இழிதுயரில் ஆழ்த்தி ஈனப்படுத்தும் அழிநசை நீக்கி அகல் - காமம், தருமதீபிகை 643

நேரிசை வெண்பா

சிற்றின்ப ஆசை சிறியர் எனத்தேய்த்து
மற்றின்பம் காணாமல் மாய்த்துமே - முற்றும்
இழிதுயரில் ஆழ்த்தி நேர்ஈனப் படுத்தும்
அழிநசை நீக்கி அகல். 643

- காமம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிற்றின்ப ஆசை சிறுமையில் ஆழ்த்திப் பேரின்பத்தை அடைய ஒட்டாமல் பெருங்கேடுகள் செய்யும், அந்த ஈன இச்சை ஒழித்து ஞான நிலையில் உயர்ந்து நலம்பல பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகில் மனிதன் படுகிற பாடுகள் எல்லாம் அருந்தல் பொருந்தல்களை நோக்கியே. பல சிறுமைகளுக்கு இடையே ஏதோ சிறிது பொறியின்பங்களை நுகர்தலால் அது சிற்றின்பம் என நேர்ந்தது. தேக போகங்களை யெல்லாம் பொதுவாகக் குறித்து வரினும் பெண்ணின் போகத்தையே இது சிறப்பாகச் சுட்டியுள்ளது. சிற்றின்பப் பிரியன் என ஒருவனைக் குறித்துச் சொன்னால் அவன் கடுங்காமி, நெடுந்தூர்த்தன் என உலகம் நினைந்து கொள்ளுகிறது.

சிற்றின்ப நிலையில் அழுந்திக் கிடப்பவன் பேரின்ப நலனை இழந்தவன் ஆகின்றான். பொறிபுலன்களை நெறியே அடக்கிப் புனித நிலையில் உயர்ந்த மகான்களே பேரின்பத்தை அடைந்து கொள்கின்றனர். ஊன உடலோடு ஒட்டி ஈன இச்சையால் எழுவதாதலால் முன்னது சிறுமையாய் நின்றது. பரிசுத்தமான ஆன்ம போகமாய் மேன்மை சுரந்து வருதலால் பின்னது பேரின்பம் எனப் பெருமை மிகப் பெற்றது.

தெளிந்த மெய்யுணர்வுடையவர் இழிந்ததை இகழ்ந்து விடுத்து உயர்ந்த பேரின்ப நிலையை விழைந்து விரைகின்றனர்.

தரவு கொச்சகக் கலிப்பா

தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறுங் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 3 திருக்கோத்தும்பி 10 திருவாசகம்

அற்பமான சிற்றின்பத்தில் வீழாதே, என்றும் எவ்வழியும் ஆனந்த மயமான இறைவனுடைய பேரின்ப போகத்தையே தோய்ந்து மகிழுக எனத் தம் மனத்தை நோக்கி மாணிக்க வாசகர் இவ்வாறு கூறியிருக்கிறார், தெளிந்த ஞானசீலர் இளிந்ததை இகந்து விடுத்து விழுமிய நிலையை விழைந்து கொள்கின்றனர்.

கட்டளைக் கலித்துறை

பழுதுண்டு பாவையர் மோக விகாரப் பரவையிடை
விழுகின்ற பாவிக்கும் தன்தாட் புணையை வியந்தளித்தான்
தொழுகின்ற அன்பர் உளம்களி கூரத் துலங்குமன்றுள்
எழுகின்ற ஆனந்தக் கூத்தனென் கண்மணி என்ன(ப்)பனே. - தாயுமானவர்

சிற்றின்பத்தில் வீழ்ந்து இழிந்து போகாமல் பேரின்ப மூர்த்தியான பெருமான் என்னைக் காத்தருளினான் எனத் தாயுமானவர் இங்ஙனம் போற்றியிருக்கிறார். மங்கையரின் மையல் நீங்கினவரே திவ்விய நிலைகளை அடையவுரியவர் என்னும் குறிப்பை இதில் கூர்ந்து ஓர்ந்து கொள்ளுகிறோம்.

கட்டளைக் கலித்துறை

பிறந்துமண் மீதில் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்துசிற் றின்பத்தின் மேல்மய லாகிப்புன் மாதருக்குட்
பிறந்துழன் றேதடு மாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்(து)
இறந்திட வோபணித் தாய்இறை வாகச்சி ஏகம்பனே. 1

காதென்று மூக்கென்று கண்என்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென்றெண் ணாமல் சுகமென்று நாடுமித் துற்புத்தியை
ஏதென்றெ டுத்துரைப் பேன்இறை வாகச்சி ஏகம்பனே! 2 – பட்டினத்தார்

சிற்றின்பக்தின் இழிவுகளை வெளிப்படுத்தி அதனைத் துறந்து உய்யவேண்டும் எனப் பட்டினத்தார் இவ்வாறு பாடியிருக்கிறார் பெரிய துறவி ஆதலால் பெண் போகத்தை இங்ஙனம் எள்ளி இகழ்ந்துள்ளார் என்று எண்ணலாகாது. உண்மை நிலையை உள்ளம் பரிந்து உணர்த்தியுள்ளார்.

