குமரேச சதகம் – தக்கவையும் தகாதவையும் - பாடல் 98

பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்
பருகுநீர் சேரின் என்னாம்
பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்
படிகமணி கோக்கின்என்னாம்

மேலினிய மன்னர்பால் யானைசேர் வதுகனதை
மேடமது சேரின்என்னாம்
மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை
வெண்கல் அழுத்தின்என்னாம்

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்
வளைகிழவர் சேரின்என்னாம்
மருவுநல் லோரிடம் பெரியோர் வரின்பிரியம்
வருகயவர் சேரின்என்னாம்

மாலிகை தரித்தமணி மார்பனே தெய்வானை
வள்ளிக்கு வாய்த்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 98

- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மணிமாலையணிந்த மார்பனே! தெய்வயானைக்கும் வள்ளிக்குங் கணவனானவனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

பாலுடன் தேன் கலந்தால் இனிமை மிகும்; குடிக்கும் நீர் பாலுடன் கலந்தால் இனிமை தருமா? பவளத்தின் இடையிலே முத்தை அமைத்தால் விளக்கமாகும்; படிகமணியைத் தொடுத்தால் விளக்கமுறுமா?

மேன்மையுடைய நல்ல அரசரிடம் யானை வருவது பெருமை; ஆடு வருவது பெருமையா? உயர்ந்த பொன்னில் ஒன்பதுவகை மணிகள் பதிப்பது சிறப்பு; வெள்ளைக் கல்லைப் பதிப்பது சிறப்பாகுமா?

பருவ மங்கையருடன் இளைஞர்கள் கூடுவது நன்மை; முதுகு கூனிய முதியவர்கள் கூடுவது நன்மையா? நற்பண்புடையோரிடம் நல்லோர் சேர்வதே விருப்பமாகும்; தீயவர் கலப்பது விரும்பத்தக்கதா?

கருத்து:

ஒத்த பண்புடைய பொருள்களுக்கே பொருத்தம் உண்டாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-20, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே