குமுறுகின்ற கூழ் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

வீரசென்னன் என்பவனின் நாட்டிலே ஒரு வடுகன் வீட்டிலே உண்ட கூழினைப்பற்றிக் கவிஞர் சொல்லிய செய்யுள் இது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

ஏழாளை யடித்தபுலி தனையடித்தான் வீரசென்னன்
..என்றே காட்டில்
வாழாமற் சிறுபுலிகள் ஈப்புலியோ(டு) எலிப்புலியாம்
..வடிவங் கொண்டு
பாழாகிக் காடெல்லாம் பரிதவிக்க வடுகரடுப்
..படியில் வந்து
கூழாகி வயிற்றினிற்போம் பொழுதுகுணம் போகாமற்
..குமுறுந் தானே! 191

- கவி காளமேகம்

பொருளுரை:

’ஏழு ஆட்களை அடித்துவிட்ட புலியினை வீரசென்னன் என்பவன் அடித்துவிட்டான் என்று கேட்டுப் பயந்து, தாமும் காட்டிலே வாழாமல், சிறிய புலியளெல்லாம் ஈப்புலியாகவும் எலிப்புலியாகவும் வடிவங் கொண்டு வந்து, காடெல்லாம் பாழ்பட்டுப் போய்ப் பரிதவிக்க, வடுகர்களின் அடுப்படியிலே வந்து கூழ் வடிவ மாயின’.

என் வயிற்றினில் போகும் பொழுது மட்டும் தம்குணம் முற்றவும் போகாமல் அவை இரைச்சலிடுகின்றன (குமுறுகின்றன).

கூழ் உண்டதனால் வயிறு இரைச்சலிடக் கவிஞர் அதனை இப்படிக் கூறுகின்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Sep-20, 5:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

சிறந்த கட்டுரைகள்

மேலே