உள்ளம் கரவாய் ஒழுகி வாழ்தல் அவம் - கரவு, தருமதீபிகை 653

நேரிசை வெண்பா

உள்ளம் கரவாய் ஒழுகி வரினவனைக்
குள்ளநரி என்றுலகம் கூறுமால் - எள்ளலிதில்
எவ்வள(வு) ஏறியுள(து) ஈனம் தெரியாமல்
அவ்வளவே வாழ்தல் அவம். 653

- கரவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளத்தில் கரவுடையனாய் ஒழுகி வரின் அந்த மனிதனைக் குள்ள நரி என்று உலகம் இகழ்ந்து வரும்; எள்ளல், இழிவுகள் பல ஏறியுள்ள இந்த ஈனம் தெரியாமல் இறுமாந்து வாழ்ந்து வருவது பெரிய மானக்கேடாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தன்னுடைய அந்தரங்க நிலைக்குத் தக்கபடியே எந்த மனிதனும் மதிக்கப்படுகின்றான். வெளி வேடத்தால் நல்லவன் போல் நடித்து வரினும் உள்ளக் கரவு எப்படியும் உலகிற்குத் தெரிந்து விடுவதால் அவனுடைய பகட்டுகள் எல்லாம் பழிப்புக்கே இடமாய்ப் படுதுயர் புரிகின்றன.

உள்ளத்தில் நேர்மையின்றி உரை செயல்களில் பாசாங்குகள் செய்து வருகிற வஞ்சகனைக் குள்ளநரி என்று உலகம் சொல்லிவருகிறது. சரி மிகவும் தந்திரமுடைய பிராணியாதலால் கபட சிந்தனைகளோடு நடித்து வருபவனை நரி என்பது வழக்கமாய் வந்தது. எள்ளல் இழிவுகள் தெரிய குள்ளநரி என்றது.

நேர்மையுடையவன் யாண்டும் ஆண்மையாளனாய் நிலவி நிற்பானாதலால் அவன் சிங்கம் என எங்கும் சீர் பெற்று நிற்கின்றான். வஞ்ச நெஞ்சன் எவ்வழியும் அஞ்சி ஒடுங்கிக் கரவே செய்து வருவான்; ஆகவே அவன் குழிநரி என இழிவடைய நேர்ந்தான். உயர்ந்த மனித உருவில் வந்தும் இழிந்த இயல்புகளால் பலர் ஈனமடைந்து ஊனமாய்க் கழிந்துள்ளனர்.

தங்களுடைய தாழ்வு நிலையை உணர்ந்து கொள்ளாமல் பெரிய தந்திரசாலிகளாய் வாழ்ந்து வருவதாக அவர் சிந்தை களித்து வருவது மேலோர்க்குச் சிரிப்பை விளைத்து வருகிறது.

Ye brutish among the people; and ye fools, when will be wise. - Bible

"ஓ மனிதர்களுள் மிருகங்களே! நீங்கள் முழுமூடர்கள்; உங்களுக்கு எப்பொழுது நல்ல புத்தி வரும்?' என ஒரு பெரியவர் கரவுடையாரை நோக்கி இவ்வாறு மறுகியிருக்கிறார்.

வஞ்சமும், சூதும் எங்கணும் பெருகியுள்ளமையால் மனித உலகம் விலங்கின் காடாய் இந்நாள் இலங்கியுள்ளது. இந்நாட்டு வஞ்சகம் மிகவும் அஞ்சத்தக்கது. உள்ளத்தில் கள்ளங்கள் நிறைந்துள்ளன; வெளியே பெரியோர்களைப் போல் உரைகளாடி அரிய பதவிகளில் உலாவி வருகின்றனர். அவருடைய வரவும் போக்கும் உலக உள்ளங்களைக் கொதிக்கச் செய்கின்றன.

எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

குள்ளநரித் தனங்களெல்லாம் குடிகொண்ட நெஞ்சுடையார்
கொடுமை யாவும்
மெள்ளமறைத்(து) இனியவர்போல் வெளிவேடம் பூண்டுலகில்
மேன்மை காணத்
துள்ளியெழுந்(து) ஓடுகின்றார், சூழ்ச்சியுடன் பேசுகின்றார்,
துள்ளல் எல்லாம்
கள்ளமனக் குகையிருக்கும் கடவுள்கண்டு நகைக்கின்றார்
கதிதான் என்னே; 1

வாயெல்லாம் பொய்யுரைகள் வழியெல்லாம் அழிசெயல்கள்
வஞ்சம் சூது
போயெல்லாம் பெருகியுள்ள புலைநெஞ்சம் நிலையிங்ஙன்
பொருந்தி நின்றும்
தாயெல்லாம் போலினிய தயவுடையார் எனப்பேசித்
தானம் காண்பார்
பேயெல்லாம் இவர்போலப் பெருங்கேடு செய்யுமோ
பேசுங் காலே. 2 இந்தியத் தாய்நிலை

நெஞ்சக் கரவுடையார் இந்நாட்டில் செய்துவரும் வஞ்சக் கொடுமைகளை நினைந்து பரிந்து நெஞ்சு நொந்து பாடிய பாடல்கள் இவை. உள்ளத்தில் தகுதியில்லாமல் உலகத்தில் பெரிய பதவிகளை அடைய அவாவி அலைவது மிகவும். எள்ளத்தக்கது.

நேரிசை வெண்பா

உள்ளத்தே வஞ்சம் உறவைத்(து) உயர்ந்தார்போல்
கள்ளத்தே காட்டும் கரவுடையீர்! - உள்ளிடத்தே
நீச மலத்தை நிரப்பிப் புறக்கோலம்
பூசினால் என்னாகிப் போம்? - கவிராஜ பண்டிதர்

இழிந்த வஞ்சத்தை உள்ளத்தில் மறைத்து வைத்து உயர்ந்தவர் போல் வெளியே நடித்துத் திரியும் பழியுடையாரை நோக்கி அறிவு கூறியுள்ள இது ஈண்டு விழி திறந்து நோக்கவுரியது. நீச மலத்தை உள்ளே நிரப்பி மறைத்துப் புறத்தே கோலம் செய்து காட்டுவார் போல் அவர் சாலம் செய்து நீட்டுகிறார். நீட்டினும் அவரது ஈன நிலையை உலகம் உணர்ந்து அருவருத்து வருகிறது.

’ஈனம் தெரியாமல் வாழ்தல் அவம்’ தனது மனக் கோட்டத்தால் ஆன்ம நிலை அவலமடைந்திருத்தலை அறியாமல் கவலையின்றிக் களி கூர்ந்து வருகிற அந்த மனிதன் வாழ்வு மிகவும் இரங்கத் தக்கதாம். உயிரை நாசப்படுத்தி உடலை வளர்த்து உள்ளம் செருக்கித் திரிவது முழுமடமையாயுள்ளது. மூடம் ஒழிவது பீடை கழிவதாம்.

வஞ்சமும் சூதும் வகையாய்ப் புரிந்து பெரிய இராசதந்திரி என வெளியே பேர் பெற்று நின்றாலும் உள்ளே கள்ளமுள்ளவர் எள்ளலடைந்து இழிந்தே போதலால் அவரது நிலையும் புலையும் நேரே தெரியலாகும்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே ககும். 271 கூடா ஒழுக்கம்

வஞ்ச நெஞ்சன் புரிந்து வரும் கள்ளச் செயலை நோக்கிப் பூதங்கள் ஐந்தும் உள்ளே நின்று எள்ளிச் சிரிக்கும் என்னும் இது உள்ளி உணரவுரியது. பிறரை வஞ்சித்து விட்டோம் என்று நெஞ்சம் களிப்பவன் தனக்கு நேரும் பழியையும், அழிவையும் பாராமல் ஒழிவது பாச மயக்கமாயுள்ளது.

அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

இவ்வுலகோர் தம்மைவென்று பொருள்கவர்தற்(கு) இவர்இயற்றும்
இடம்பா சாரம்
அவ்வுலகும் சென்றிடுமோ என்றுநகும் பூதங்கள்
ஐந்தும் உள்ளே
கவ்வையுறும் உட்கவடு கண்டுநமன் தமர்உமரைக்
கணத்தில் ஆவி
தெவ்வரெனக் கொடுபோயத் தீநரகில் விடுத்துமென்று
சிந்திப் பாரால். - பிரபோதசந்திரோதயம்

வஞ்சக் கரவுடையார் நரகமே தஞ்சமாய் நைந்து கிடப்பர் என இது உணர்த்தியுள்ளது. நெஞ்சுள் வஞ்சனையுடையவர் வெளியே நல்லவர்போல் கரவாய் நடித்து வருதலால் பலர் அவரை நம்பி மோசம் போகின்றார்; அந்த மோசம்.அவரை நாசமடையச் செய்து நீசம் புரிகின்றது.

வஞ் சகர் மிகுந்த பொழுது அந்த நாடு நஞ்சுதோய்ந்த ஏரி போல் நவையுறுகின்றது; எனவே அந்நாட்டு வாழ்வு கேட்டையே விளைத்தலால் அது அஞ்சத்தக்கதாய் அவலமடைகின்றது.

எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் .
வருந்தியுறு கண்வெயிலால் மாழாந்(து) அந்தோ!
தஞ்சமென்பார் இன்றியொரு பாவி நானே:
தனித்தருள்நீர்த் தாகமுற்றேன். தயைசெய் வாயோ?
செஞ்சொல்மறை முடிவிளக்கே உண்மை ஞானத்
தேறலே முத்தொழில்செய் தேவர் தேவே
சஞ்சலம்நீத்(து) அருள்தணிகை மணியே சீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே! 14 - 009. ஜீவசாட்சி மாலை, ஐந்தாம் திருமுறை, திருவருட்பா

இறைவனை நோக்கி இராமலிங்கர் இவ்வாறு மறுகியிருக்கிறார் வஞ்சகர் நிறைந்த கானம் என இந்நாட்டை அவர் நொந்து கூறியிருப்பது நுனித்து நோக்கத் தக்கது.

உள்ளத்தைக் கள்ளமாக்கி எள்ளலடைந்து இழிந்து போகாதே; நல்ல நேர்மையை நயந்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Sep-20, 8:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே