வேண்டும் .அப்படியே விட்டால் அவன் எப்படித்தான் அன்றாட வாழ்க்கையில் செயல்பட முடியும் ?இதை கூட செய்ய முடியாத மனிதாபிமானமற்ற வனாக என்னால் எப்படி வாழ முடியும்.
கோபப்படாதே மனிதா!
சிறு கருணை உள்ள நீ ஒரு உயிர் செயல்பட வேண்டும் என்று மயக்கத்தில் இருந்து விடுவிக்க முயல்கிறாய்.இதையேதான் இறைவன் செய்கிறான் .
ஆணவ மலம் கன்மம் மாய மலம் என்ற மும்மலங்களில் மயங்கி கிடக்கிற உயிர் செயல்படாமல் போனால் அந்த மூன்றும் என்னவென்றே தெரியாமல் அப்படியே மயங்கி கிடக்கும் .எந்த ஒன்றும் செயல்படவேண்டும் செயல்படாமல் சாக்கடை புழுபோல நெளிந்துகொண்டே இருந்து பயனில்லை .ஆகவே இறைவன் அந்த உயிருக்கு உடலை கொடுக்கிறான். அந்த உடலோடு அந்த உயிர் இந்த உலகத்தில் பிறந்து அனுபவித்து ஆணவம் கன்மம் மாயை என்பதை புரிந்து அதிலிருந்து விலகி தன்னை உணர்கின்ற ஞானம் பெற்று அறிவால் செயல்படும் அந்த அனுபவம் தான் மனிதன் இறைவனாக மாறுவதற்கான ஒரு வழி. அனுபவமே இறைவன் என்பதை இப்போது புரிந்து கொள்கிறான் .இந்த உயிர் உடலோடு செயல்பட்டு உடல் மூலம் அனுபவம் பெற்று மும் மலத்தையும் புரிந்துகொண்டு மயக்கத்திலிருந்து விடுபட்டு தெளிவான பற்றற்ற நிலையில் ஞானம் பெறுகிற போது இறைவனின் நோக்கம் நிறைவேறுகிறது.
இங்கு பாவபுண்ணியம் என்பதற்கு என்ன சம்பந்தம்?
சொல்கிறேன் ஒரு உயிருக்கு உடலை ஏன் படைத்தான் ? மும்மலத்தை புரிந்து உணர்ந்து தெளிந்து விலகி ஞானம் பெற.
அந்த செயல்பாட்டிற்கு நீ சாதகமாக இருந்தால் அது புண்ணியம் .அதற்கு பாதகமாக இருந்தால் அது பாவம்.
பாவம் என்பதும் புண்ணியம் என்பதும் பிறர் தருவதில்லை. உன் செய்கையே உன் கரும பலனை உனக்கு பாவமாகவும் புண்ணியம் ஆகவும் மாற்றுகிறது.
இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து உயிர்களும் வாழத் தான் வந்திருக்கின்றன. அந்த வாழ்க்கைக்கு துணையாக கருணையோடு இருப்பதே ஆறறிவு படைத்த மனிதனின் கடமை .அதற்கு துணையாக இருந்தால் புண்ணியம் .அதற்கு எதிராக செயல்பட்டால் அது பாவம். இதில் எந்தெந்த காரணங்களை புரிதல்களை புகுத்தி பார்ப்பதும் விலக்கி ப்பார்ப்பதும் அவரவர் அறிவை ப்பொறுத்ததே .முதலில் சொன்னது போல் நீ செய்யும் எந்த ஒன்றும் இறைவனின் நோக்கத்திற்கு சாதகம் என்றால் அது புண்ணியம் ஆகிறது. நீ செய்யும் எந்த ஒன்றும் இறைவனின் நோக்கத்திற்கு பாதகம் என்றால் அது பாவமாகிறத. அதுவே விஷமாகிறது.
அமுதமும் விஷமும் நம் மனதில் தான் இருக்கிறது.அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்றாள். மனிதனாகப் பிறந்தவன் அமுதமாக வாழ போகிறானா ?அல்லது விஷம் பெற்று வாழ போகிறானா என்பதை அவனது அறிவு ஞானத்தை பொறுத்தே அமைகிறது.
ஏனெனில் மனிதனுக்கு இருப்பது ஆறறிவு .அவனிடம் மட்டுமே மனிதாபிமானமும் கருணையும் உள்ளது. ஆகவே தான் மனிதன் உள்ளத்தில் இறைவன் இருக்கிறான் என்று சொல்லுகிறார்கள். எப்பொழுது மனிதன் இறைவனை போல கருணையோடு வாழ பார்க்கிறானோ அப்போது அழிவின்றி தேவராக இருக்கிறான். அவனே அமுதம் உண்டவனாகவே மாறுகிறான்.
நன்றி

எழுதியவர் : சு.இராமஜோதி (26-Sep-20, 6:32 am)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 249

சிறந்த கட்டுரைகள்

மேலே