கலிவிருத்தம்

நூலின் நேரிடை யார்திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னொடும் கூடுவ(து) இல்லையான்
ஆலி யாவழை யாஅரங்கா என்று
மாலெ ழுந்தொழிந் தேனென்தன் மாலுக்கே. 668

மார னார்வரி வெஞ்சிலைக்(கு) ஆட்செய்யும்
பாரி னாரொடும் கூடுவ(து) இல்லையான்;
ஆர மார்வன் அரங்கன் அனந்தன்நல்
நார ணன்நர காந்தகன் பித்தகனே. 669 – குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி, முதல் ஆயிரம்

பெண் மையல் மண்டிக் காமனுக்கு அடிமைகளாய் உலக மக்கள் கடைப்பட்டுள்ளனர். இழிந்த இந்த மாயமோகிகளோடு நான் யாதும் சேரேன், பரமனையே கூடிப் பரவசமாயுள்ளேன் என்று குலசேகர ஆழ்வார் இங்ஙனம் கூறியுள்ளார். தமக்கு உரிமையாய் அமைந்துள்ள அரசபோகங்களை யெல்லாம் அடியோடு வெறுத்துப் பரம நீர்மையில் இந்த அரசர் பிரான் திளைத்துள்ளமை இங்கே சிந்தித்து உணரத்தக்கது. நிலையான அதிசய இன்பத்தில் தோய்ந்தவர் புலையான புன்போகங்களை அருவருத்து வெறுத்து அகன்று போகின்றார்.

நேரிசை வெண்பா

சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில். 88 நீதிநெறி விளக்கம்

பேரின்பம் ஆகிய அமுதக்கடலில் திளைப்பவர் சிற்றின்பமாகிய பாழ்ஞ்சேற்றில் வீழார் என இது விளக்கியுள்ளது.

நித்திய அநித்தியங்களையும் உயர்வு இழிவுகளையும் உய்த்துணர்ந்து தெளிந்து கொள்ளும் ஆற்றல் மனிதனிடம் அமைந்திருக்கிறது. வித்தகமுடைய அந்த விவேகத்தால் மோக மயக்கங்களை வென்று மேலான கதியை அடைந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பெறவில்லையானால் எவ்வாற்றானும் உய்தியின்றி யாண்டும் அல்லல் அவலங்களே தோய்ந்து அவன் அலமந்து உழலுகின்றான்; பிறவிகளிலும் பரிதாபங்களே விரிகின்றன. அரிய வசதிகள் வாய்த்தும் உரிய பயனை எய்தாமல் ஒழிபவர் பெரிய பேதைகளாய்ப் பிழைபட்டுள்ளனர்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தெரிவுறு வயதில் வந்த புந்தியால் சித்தம் தன்னைப்
பரிகரி யாது விட்டால் பரிகரிப் பதுமற்(று) எந்நாள்?
விரிவிடம் விடம தன்று; விடயமே விடமாம்; துன்பம்
புரிவிடம் கொல்வ(து) ஓர்மெய் புலன்மறு பிறப்பும் கொல்லும். - ஞான வாசிட்டம்

தெளிந்த அறிவை அடைந்துள்ள மனிதன் இழிந்த இச்சைகளை அடக்கித் தகுந்த பருவத்தில் உயர்ந்து கொள்ளவில்லையானால் பின்பு உய்தி பெற முடியாது; விடய போகங்கள் விடத்தினும் கொடியன; ஒரு பிறவியில் பற்றிய நசை பல பிறவிகளிலும் தொடர்ந்து படுதுயரங்களை விளைக்கும் என இது உணர்த்தியுள்ளது.

விடயமே விடமாம் என்றதனால் அதன் கொடுமை தெரிய வந்தது. உயிர்க்கேடு புரிவதை உணர்ந்து விலக வேண்டும்.

பொறி நுகர்ச்சி மனிதனை வெறியனாக்கி விடுவதால் அறிவு கேடனாய் அழிவடைய நேர்கின்றான். காம தாபம் ஏம வேதனையாய் இடர் புரிந்து படர் படர்ந்து வருவதை அதனையுடையவர் நிலைகள் யாண்டும் உணர்த்தியுள்ளன.

The appetite may sicken, so die. - Shakespeare

’காம தாபம் நோயாய் வளர்ந்து கொல்லும்’ என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது.

இளிவு நிலையில் இழியாமல் என்றும்
தெளிவில் உயர்க தெளிந்து.

’அழி நசை நீங்கி அகல்’ இழிவான சிற்றின்ப இச்சைகளை ஒழித்து வெற்றி வீரனாய் விளங்கி மேலான கதியை அடைந்து கொள்ளுக என இது விளக்கியுள்ளது. சிறுமை நீங்கிப் பெருமையில் ஓங்குக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-20, 8:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே